‘ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் மனித அபிவிருத்தி அறிக்கை - 2020’ இன் பிரதியை ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ரொபர்ட் ஜுகாம் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களிடம் 2021 ஜனவரி 05ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து கையளித்தார்.
இலங்கையுடனான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஒத்துழைப்பை பாராட்டிய வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன, கோவிட்-19 சார்ந்த ஆரம்பத் தலையீடுகளின் போதான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிபலிப்பு குறித்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். ஏனைய அம்சங்களுக்கு மத்தியில், இலங்கையின் இலவசக் கல்வி மற்றும் சுகாதாரக் கொள்கைகள் மனித அபிவிருத்தியிலான நாட்டின் சாதனைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆரம்ப உரையில் குறிப்பிட்டது போல, நிலையான அபிவிருத்தியை அடைவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். நுண்கடன் திட்டங்கள் மற்றும் அதனுடன் சார்ந்த பாதிப்புக்கள், டிஜிட்டல் உட்கட்டமைப்பிலான முன்னேற்றம், மனித - யானை மோதல் போன்ற மக்களைப் பாதிக்கும் பலவிதமான பிரச்சினைகள் குறித்து அமைச்சர் கலந்துரையாடினார். நிலையான அபிவிருத்தி இலக்குகள் சார்ந்த விடயங்கள் உள்ளடங்கலாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் இலங்கையுடன் இணைந்து செயற்படக்கூடிய பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
முதல் அறிக்கையிலிருந்து 30 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நாடு அடைந்து கொண்டுள்ள முன்னேற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஜுகாம் இலங்கையை பாராட்டினார். காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் விளைவுகளை நிவர்த்தி செய்வதற்கான இலங்கையின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார். பல அரச முகவரமைப்புக்களுடன் இணைந்து பணிபுரியும் பல்வேறு துறைகளில், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் தொடர்ச்சியான உதவிகள் குறித்து விளக்கமொன்றை வழங்கிய அவர், இலங்கையுடனான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். இலங்கைக்கு நிலுவையில் உள்ள 'மெய்நிகர் பணி' குறித்தும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான பிராந்தியப் பணிப்பாளரால் குறிப்பிடப்பட்டது.
உலகின் அனைத்து நாடுகளையும் அவற்றின் மனித அபிவிருத்தியின் அளவைக் கொண்டு தரவரிசைப்படுத்தும் மனித அபிவிருத்தி அறிக்கையும் அதன் மனித அபிவிருத்திக் குறியீடும், அபிவிருத்திப் பகுதியில் ஒரு சக்திவாய்ந்த குரலாகத் திகழ்கின்றது. மனித அபிவிருத்தி சார்ந்த காலப்பகுதியில் நிலையான முன்னேற்றத்தையும் குறிப்பிடத்தக்க சாதனைகளையும் இலங்கை எய்தியுள்ளது. உலகளாவிய மனித அபிவிருத்திக் குறியீட்டுத் தரவரிசையில் இலங்கை 72வது இடத்தில் உள்ளது.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 ஜனவரி 06