ரஷ்ய நாட்டிற்கு விஜயம் செய்த சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் குழுவினருக்காக, ரஷ்யக் கூட்டமைப்பின் பி.ஜே.எஸ்.சி. ஏரோஃப்ளொட் உடன் 2021 செப்டம்பர் 03ஆந் திகதி மொஸ்கோவில் ஏரோஃப்ளொட் தலைமையகத்தில் ஒரு சந்திப்பை மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்தது. மொஸ்கோ - கொழும்பு இடையே 2021 நவம்பர் 04ஆந் திகதி ஆரம்பமாகவுள்ள புதிய நேரடி சேவையைத் தொடங்குவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக பி.ஜே.எஸ்.சி. ஏரோஃப்ளொட் இன் அதிகாரிகள் இந்த சந்திப்பின் போது குறிப்பிட்டனர்.
இலங்கையை பாதுகாப்பான மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக, முன்னணி சர்வதேச விமான நிறுவனங்களுடன் இணைந்து இலங்கை அரசாங்கம் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏரோஃப்ளொட்டின் உயர் அதிகாரிகளுடனான இந்தக் கலந்துரையாடல் அத்தகைய ஊக்குவிப்பு முயற்சியின் தொடக்கமாகும்.
மொஸ்கோவிலிருந்து கொழும்புக்கான நேரடி விமானங்கள் தொடர்பான விமான செயற்பாட்டுப் பிரச்சினைகள் மற்றும் அத்தகைய பிரச்சினைகளுக்கு இலங்கை அதிகாரிகள் எப்படி தீர்வு காண முடியும், சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து தொடர்பான விடயங்கள் மற்றும் இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு சாத்தியக்கூறுகள், இரு நாடுகளுக்கும் பொருந்தும் மேம்படுத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள், தடுப்பூசித் திட்டம் மற்றும் ஏரோஃப்ளொட்டுடன் இலங்கை அதிகாரிகள் தமது செயற்பாடுகளை எவ்வாறு தொடங்குவது மற்றும் சுமுகமாகத் தொடர்வது போன்ற விடயங்கள் குறித்து ஏரோஃப்ளொட் நிர்வாகத்துடனான இந்த சந்திப்பின் போது இலங்கைப் பிரதிநிதிகள் கலந்துரையாடினர்.
இந்தக் கலந்துரையாடலில், வெளி உறவுகள் மற்றும் கூட்டணித் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி. நடால்யா ஆர். தீமுராசோவா, விற்பனைத் திணைக்களத்தின் திணைக்களத்தின் திரு. ஆர்.இசட். அஸ்மத்துல்லோவ், விமான அதிகாரிகள் மற்றும் அமைப்புக்களுடன் பணிபுரியும் திணைக்களத்தின் தலைவர் திரு. ஐ.வி. செர்னிஷோவ், வலையமைப்புப் பகுப்பாய்வு மற்றும் திட்டத் திணைக்களத்தின் பிரதித் தலைவர் திரு. என்.என். போப்ரோவ், வெளியுறவுகள் மற்றும் கூட்டணி திணைக்களத்தின் தலைமை நிபுணர் திரு. ஏ.பி. சுகுனோவ் மற்றும் திரு. ஐவன் ஜி.படனோவ், திரு. அன்டன் பி. மியாகோவ் ஆகியோர் பி.ஜே.எஸ்.சி. ஏரோஃப்ளொட்டை பிரதிநிதித்துவம் செய்தனர்.
விமானப் போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. சுனில் குணவர்தன, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) பிரதித் தலைவர் திரு. ராஜீவ் சூரியஆராச்சி, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் ஆலோசகர் ஒருங்கிணைப்பாளர் திரு. நிமேஷ் ஹேரத் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரின் ஊடக செயலாளர் திரு. பிரதீப் குமார ஆகியோர் இலங்கைத் தூதுக்குழுவில் இணைந்திருந்த அதே வேளை, மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முதல் செயலாளர் (வணிகம்) திருமதி. தவிஷ்யா முல்லேகம்கொட மற்றும் மொழிபெயர்ப்பாளர் திருமதி அன்னா மகரோவ்ஸ்கயா ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
2021 ஜனவரி 21ஆந் திகதி எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து, இலங்கைக்கு ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், 2021 நவம்பர் 04ஆந் திகதியிலிருந்து ஏரோஃப்ளொட்டின் நேரடி விமானங்கள் தொடங்கப்படுவதால், ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என இலங்கைத் தரப்பு குறிப்பிட்டது.
இலங்கைத் தூதரகம்
மொஸ்கோ
2021 செப்டம்பர் 16