சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம் 2022 மே 10 மற்றும் 12ஆந் திகதிகளில் சான்சரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு விஷேட கொன்சியூலர் முகாம்களின் போது 330 குடியுரிமைச் சான்றிதழ்கள், 31 பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் ஒன்பது அகதிகளை திருப்பி அனுப்பும் திட்டத்தின் கடவுச்சீட்டுகளை வழங்கியது. பிரதி உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விசேட கொன்சியூலர் முகாம்கள் தென்னிந்தியாவில் வாழும் புலம்பெயர் இலங்கையர்களுக்கு குறிப்பாக பிறப்பு மற்றும் குடியுரிமை பதிவுகளுக்கு பயனுள்ள சேவையை தொடர்ந்தும் வழங்கி வருகின்றன.
மே 10ஆந் திகதி நடைபெற்ற 9வது விஷேட கொன்சியூலர் முகாமில், புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லை மற்றும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு 152 குடியுரிமைச் சான்றிதழ்கள் மற்றும் ஐந்து பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
2022 மே 23ஆந் திகதி சான்சரி வளாகத்தில் நடைபெற்ற 10வது விசேட கொன்சியூலர் முகாமில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி, கோயம்புத்தூர் மாவட்டம் பூலுவப்பட்டி, தில்லிக்கல் மாவட்டம் விருப்பாச்சி, திருச்சி மாவட்டம் வளவந்தல்கோட்டை, திருப்பூர் மாவட்டம் பெருமல்லூர், காங்கேயம், பருவா மற்றும் அவினாசி ஆகியவற்றில் உள்ள இலங்கையர்களுக்கு 178 குடியுரிமைச் சான்றிதழ்கள், 26 பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் 9 அகதிகளை திருப்பி அனுப்பும் திட்டத்தின் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம்,
சென்னை
2022 ஜூன் 01