நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பதற்கான இலங்கையின் இயற்கை வளங்களின் திறனை அங்கீகரித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக தாதுப்பொருட்களை இலங்கை தொடர்ந்தும் பயன்படுத்தக்கூடிய வழிமுறைகளை ஆராய்வதற்கு பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சு உதவிகளை வழங்குகின்றது.
இந்த முன்முயற்சியின் முக்கியத்துவத்திற்கு அமைவாக, பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர், சம்பந்தப்பட்ட இலங்கை நிறுவனங்கள் மற்றும் ரஷ்யாவின் ருஸ்ராபீன் ஆகியவற்றுக்கு இடையில் கிராபெனின் மற்றும் அதனுடன் தொடர்புடைய பயன்பாடுகளிலான சாத்தியமான ஒத்துழைப்புக்கள் குறித்த ஒரு மெய்நிகர் கலந்துரையாடலை ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் மாண்புமிகு பேராசிரியர் எம்.டி. லமாவன்ச 2021 ஜூன் 16 ஆந் திகதி ஏற்பாடு செய்தார்.
கிராஃபைட்டிலிருந்து தயாரிக்கப்படும் கிராபெனின் பல நவீன பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுவதுடன், இலங்கையின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பதில் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. 90% க்கும் மேற்பட்ட தூய்மையுடன் கூடிய உலகின் மிகச் சிறந்த கிராஃபைட் சிலவற்றை இலங்கை கொண்டுள்ள அதே வேளை, இரண்டாம் உலகப் போரின் உச்சக் கட்டம் முதலான வரலாற்றுக் காலங்களிலிருந்து இலங்கை அதனை சுரங்கப்படுத்தி வருகின்றது.
இலங்கையின் முன்னணி ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்கும் ருஸ்ராபெனுக்கும் இடையில் எதிர்காலத்தில் ஒத்துழைப்பை முறைப்படுத்துவதற்கான பரஸ்பர ஒப்பந்தம் இந்த சந்திப்பின் விளைவாக எட்டப்பட்டது.
ருஸ்ராபெனின் தலைமை நிறைவேற்று அதிகாரி திரு. மக்சிம் ரைபின் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றார். தூதுவர் பேராசிரியர் எம்.டி. லமாவன்ச மற்றும் இராஜாங்க அமைச்சினதும், தூதரகத்தினதும் அதிகாரிகளுடன் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரியவும் இணைந்திருந்தார். தலைவர் பேராசிரியர் ஏ. சுமதிபால, தேசிய அடிப்படை ஆய்வுகள் நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் கலாநிதி. எச்.டபிள்யூ.எம்.ஏ.சி. விஜயசிங்க, பணிப்பாளர் திரு. மஞ்சு குணவர்தன மற்றும் இலங்கை நனோ தொழில்நுட்ப நிறுவனத்தின் கலாநிதி. நுவன் சில்வா மற்றும் கலாநிதி. லக்ஷித பஹலகெதர ஆகியோர் இலங்கை நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சு
கொழும்பு
2021 ஜூன் 18