உக்ரைனுக்கு அங்கீகாரம் பெற்ற இலங்கைத் தூதுவர் எம். ரிஸ்வி ஹசன் தனது நற்சான்றிதழ் கடிதத்தை 2021 டிசம்பர் 09 ஆந் திகதி கீவ், மரின்ஸ்கிஜ் அரண்மனையில் நடைபெற்ற விழாவின் போது உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் கையளித்தார்.
இந்த நிகழ்வின் போது, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வாழ்த்துக்களை தூதுவர் தெரிவித்தார். ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது உரையில், சீ.ஓ.பி.26 காலநிலை உச்சிமாநாட்டின் பக்க அம்சமாக ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பை நினைவு கூர்ந்தார். இலங்கைக்கும் உக்ரைனுக்கும் இடையில் நிலுவையில் உள்ள ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எடுத்துரைத்தார் (அதாவது முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான ஒப்பந்தம், இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பதற்கான ஒப்பந்தம், வருமானம் மீதான வரிகள் தொடர்பான நிதி ஏய்ப்பைத் தடுப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான அரசாங்கங்களுக்கிடையேயான கூட்டுக் குழுவை நிறுவுவதற்கான ஒப்பந்தம்).
இலங்கைக்கும் உக்ரைனுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து உக்ரைனின் பிரதி வெளிவிவகார அமைச்சர் செனிக் டிமிட்ரோ, உக்ரைனின் அரச இடம்பெயர்வு சேவையின் தலைவர் நடாலியா நவுமென்கோ, வெளியுறவுக் கொள்கை மற்றும் நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கான குழுவின் தலைவர் ஒலெக்சாண்டர் மெரெஷ்கோ மற்றும் அரச எல்லைக் காவல் சேவையின் அதிகாரிகளுடன் தூதுவர் ஆக்கபூர்வமான சந்திப்புக்களில் ஈடுபட்டார்.
ஸ்கைஅப் எயார்லைன்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிமிட்ரோ செரூகோவைச் சந்தித்த தூதுவர், உக்ரைனில் இருந்து இலங்கைக்கு 2021 டிசம்பர் 27ஆந் திகதி ஆரம்பமாகும் ஸ்கைஅப் பட்டய விமானச் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். ஸ்கைஅப் பட்டய விமானங்கள் வாரத்திற்கு இரண்டு முறை இலங்கைக்கு இயக்கப்படும்.
மேலும், பயண முகவர்கள் மற்றும் இலங்கை மற்றும் ஏனைய ஆசிய இடங்களைக் கையாளும் வெளிச்செல்லும் சுற்றுலா நடத்துநர்களுடன் தூதுவர் ஊடாடும் அமர்வுகளில் ஈடுபட்டதுடன், இலங்கையில் சமீபத்தில் தளர்த்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் உள்வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் குறித்து அவர்களுக்கு விளக்கினார்.
இலங்கைத் தூதரகம்,
அங்காரா
2021 டிசம்பர் 15