ஐ.நா. வின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜாவுடன் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான முன்னேற்றம் குறித்து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கலந்துரையாடல்  

ஐ.நா. வின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜாவுடன் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான முன்னேற்றம் குறித்து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கலந்துரையாடல்  

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகமும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் உதவி நிர்வாகியும், ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியப் பணியகத்தின் பணிப்பாளருமான கன்னி விக்னராஜாவை அவரது இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் டிசம்பர் 15 ஆந் திகதி சந்தித்தார். உதவிச் செயலாளர் நாயகம் விக்னராஜாவின் விஜயமானது, நாட்டின் முன்னுரிமைகளை நன்கு புரிந்துகொண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டத்தில் இருந்து இலங்கைக்கான ஆதரவின் புதிய வழிகளை ஆராய்வதனை நோக்கமாகக் கொண்டமைந்திருந்தது

தொடரும் கோவிட்-19 தொற்றுநோயின் சமூகப் பொருளாதாரத் தாக்கங்களைக் கையாள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துரைத்த வெளிநாட்டு அமைச்சர், நிலையான அபிவிருத்தி இலக்குகளில் இலங்கையின் சமீபத்திய சாதனைகள் குறித்து உதவிச் செயலாளர் நாயகத்திற்கு விளக்கினார். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினால் ஐந்து தசாப்தங்களாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்த வெளிநாட்டு அமைச்சர், நிலையான அபிவிருத்தி இலக்குகளில் மேலும் முன்னேற்றத்தை அடைந்து கொள்வதற்கு பலதரப்பட்ட ஒத்துழைப்பை இருதரப்பினரும் வலுப்படுத்த வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் உட்பட, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான உள்நாட்டு செயன்முறைகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றத்தையும் வெளிநாட்டு அமைச்சர் சுட்டிக் காட்டினார்

இலங்கையின் பொருளாதாரம் பல ஆண்டுகளாக பின்னடைவைக் காட்டியதுடன், சிறந்த பொருளாதாரக் கோட்பாடுகளின் அடிப்படையில் கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து இலங்கை விரைவில் மீண்டுவருமென உதவிச் செயலாளர் நாயகம் விக்னராஜா நம்பிக்கை தெரிவித்தார். இலங்கையில் ஏராளமான இயற்கை வளங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட உதவிச் செயலாளர் நாயகம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதானது சுற்றுலாத் துறையை மேம்படுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் எனக் குறிப்பிட்டார். நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கு பொருத்தமான துறைகளில் இலங்கைக்கு ஆதரவை வழங்க ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் விருப்பத்தை உதவிச் செயலாளர் நாயகம் விக்னராஜா வெளிப்படுத்தினார்

உதவிச் செயலாளர் நாயகம் விக்னராஜா அவர்களுடன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி றொபர்ட் ஜுஹ்காம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி மலின் ஹெர்விக் மற்றும் .நா. வின் ஏனைய அதிகாரிகள் இணைந்திருந்தனர். வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.  

 

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

 

2021 டிசம்பர் 19

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close