ஐ.டி.ஈ. மாலைதீவு 2022 அங்குரார்ப்பண நிகழ்வில் மாலைதீவு நிறுவனங்களுடன் இலங்கை நிறுவனங்கள் வெற்றிகரமான கைகோர்ப்பு

 ஐ.டி.ஈ. மாலைதீவு 2022 அங்குரார்ப்பண நிகழ்வில் மாலைதீவு நிறுவனங்களுடன் இலங்கை நிறுவனங்கள் வெற்றிகரமான கைகோர்ப்பு

இன்டர்நேஷனல் டிரேட் எக்ஸ்போ, ஐ.டி.ஈ. மாலைதீவு 2022 அங்குரார்ப்பணப் பதிப்பு, கொள்வனவாளர் - விற்பனையாளர் சந்திப்பு அமர்வு மாலேயில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

மாலைதீவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையின் கீழ் இலங்கையின் எய்ட்கன் ஸ்பென்ஸ் மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் மற்றும் ஏஸ் டிரவல்ஸ் மாலைதீவு (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட வணிக சந்திப்பு மேடையான ஐ.டி.ஈ. மாலைதீவு 2022 - கொள்வனவாளர் - விற்பனையாளர் சந்திப்பு அமர், கட்டுமானப் பொருட்கள் வழங்குநர்கள், வாசனைப் பொருட்கள் மற்றும் மூலிகை உற்பத்தியாளர்கள், உள்துறை வடிவமைப்பாளர்கள், ஆடைகள் மற்றும் ஃபெஷன், விவசாயம் மற்றும் ஏனைய சேவை வழங்குநர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 20 இலங்கை நிறுவனங்களின் பங்கேற்புடன், மாலைதீவு வர்த்தக சமூகத்திற்கு தமது உற்பத்திகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்துகின்றது.

மாலைதீPவு சுற்றுலாத்துறை அமைச்சர் கலாநிதி அப்துல்லா மௌசூம் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அங்குரார்ப்பண வைபவம் செப்டம்பர் 19, திங்கட்கிழமை நடைபெற்றது. பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் ஜப்பான் தூதுவர் மற்றும் மாலைதீவில் உள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி ஆகியோர் இலங்கை மற்றும் மாலைதீவு நிறுவனங்களிலிருந்து பங்குபற்றிய பிரதிநிதிகளுடன், அங்குரார்ப்பண வைபவத்தின் விஷேட விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

19 முதல் 21 செப்டம்பர் 2022 வரையிலான 3 நாள் நிகழ்வில், மாலி, மண்ஹட்டன் பிஸ்னஸ் ஹோட்டலில் நடைபெற்ற முதல் இரண்டு நாட்களும் வணிக சந்திப்பாக கொள்வனவாளர் - விற்பனையாளர் அமர்வு அடம்பெற்றதுடன், இதன் போது இலங்கை நிறுவனங்கள் மாலைதீவு நிறுவனங்களை சந்தித்து வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது.

அங்குரார்ப்பண வைபவத்தில் மாலைதீவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஏ.எம்.ஜே. சாதிக் தனது உரையில், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக எய்ட்கன் ஸ்பென்ஸ் மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் மற்றும் ஏஸ் டிரவல்ஸ் மாலைதீவு (பிரைவேட்) லிமிடெட் ஆகிய இலங்கையின் பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனமான எய்ட்கன் ஸ்பென்ஸை பாராட்டினார்.இரு நாடுகளின் நிறுவனங்களையும் ஒன்றிணைத்து இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பிற்கான முழுத் திறனையும் சந்தித்து ஆராய்வதற்கான சிறந்த முயற்சி இதுவாகும் என உயர்ஸ்தானிகர் ஏ.எம்.ஜே. சாதிக் குறிப்பிட்டார்.

உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் அதிக பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், இரட்டை வரிவிதிப்பு உடன்படிக்கையைத் தவிர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை விரைவாகத் தொடர்வதற்கும், முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் பரஸ்பர பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கையில் மாலைதீவுடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு அவசர நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இலங்கையிலுள்ள அதிகாரிகளுடன் இலங்கைத் தூதரகம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஓட்டங்களை எளிதாக்குவதற்கான சட்டக் கட்டமைப்பு மற்றும் அரசாங்க விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் போது, இரு நாடுகளுக்குமிடையே தமது வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு நிறுவனங்கள் மற்றும் சாத்தியமான முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

ஐ.டி.ஈ. மாலைதீவு 2022 இன் இறுதி நாள், வேலனா சர்வதேச விமான நிலையத்தை அண்டிய வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் செயற்கைத் தீவான ஹூல்ஹூமலேவில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை ஆராய்வதற்காக, இலங்கை நிறுவனங்கள் அங்கு களப்பயணத்தை மேற்கொண்டன.

மாலைதீவில் ஆரம்பமான இந்த கொள்வனவாளர் - விற்பனையாளர் சந்திப்பு அமர்வை நடாத்துவதில் ஏற்பாட்டாளர்கள் மேற்கொண்ட விஷேட ஏற்பாடுகள் குறித்து இலங்கை நிறுவனங்கள் திருப்தி தெரிவித்தன.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

மாலி

2022 செப்டம்பர் 23

Please follow and like us:

Close