கொரியாவில் தொழில்களுக்குச் செல்லும் வாய்ப்பு விரைவில் வழங்கப்படும் என இலங்கைக்கான கொரியத் தூதுவர் உறுதி

 கொரியாவில் தொழில்களுக்குச் செல்லும் வாய்ப்பு விரைவில் வழங்கப்படும் என இலங்கைக்கான கொரியத் தூதுவர் உறுதி

கொரியாவில் தொழில் புரிவதற்குத் தகைமையுடைய இலங்கை இளைஞர்கள் கொரியாவிற்கு பிரயாணிப்பதற்கான வசதிகள் விரைவில் வழங்கப்படும் என இலங்கைக்கான கொரியத் தூதுவர் வூன்ஜின் ஜியோங் இன்று (16) வெளிநாட்டு அமைச்சரிடம் உறுதியளித்தார். கொரியாவில் தொழில் புரிவதற்குத் தகைமையுடைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் தாமதங்கள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் வெளிநாட்டு அமைச்சில் இன்று நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, அமைச்சின் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த, அதன் பிரதித் தலைவர் நிமல் திப்பட்டுமுனுவ மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

கொரியாவில் தொழில் புரிவதற்குத் தகைமையுடையவர்கள் நீண்ட காலமாக கொரியாவிற்கு தொழில் நிமித்தம் செல்வதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற போதிலும், கோவிட் தொற்றுநோயின் காரணமாக அது நாளுக்கு நாள் தவிர்க்கப்படுகின்றது என வெளிநாட்டு அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கொரிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கிய இலங்கைக்கான கொரியத் தூதுவர், கொரியாவில் தொழில் புரிவதற்குத் தகைமையுடைய அனைவருக்கும் கொரியாவில் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். கோவிட் தொற்றுநோயின் காரணமாக அந்த வாய்ப்புக்களை வழங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது, எனினும் அவர்கள் விரைவில் கொரியாவுக்கு பயணிப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையின் விவசாயத் துறையின் அபிவிருத்திக்கு உதவுவதற்கு கொரிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை கொரியாவில் அதிகரித்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியன உள்ளடங்களாக பல விடயங்கள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 ஜூன் 17

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close