ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 2022ஆம் ஆண்டிற்கான அரச ஊழியர்களின் சத்தியப்பிரமாணத்துடன் பணிகள் ஆரம்பம்

ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 2022ஆம் ஆண்டிற்கான அரச ஊழியர்களின் சத்தியப்பிரமாணத்துடன் பணிகள் ஆரம்பம்

ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊழியர்கள், 2022ஆம் ஆண்டு ஜனவரி 02ஆந் திகதி தூதரக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், பொதுச் சேவைக்கான சத்தியப்பிரமாணம் செய்து 2022ஆம் ஆண்டிற்கான தமது பணிகளைத் தொடங்கினர்.

ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத் தேசியக் கொடியை ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா தொடங்கியது. பின்னர் தாய்நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த அனைத்து வீரர்களையும் நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வத், இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் 2021ஆம் ஆண்டிலான தூதரகத்தின் உற்பத்தி சாதனைகளை எடுத்துரைத்தார். இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையிலும், கடந்த வருடத்தில் தொற்றுநோய் சவால்களுக்கு மத்தியிலும் பல்வேறு பகுதிகளில் தூதரகத்தின் இலக்குகளை அடைவதற்காக தொடர்ச்சியான நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதில் தூதரக ஊழியர்களின் அசைக்க முடியாத ஆதரவிற்காகவும் தூதுவர் நன்றிகளைத் தெரிவித்தார். பொதுமக்களை திருப்திப்படுத்தும் வகையில் அதிகாரிகள் தமது கடமைகளை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தையும், அவர்களது அர்ப்பணிப்புமிக்க சேவைகளால் நாட்டிற்கு நன்மைகளைக் கொண்டு வருவதன் முக்கியத்துவத்தையும் தூதுவர் வலியுறுத்தினார்.

வருடத்தின் முதல் வேலை நாளில் கொன்சியூலர் மற்றும் தொழிலாளர் சேவைகளுக்காக தூதரகத்துக்கு வருகை தந்திருந்த மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஓமானியப் பிரஜைகளுக்கு விழாவின் இறுதியில் இலங்கையின் பாரம்பரிய காலை உணவு வழங்கப்பட்டது.

இலங்கைத் தூதரகம்,

மஸ்கட்

2022 ஜனவரி 05

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close