கூட்டு அர்ப்பணிப்பாக, சமாதானத்திற்கான பொதுநலவாய நாடுகளின் கொடியை இலங்கை ஏற்றி வைப்பு

கூட்டு அர்ப்பணிப்பாக, சமாதானத்திற்கான பொதுநலவாய நாடுகளின் கொடியை இலங்கை ஏற்றி வைப்பு

பொதுநலவாய தினத்தை முன்னிட்டு, பொதுநலவாய நாடுகளின் பகிரப்பட்ட மதிப்புக்கள் மற்றும் கொள்கைகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பை அடையாளப்படுத்தும் வகையில், சமாதானத்திற்கான பொதுநலவாய நாடுகளின் கொடி, 2023 மார்ச் 13ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரியவினால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் அமைச்சின் அதிகாரிகளின் பங்களிப்புடன்  ஏற்றி வைக்கப்பட்டது.

சமாதானத்திற்கான கூட்டு அர்ப்பணிப்பாக, உறுப்பு நாடுகளால் சமாதானத்திற்கான பொதுநலவாய நாடுகளின் கொடியை ஏற்றி வைப்பதானது, 'நிலையான மற்றும் அமைதியான பொது எதிர்காலத்தை உருவாக்குதல்' என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் பொதுநலவாய செயலகத்தால் தொடங்கி  வைக்கப்பட்டது. பொதுநலவாய சாசனம் கைச்சாத்திடப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை இந்த ஆண்டு பொதுநலவாய தினம் குறித்து நிற்கின்றது.

இராஜாங்க அமைச்சர் பாலசூரிய தனது உரையில், பொதுநலவாய அமைப்பின் ஸ்தாபக உறுப்பினரான இலங்கை, இந்த முயற்சியை வரவேற்பதாகவும்,  உலகளவில் சமாதானம் மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கான அதன் முயற்சிகளுக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். அறிமுகக் குறிப்புக்களை முன்வைத்த வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன, பல ஆண்டுகளாக மோதலுக்கு உள்ளான இலங்கைக்கான முன்முயற்சியின் பொருத்தத்தை எடுத்துரைத்த அதே வேளை, இலங்கை 2023ஆம் ஆண்டை நல்லிணக்கம், மீட்சி மற்றும் தேசிய ஒற்றுமைக்கான ஆண்டாக அடையாளப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 மார்ச் 13

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close