பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி. டி. வெங்கடேஷ்வரன் மற்றும் சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள், பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனை 2022 மார்ச் 08ஆந் திகதி சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையில் வைத்து சந்தித்தனர்.
இந்தியாவின் சிறந்த விவசாய ஆராய்ச்சியாளர் மற்றும் விஞ்ஞானியான பேராசிரியர் சுவாமிநாதன், 'பொருளாதார சூழலியலின் தந்தை' மற்றும் பசுமைப் புரட்சியின் உலகளாவிய தலைவராகக் கருதப்படுகின்றார். சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, ரமோன் மகசேசே விருது மற்றும் அல்பேர்ட் ஐன்ஸ்டீன் உலக விஞ்ஞான விருது உள்ளிட்ட பல விருதுகள் மற்றும் கௌரவங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
பேராசிரியர் சுவாமிநாதனால் நிறுவப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இந்தியாவின் முன்னணி விவசாய ஆராய்ச்சி நிறுவனமாகும். 1988 இல் ஒரு இலாப நோக்கற்ற அறக்கட்டளையாக நிறுவப்பட்ட இது, விவசாயம், உணவு மற்றும் ஊட்டச்சத்து போன்ற கிராமப்புற மக்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பொருத்தமான, நவீன விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப விருப்பங்களைப் பயன்படுத்தி ஏழை, பெண்களுக்கான உதவி மற்றும் இயற்கை சார்பு அணுகுமுறைகளைப் பின்பற்றுகின்றது. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையானது ஏனைய அறிவு சார்ந்த நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் ஒத்துழைப்பையும் பங்கேற்பையும் ஊக்குவிக்கின்றது.
விஜயத்தின் போது, விவசாய அபிவிருத்திக்கான நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பாக இலங்கை பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் சாத்தியமான ஒத்துழைப்புகள் குறித்து பிரதி உயர்ஸ்தானிகர் கலந்துரையாடினார்.
இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம்,
சென்னை
2022 மார்ச் 11