கொழும்பில் இடம்பெற்ற இலங்கைக்கும், கொரியக் குடியரசுக்கும் இடையிலான இருதரப்பு அரசியல் ஆலோசனைகள்

கொழும்பில் இடம்பெற்ற இலங்கைக்கும், கொரியக் குடியரசுக்கும் இடையிலான இருதரப்பு அரசியல் ஆலோசனைகள்

Korea 01

இலங்கை மற்றும் கொரியக் குடியரசின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கள் மட்டத்தினாலான இருதரப்பு அரசியல் ஆலோசனைகளின் இரண்டாம் சுற்று 2018 ஜூன் 07 ஆந் திகதி வியாழக்கிழமையன்று கொழும்பில் இடம்பெற்றது.

இலங்கைத் தூதுக்குழுவானது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் அவர்களினாலும், கொரியக் குடியரசின் தூதுக்குழுவானது கொரியக் குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் முதலாவது துணை அமைச்சரான லிம் சுங்-நம் அவர்களினாலும் தலைமை தாங்கப்பட்டன. இந்த கலந்துரையாடலின் போது இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெரும்பாலான ஏனைய வரிசை முகவர்களுடன் இருநாட்டு வெளிநாட்டு அமைச்சுக்களினதும் சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.

2017 நவம்பர் 28 - 30 ஆம் திகதி வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கொரியக் குடியரசுக்கான இராஜாங்க விஜயத்தைத் தொடர்ந்து, இந்த அரசியல் ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன. ஆகவே, இரு நாடுகளுக்குமிடையே நெருக்கமான மற்றும் தோழமையுடனான உறவுகளை வெளிப்படுத்தி இந்த இராஜாங்க விஜயத்தின் பலன்களை மேலும் முன்னேற்றுவதே இக் கலந்துரையாடலின் பிரதான இலக்காக அமைந்திருந்தது. இக் கலந்துரையாடலின் போது வர்த்தகம், முதலீடு, கமத்தொழில், மீன்பிடி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் கூட்டு செயற்திட்டங்கள் பலவற்றைக் குறித்து மீளாய்வு செய்யப்பட்டன. இதில் கொரிய பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் ஹோமாகம டெக் சிட்டி திட்டம், கம்பஹா தொழில்நுட்ப கல்லூரி ஸ்தாபிப்பு, பல்வேறு நீர் விநியோக மற்றும் ஏனைய திட்டங்கள் ஆகியன உள்ளடங்குகின்றன.

இருதரப்பு அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தல் ஆகியவற்றுக்கான தமது அர்ப்பணிப்பான ஈடுபாட்டினை மீளுறுதிப்படுத்திய இருதரப்புகளும், இருநாடுகளுக்குமிடையே ஏற்கனவேயுள்ள பன்முக ஒத்துழைப்பை மேலும் விஸ்தரித்தல் மற்றும் ஆழமாக்கும் நோக்குடன் இலத்திரனியல் ஆட்சிமுறைக்கான ஆதரவு மற்றும் ஆடையுற்பத்திற்கான உதவிகள் ஆகிய பிரிவுகளில் சாத்தியமான புதிய முன்னெடுப்புக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

சுகாதாரம், சுற்றுச்சூழல், பேண்தகு அபிவிருத்தி, காலநிலை மாற்றம் மற்றும் மனித உரிமைகள், கொள்கை அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கினைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் போன்ற விடயங்களை பன்முகப் பேரவைகளில் அடையாளப்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை அடையாளப்படுத்திய இருதரப்புக்களும் நெருக்கமாக பணியாற்ற உடன்பட்டன.

நெருக்கமான மற்றும் தொடர்ச்சியான இடையீடுகளின் முக்கியத்துவத்தை அடையாளப்படுத்தி 2017 நவம்பர் மாதம் கைச்சாத்திடப்பட்ட இலங்கை மற்றும் கொரியக் குடியரசுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கை கட்டமைப்பிற்குள் முன்னெடுக்கப்படும் இலங்கை - கொரியக் குடியரசின் கூட்டு ஆணைக்குழுவின் முதலாவது அமர்வானது 2018 ஜூன் 28 ஆந் திகதி கொழும்பில் கூட்டப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

இலங்கைக்கும், கொரியக் குடியரசுக்கும் இடையிலான முதலாவது சுற்று அரசியல் ஆலோசனைகள், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 2013 இல் சோல் நகரில் நடாத்தப்பட்டன. மூன்றாம் சுற்று அரசியல் ஆலோசனைகளை சோல் நகரில் நடாத்துவதற்கு இருதரப்புக்களும் உடன்பட்டன.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2018 ஜூன் 08
Korea 2
Please follow and like us:

Close