உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியுடன் சந்திப்பு

 உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியுடன் சந்திப்பு

 

தமிழ்நாடு மாநிலத்துடனான ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், ஜூன் மாத தொடக்கத்தில் அதன் முதலமைச்சருடனான சந்திப்பின் தொடர்ச்சியாகவும், இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, தூத்துக்குடி தொகுதி மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கருணாநிதியை 2022 ஆகஸ்ட் 04ஆந் திகதி புது தில்லியில் வைத்து சந்தித்தார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லி வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கருணாநிதி, தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மகளும், தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலினின் சகோதரியும் ஆவார்.

மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் உயர்ஸ்தானிகர் மொரகொடவை அன்புடன் வரவேற்றார்.  அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மிகவும் சுமுகமான கலந்துரையாடலின் போது, தற்போதைய பொருளாதார நிலைமையை நிர்வகிப்பதற்கு உதவுவதற்காக இலங்கைக்கு வழங்கி வரும் மனிதாபிமான உதவிகளுக்கு உயர்ஸ்தானிகர் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையிலான மிக நெருக்கமான இன, மத மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் குறித்து கருத்துக்களை உயர்ஸ்தானிகரும் பாராளுமன்ற உறுப்பினரும் பரிமாறிக்கொண்டதுடன், அவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும்  கலந்துரையாடினர்.

உயர்ஸ்தானிகர் மொரகொட தனது நாடாளுமன்ற உரைகள் அடங்கிய புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பின் பிரதியையும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் வழங்கினார். 2006ஆம் ஆண்டு அதே புத்தகத்தின் பிரதியை அவரது தந்தை மறைந்த முன்னாள் தமிழக  முதல்வர் மு. கருணாநிதிக்கு வழங்கியதை உயர்ஸ்தானிகர் நினைவு கூர்ந்தார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) மூத்த உறுப்பினரும் கவிஞருமான கனிமொழி கருணாநிதி கட்சியின் கலை, இலக்கியம் மற்றும் பகுத்தறிவுப் பிரிவின் தலைவராக செயற்படுகின்றார்.  இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு பத்திரிகையாளராகப் பணியாற்றினார்.

உயர்ஸ்தானிகர் மொரகொட, பிரதி உயர்ஸ்தானிகர் நிலூக கதுருகமுவ மற்றும் புது தில்லியில்  உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அமைச்சர் ஆலோசகர் காமினி சரத் கொடகந்த ஆகியோரும் இணைந்திருந்தனர்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

புது தில்லி

2022 ஆகஸ்ட் 08

Please follow and like us:

Close