கூட்டு அறிக்கை - இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் நெதர்லாந்து இராச்சியத்திற்கும் இடையிலான இரண்டாவது சுற்று அரசியல் ஆலோசனைகள்

கூட்டு அறிக்கை – இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் நெதர்லாந்து இராச்சியத்திற்கும் இடையிலான இரண்டாவது சுற்று அரசியல் ஆலோசனைகள்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும், நெதர்லாந்து இராச்சியத்திற்கும் இடையிலான இரண்டாவது சுற்று அரசியல் ஆலோசனைகள், 2025 அக்டோபர் 29 ஆம் திகதி புதன்கிழமை ஹேக்கில் நடைபெற்றது. நெதர்லாந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஆசியா மற்றும் ஓசியானியா திணைக்களத்தின் பணிப்பாளர் டொமினிக் குஹ்லிங் டச்சு பிரதிநிதிகள் குழுவிற்குத் தலைமை தாங்கிய, அதேவேளை இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கு இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஷ்வர குணரத்ன தலைமை தாங்கினார்.

நீண்டகால நட்பு, பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளின் உணர்வில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இருதரப்பு உறவுக்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் அதே வேளையில், இரு பிரதிநிதிகள் குழுவினரும் தற்போதைய ஒத்துழைப்பின் முழு அளவையும் மதிப்பாய்வு செய்ததுடன், 2026 ஆம் ஆண்டில் இரு நாடுகளும் 75 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளைக் கொண்டாட எதிர்நோக்கியுள்ள நிலையில், ஏனைய விடயங்களுக்கு மத்தியில் கடல்சார் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பில் புதுப்பிக்கப்பட்ட கவனத்தை செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். இராஜதந்திர உறவுகளின் 75 வது ஆண்டு நிறைவை பொருத்தமான முறையில் கொண்டாடுவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து இரு தரப்பினரும் ஆலோசித்தனர்.

இரு பிரதிநிதிகள் குழுவினரும் உறவின் ஆதாரமொன்றாக விளங்கும் தற்போதைய கலாச்சார ஒத்துழைப்பை வரவேற்றனர். கலாச்சார பாரம்பரிய பொருட்களை மரியாதையுடன் திருப்பி அனுப்புவதன் மூலம் வரலாற்று மரபுகளை பூர்த்தி செய்வதில் நெதர்லாந்தின் உறுதிப்பாட்டை இலங்கைத் தரப்பு பாராட்டியது. இலங்கை ஆவணக் காப்பகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள ஆவணங்களைப் பாதுகாத்தல், மீட்டெடுத்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் ஆகியவற்றில் நெதர்லாந்தின் தேசிய ஆவணக் காப்பகத்திற்கும், இலங்கை தேசிய ஆவணக் காப்பகத்திற்கும் இடையே நடந்து வரும் டச்சு-இலங்கை ஒத்துழைப்பானது, இரு தரப்பினராலும் வரவேற்கப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உறவுகளை இரு தரப்பினரும் மதிப்பாய்வு செய்ததுடன், தொடர்புடைய வர்த்தக சம்மேளனங்களுக்கு  இடையில் அதிக ஒத்துழைப்பை மேலும் வெளிக்கொணர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பொருளாதார ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை ஆராய்ந்தனர். தற்போது, ​​சுற்றுலாவிற்கான முதல் 10 மூல சந்தைகளில் நெதர்லாந்து உள்ளதெனவும், சுற்றுலாத்தளமாக இலங்கை வழங்கும் ஈர்ப்புகளையும், சுற்றுலாத்துறை உட்கட்டமைப்பில் முதலீட்டிற்கான வாய்ப்புகளையும் இலங்கைத் தரப்பு கோடிட்டுக் காட்டியது.

உரையாடல்கள், இலங்கைத் துறைமுக அதிகாரசபையானது, டச்சு நிறுவனங்களுடன் பராமரித்து வரும் நீண்டகால தொழில்நுட்ப மற்றும் வணிக கூட்டாண்மைகளை எடுத்துக்காட்டுவதூடாக, துறைமுக மேம்பாடு மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தின.

இரு தரப்பினரும் பல்தரப்பு நிறுவனங்களின் பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பு குறித்தும், ஐக்கிய நாடுகள் சபை அமைப்பிற்குள் வேட்பாளர்களாக ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொள்ளச் சாத்தியமான ஆதரவு குறித்தும் ஆலோசித்தனர். மேலும், ஏனையவற்றுக்கு மத்தியில் பிம்ஸ்டெக் மற்றும் அயோரா போன்ற முயற்சிகள் மூலம் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் கடல்சார் பாதுகாப்பைப் பேணுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

இலங்கைக்கும் நெதர்லாந்திற்கும் இடையே அவ்வப்போது ஆலோசனைகள் உட்பட தொடர்ச்சியான உரையாடலின் முக்கியத்துவத்தை இந்த சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது. முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கும் பரஸ்பரரீதியில் வசதியான நேரத்தில் அடுத்த கூட்டத்தைக் கூட்ட இரு தரப்பினரும் இணங்கினர்.

இலங்கைத் தூதுக்குழுவில் நெதர்லாந்திற்கான இலங்கைத் தூதுவர் ரேகா குணசேகர, இலங்கை தேசிய ஆவணக் காப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் நடீர ரூபசிங்க, ஹேக்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முதல் செயலாளர் சஷிபிரபா விஜேரத்ன மற்றும் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் உதவிப் பணிப்பாளர் கௌமதி விஜேசிங்க ஆகியோர் அடங்குவர்.

நெதர்லாந்து தூதுக்குழுவில் நெதர்லாந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கலாச்சார மேம்பாட்டுக்கான கொள்கை ஒருங்கிணைப்பாளர், நெதர்லாந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இரண்டு இலங்கை விடயதான அதிகாரிகள் மற்றும் நெதர்லாந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஒரு தூதரக அதிகாரி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

வெளிநாட்டு அலுவல்கள்,                                                                       வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு                                                               ஹேக்
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு 01

 2025 அக்டோபர் 30

 

 

       

Please follow and like us:

Close