பிரார்த்தனை, கரோல் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளுடன் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 2021 டிசம்பர் 22ஆந் திகதி கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டது.
தெற்கு அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், எமன் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளின் அப்போஸ்தலிக்க விகாரியேட் வணக்கத்திற்குரிய தந்தை ரோய் கிளாரன்ஸ் சாப்ளின் அவர்களின் பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. மத அனுஷ்டானங்களைத் தொடர்ந்து, அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் உணர்வில் அனைவரையும் ஒன்றிணைப்பதில் கிறிஸ்மஸின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, தந்தை ரோய் கிளாரன்ஸ் சாப்ளின் கிறிஸ்மஸ் செய்தியை வழங்கினார். மேலும், கோவிட்-19 தொற்றுநோயின் காரணமாக ஏற்பட்ட சிரமங்களைப் பொருட்படுத்தாமல், நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சமூகத்தை ஒன்றிணைக்கும் இத்தகைய ஆரோக்கியமான மாலையை ஏற்பாடு செய்ய எடுத்த முயற்சிகளுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் மல்ராஜ் டி சில்வா மற்றும் தூதரக ஊழியர்களுக்கு அவர் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
சிறப்புரை ஆற்றிய தூதுவர் மல்ராஜ் டி சில்வா, நிகழ்வில் கூடியிருந்தவர்களுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் உலகம் முழுவதும் வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், இலங்கையின் செழுமையான கலாச்சார நடைமுறைகளை வெளிநாட்டிலும் வெளிப்படுத்தும் நிகழ்வில் இளம் தலைமுறையினர் கிறிஸ்மஸ் கரோல் பாடுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். தூதரக ஊழியர்களும் கிறிஸ்மஸ் கரோல்களைப் பாடியதுடன், இது ஒன்று கூடியிருந்தவர்களை மகிழ்வித்தது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நிலவும் கோவிட்-19 வழிகாட்டுதல்களுக்கு இணங்க, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இலங்கையர்கள் இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்டனர். நிகழ்வின் இறுதியில் அனைத்து விருந்தினர்களுக்கும் இலங்கை உணவு பரிமாறப்பட்டது.
இலங்கைத் தூதரகம்,
அபுதாபி
2021 டிசம்பர் 30