குவாங்சோ சர்வதேச பயணக் கண்காட்சியில் இலங்கை குறித்து ஆராய்வதில் சீனப்  பார்வையாளர்கள் ஆர்வம்

 குவாங்சோ சர்வதேச பயணக் கண்காட்சியில் இலங்கை குறித்து ஆராய்வதில் சீனப்  பார்வையாளர்கள் ஆர்வம்

குவாங்டாங் சினரி சர்வதேச பயண முகவரமைப்புடன் இணைந்து குவாங்சோவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் 2021 டிசம்பர் 4 - 6 வரையிலான வருடாந்த குவாங்சோ சர்வதேச பயணக் கண்காட்சியில் பங்கேற்றது.

முக்கிய சுற்றுலாத் தலங்கள், தொல்பொருள் மற்றும் கலாச்சாரத் தலங்களின் படங்களுடன்  பொறிக்கப்பட்டிருந்த வகையில் துணைத் தூதரகத்தினால் 'இலங்கை' கூடம் வடிவமைத்திருந்ததுடன், கைவினைப் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டன. இலங்கையின் பால் கவரப்பட்டு, கூடத்திற்கு வருகை தந்த பார்வையாளர்கள், சீனாவில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர் விஜயம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் சுற்றுலாத் தலங்கள், பயண நடைமுறைகள் மற்றும் நாட்டில் தற்போதைய கோவிட்-19 நிலைமை குறித்த தகவல்களைக் கோரினர்.

தென் சீனாவில் வணிகம் மற்றும் நுகர்வோர் பயணக் கண்காட்சிகளில் மிகவும் முக்கியமான  ஒன்றான சுற்றுலாக் கண்காட்சி, உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் பயணங்கள், சுற்றுலாப் பொருட்கள் மற்றும் சேவைகளைக் காட்சிப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றது. இலங்கை பயண மற்றும் சுற்றுலா வர்த்தகத்தின் பிரதிநிதிகளுக்கு வசதியாக, தூதரகத்துடன் இணைந்து இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் ஊடாக பல வருடங்களாக இந்தக் கண்காட்சியில் இலங்கை பங்கேற்று வருகின்றது. முந்தைய ஆண்டுகளில், கண்காட்சியில் இலங்கை 'மிகவும் கவர்ச்சிகரமான' மற்றும் 'மிகவும் பிரபலமான' இடமாக பல விருதுகளை வென்றதுடன், 2019 இல் அமைச்சர் பிரதிநிதித்துவத்துடன் 'விருந்தினர் நாடாக' பங்கேற்றது.

பயணத் துறையுடன் தொடர்புடைய 123 உள்ளூர் மற்றும் சர்வதேச கண்காட்சியாளர்கள் இணைந்திருந்த இந்த வருடக் கண்காட்சியில், 10,000 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கையின் துணைத் தூதரகம்,

குவாங்சோ

2021 டிசம்பர் 13

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close