சுவீடன் இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள தர்ஷன எம். பெரேராவின் நற்சான்றிதழ்கள் சுவீடன் வெளிநாட்டு விவகார அமைச்சின் உபசரணைத் திணைக்களத்தினூடாக மேற்கொள்ளப்பட்டிருந்த விஷேடமான ஏற்பாட்டின் மூலம் மேன்மை தங்கிய மன்னர் கார்ல் XVI குஸ்டாப் அவர்களிடம் கையளிக்கப்பட்டன. இந்த வார ஆரம்பத்தில் நிறைவு செய்யப்பட்ட விஷேட ஏற்பாடானது, சுவீடனில் தற்போதுள்ள சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுகின்றது.
1996 இல் இலங்கை வெளியுறவுச் சேவையில் இணைந்த தூதுவர் தர்ஷன பெரேரா கிட்டத்தட்ட 25 ஆண்டுகால சேவையைப் பூர்த்தி செய்துள்ளார். வெளிநாட்டு அமைச்சின் பொதுத் தொடர்பாடல், தெற்காசியா மற்றும் சார்க், மத்திய கிழக்கு, ஐரோப்பிய விவகாரம் ஆகிய பிரிவுகளில் அவர் பல பதவிகளில் பணியாற்றினார். வொஷிங்டன் டி.சி. யில் உள்ள இலங்கைத் தூதரகங்கள், நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. வுக்கான நிரந்தரத் தூதரகம், பேங்கொக், மொஸ்கோ, ரோம் மற்றும் ஜகார்த்தாவில் உள்ள தூதரகங்கள் ஆகியவற்றில் அவர் இராஜதந்திரப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
ஸ்டொக்ஹோமிற்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர் வெளிநாட்டு அமைச்சில் வட அமெரிக்கப் பிரிவிற்கான பணிப்பாளர் நாயகமாக பணியாற்றினார். இந்தோனேசியாவிற்கான இலங்கைத் தூதுவராகவும், ஆசியானிற்கான இலங்கைத் தூதுவராகவும் அவர் முன்னர் கடமையாற்றியுள்ளார்.
இலங்கைத் தூதரகம்
ஸ்டொக்ஹோம்
2021 மார்ச் 28