ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வில்  இலங்கைப் பிரதிநிதிகள் பங்கேற்பு

 ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வில்  இலங்கைப் பிரதிநிதிகள் பங்கேற்பு

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில், நீதி அமைச்சர் அலி சப்ரி, உற்பத்தி வழங்கல் மற்றும்  மருந்துகள் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திரு. நெரின் புள்ளே ஆகியோரை உள்ளடக்கிய தூதுக்குழுவொன்று கொழும்பிலிருந்து கலந்துகொண்டது.

மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரானது, 2021 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தின்படி, ஐ.நா. மனித உரிமைகள்  ஆணையாளரால் இலங்கை தொடர்பான எழுத்துமூலமான புதிய தகவல்களை சபையில் சமர்ப்பிக்கும் முகமாக நடைபெற்றதுடன், குறித்த தீர்மானம் சம்மந்தப்பட்ட நாடான இலங்கையின் அனுமதியின்றி, 47 பேரவை உறுப்பினர்களில் 22 பேர் மட்டுமே ஆதரவாக வாக்களித்தமைக்கு அமைய நிறைவேற்றப்பட்டிருந்தது.

எதிர்காலத்தில் வழக்குத் தொடரும் நோக்கத்துடன் குற்றச் சான்றுகளைச் சேகரிக்கும் பாத்திரத்தை உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஏற்க வேண்டும் என்பதற்கான மிகவும் ஆபத்தான முன்னுதாரணமாக இந்தத் தீர்மானத்தின் செயற்பாட்டுப் பந்தி 6 அமைந்திருந்தது. 46/1 தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் கூட, அதன் அடிப்படைக் குறைபாடுள்ள  தன்மையின் காரணமாக, பொதுச் சபை தீர்மானம் 48/141 இன் ஸ்தாபக ஆவணத்துடன் ஒத்துப்போகாத ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்தப் புதிய பணி குறித்து தமது 'வாக்கு விளக்கத்தில்' ஆட்சேபணைகளை முன்வைத்துள்ளன.

தீர்மானம் 46/1 இல் உள்ள ஓ.பி.6 ஆனது, 'ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பணியாக சான்றை சேகரிக்க, ஒருங்கிணைக்க, பகுப்பாய்வு மற்றும் பாதுகாக்கும் திறனை வலுப்படுத்த' மட்டுமே முயன்றுள்ள போதிலும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம்  இப்போது 46/1 தீர்மானத்தை மேற்கோள் காட்டி 'இலங்கையின் பொறுப்புக்கூறல் திட்டத்தை' நிறுவியுள்ளது. இவ்வாறு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்குள் உள்ளகத் திறன் விருத்திப் பயிற்சியாக மட்டுமே இருக்க வேண்டிய செயலானது, தன்னிச்சையாக ஒரு திட்டத்தின் நிலைக்கு உயர்த்தப்பட்டு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஏனைய வெளிப்புற வழிமுறைகளுடன் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேலும், எமது மக்கள் அனைவருக்கும் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை முன்னெடுப்பதை இலக்காகக் கொண்டு, தொடர்ச்சியான தேசிய செயற்பாடுகளை ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதொரு தருணத்தில், இந்த அனைத்து விரோதமான நடவடிக்கைகளும் ஜெனீவாவில் இடம்பெற்று வருகின்றன. எனவே, இலங்கையின் நிலைப்பாடு மற்றும் கோவிட்-19 தொடர்பான சவால்களுக்கு மத்தியிலும் இலங்கை இந்த விடயத்தில்  அடைந்து கொண்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகியன குறித்து இந்த சபை, ஐ.நா. உறுப்பு நாடுகள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட செயற்பாட்டாளர்கள் உட்பட ஜெனீவாவில் உள்ள பங்குதாரர்களுக்கு இலங்கை விளக்கமளிப்பது முக்கியமானதாகும்.

மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்ட அமர்வு 49 இல் 2022 மார்ச் 01ஆந் திகதி உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், பலதரப்புக் கட்டமைப்பில் பங்கேற்பாளராக, அபிவிருத்திக்கான உரிமை உட்பட தேசிய அரசியலமைப்பு, சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்புக்களில் மனித உரிமைகளை அடைந்து கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்ற இலங்கையின் நீண்டகால  சுயவிவரம் மற்றும் இது சம்பந்தமான இலங்கையின் சாதனைகளை எடுத்துக்காட்டினார். உறுப்பு நாடுகளின் இறையாண்மை சமத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் மனித உரிமைகள் பேரவை நடுநிலைமை, புறநிலை மற்றும் தேர்ந்தெடுக்காத கொள்கைகளால் வழிநடாத்தப்படுவதன் முக்கியத்துவத்தையும் இதன்போது வலியுறுத்திய அமைச்சர், புறம்பான காரணங்களால் தொடங்கப்பட்ட தண்டனைக்குரிய, அரசியல்மயமாக்கப்பட்ட, பிளவுபடுத்தும், உதவாத நடவடிக்கைகளுக்கு ஆட்சேபனைகளைத் தெரிவித்தார்.

2022 மார்ச் 04ஆந் திகதி இலங்கை தொடர்பான எழுத்துமூலமான புதிய தகவலறிக்கை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடாடும் உரையாடலில், சம்பந்தப்பட்ட நாடு என்ற  வகையில், இலங்கை மீதான 46/1 தீர்மானம் மனித உரிமைகள் பேரவையின் ஸ்தாபகக் கோட்பாடுகளுக்கு நேர் எதிரானது என்பதனை சுட்டிக்காட்டி, இலங்கையின் சார்பாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். உயர்ஸ்தானிகரின் எழுத்துப்பூர்வமான புதிய தகவல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த பாரபட்சமான மற்றும் ஊடுருவும் அம்சங்களையும் அவர் சபைக்கு சுட்டிக்காட்டினார்.

உயர்ஸ்தானிகரின் எழுத்துபூர்வ புதிய தகவல் அறிக்கை தொடர்பான ஊடாடும் உரையாடலில், நல்லிணக்கத்திற்கான அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்க முயற்சிகளைப் பாராட்டி, பலதரப்பு ஈடுபாட்டிற்கான முக்கிய அடிப்படையாக புறநிலை மற்றும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்திய உலகளாவிய தெற்கின் பெரும் எண்ணிக்கையிலான நாடுகளில் இருந்து இலங்கைக்கு பிராந்திய ஆதரவு மற்றும் ஒற்றுமை கிடைத்தது. ஊடாடும் உரையாடலில் அறிக்கைகளை வழங்கிய 45 நாடுகளில் 31 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகப் பேசியுள்ளன. இந்தப்  பேச்சாளர்கள் தெற்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவில் உள்ள அரசுககளைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

சவுதி அரேபியா, எகிப்து, பிலிப்பைன்ஸ், நேபாளம், கென்யா, எத்தியோப்பியா, மாலைதீவு, சீனா,  கியூபா, ஜப்பான், சிரிய அரபுக் குடியரசு, வியட்நாம், கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு, வெனிசுவேலா, நைஜீரியா, பாகிஸ்தான், கம்போடியா, ரஷ்யக் கூட்டமைப்பு, லெபனான், உகாண்டா, பெலாரஸ், சிம்பாப்வே, எரித்திரியா, தெற்கு சூடான், லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசு, எமன், ஈரான், நைஜர், கசகஸ்தான், பங்களாதேஷ் மற்றும் அசர்பைஜான் ஆகியன ஊடாடும் உரையாடலில் இலங்கைக்கு ஆதரவாகப் பேசிய 31 நாடுகளாகும்.

மேலும், இலங்கை தொடர்பான ஊடாடும் உரையாடலைத் தொடர்ந்து விடயம் 2 மீதான பொது விவாதத்தில், நல்லிணக்கம் மற்றும் சட்ட சீர்திருத்தங்களைத் தொடங்குவதிலான இலங்கையின்  முயற்சிகளை தென் கொரியா அங்கீகரித்துள்ளது.

கோவிட்-19 தொடர்பான சவால்களைப் பொருட்படுத்தாமல், சட்டச் சீர்திருத்தம் உட்பட தேசிய  செயன்முறைகளின் மூலம் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை உலகளாவிய தெற்கின் அரசுகள் அங்கீகரித்தன. தன்னார்வ தேசிய செயன்முறைகளை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தை மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச சமூகம் ஆகியன சுட்டிக் காட்டியதுடன், பாரபட்சமற்ற தன்மை, தேர்ந்தெடுக்காத தன்மை மற்றும் அரசியல்மயமாக்கம் செய்யாமை ஆகிய அடிப்படைக் கொள்கைகளை நிலைநிறுத்தின.

இலங்கையின் உள்ளக அரசியலமைப்பு மற்றும் ஆட்சி விடயங்களின் நுண்ணிய முகாமைத்துவம் மற்றும் ஐ.நா. சாசனம் மற்றும் சம்பந்தப்பட்ட ஐ.நா. பொதுச் சபை மற்றும் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானங்களின் விதிமுறைகளை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம்  மற்றும் தலையீடு ஆகியன பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்ட விடயங்களில் அடங்கும். சர்வதேச உதவிக்கான தமது முன்னுரிமைகள் மற்றும் பகுதிகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் அரசுகளுக்கு இருக்கும் வகையில், சர்வதேச மனித உரிமைகள் பொறிமுறைகளுடன் ஒத்துழைப்பது எந்தவிதமான வெளியக அழுத்தங்களும் உட்படாமல் இருக்க வேண்டும் என்றும், கூட்டுறவு நடவடிக்கை மட்டுமே உண்மையில் பயனுள்ளதாக இருக்கும் என்றும், ஒரு நாட்டில் மனித உரிமைகளை உண்மையாக வலுப்படுத்த பங்களிக்கும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் 'பொறுப்புத் திட்டம்' ஒன்றை நிறுவுவதானது அதன் ஆணையை மீறுவதாகக் குறிப்பிட்டு, சாட்சியங்களை சேகரிப்பதில்  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அமைக்கப்பட்டுள்ள வகிபாகத்தை சில பிரதிநிதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. 3 மில்லியன் அமெரிக்க டொலர் பிராந்தியத்தில் இந்த ஆணையின் அதிகப்படியான செலவு குறித்தும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

மனித உரிமைகள் பேரவை 49 அமர்வுக்குப் பக்க அம்சமாக, கொழும்பில் இருந்து விஜயம் செய்திருந்த பிரதிநிதிகள் குழுவினர் பின்வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு சந்திப்புக்களில்  ஈடுபட்டனர்.

- தூதுவர் / ஐக்கிய இராச்சியத்தின் பிரதி நிரந்தரப் பிரதிநிதி ரீட்டா பிரெஞ்ச் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட ஐக்கிய இராச்சியத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியா, ஐ.நா.  மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சர் தாரிக் அகமத் பிரபு

-   பொதுநலவாய பொதுச் செயலாளர் பரோனஸ் பட்ரிசியா ஸ்கொட்லேண்ட்

- திமோர்-லெஸ்டேவின் வெளியுறவு மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் திருமதி. அடல்ஜிசா மாக்னோ

- இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தூதுவர், நிரந்தரப் பார்வையாளர் மற்றும் நிரந்தரப் பிரிதிநிதி திருமதி. நசிமா பாக்லி

-  உலக புலமைச்சொத்து அமைப்பின் பணிப்பாளர் நாயகம் திரு. டேரன் டாங்

-  சவூதி அரேபியாவின் நிரந்தரப் பிரதிநிதி திரு. அப்துலஸிஸ் எம்.ஓ. அல்வாசில்

-  பலஸ்தீனத்தின் வெளிநாட்டு அமைச்சர் ரிசாத் அல் மாலிகி மற்றும் ஜெனிவாவில் உள்ள  ஐ.நா. வுக்கான பலஸ்தீனத்தின் நிரந்தரப் பிரதிநிதி திரு. இப்ராஹிம் கிரைஷி

-  பாகிஸ்தானின் மனித உரிமைகளுக்கான மத்திய அமைச்சர் திருமதி. ஷிரீன் எம் மசாரி மற்றும் ஜெனிவாவில் உள்ள பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி திரு. கலீல் ஹஷ்மி

-  தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் கலாநிதி. நலேடி பாண்டோர்

-  எகிப்தின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான வெளிநாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் காலித் எல் பக்ரி மற்றும் எகிப்தின் நிரந்தரப் பிரதிநிதி திரு. அஹ்மத் இஹாப் அப்தெலாஹத் கமாலெல்டின்

-  ஜெனிவாவில் உள்ள அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி திருமதி. பாத்ஷேபா நெல் க்ரோக்கர்

- ஐக்கிய இராச்சியத்தின் நிரந்தரப் பிரதிநிதி திரு. சைமன் மேன்லி மற்றும் திருமதி. அமண்டா

- அவுஸ்திரேலியாவின் நிரந்தரப் பிரதிநிதி கோரேலி

-  ஈரான் இஸ்லாமியக் குடியரசின் நீதித்துறையின் பிரதித் தலைவர் கலாநிதி. கசெம் கரிபாபாடி மற்றும் ஈரானின் நிரந்தரப் பிரதிநிதி மாண்புமிகு எஸ்மாயில் பகாய் ஹமானே

-  துருக்கியின் நிரந்தரப் பிரதிநிதி திரு. சாதிக் அர்ஸ்லான்

-  மனித உரிமைகளுக்கான ஐ.நா. வின் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்

-   அர்ஜென்டினாவின் நிரந்தரப் பிரதிநிதியும் மனித உரிமைகள் பேரவையின் தலைவருமான திரு. பெடரிகோ வில்லேகாஸ்

-  பங்களாதேசத்தின் நிரந்தரப் பிரதிநிதி முகமது முஸ்தாபிசுர் ரஹ்மான்

-  இந்தோனேசியாவின் நிரந்தரப் பிரதிநிதி பெப்ரியன் ரட்யார்ட்

மேற்கூறியவைகளுக்கு மேலதிகமாக, உற்பத்தி வழங்கல் மற்றும் மருந்துகள் ஒழுங்குபடுத்தல்  இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண பின்வரும் இருதரப்பு சந்திப்புக்களில் ஈடுபட்டார்.

-   உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ராஸ் அதானோம் கெப்ரேயஸ்

-   கோவெக்ஸின் நாட்டிற்கான ஈடுபாட்டுக் குழுவின் பணிப்பாளர் திரு. சண்டியாகோ கார்னேஜோ

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 மார்ச் 15

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close