இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு அமைச்சு ஆகியவற்றின் ஆதரவுடன், ஈரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தெஹ்ரானில் உள்ள அதன் சான்சரி வளாகத்தில் 'பயண இலக்கு இலங்கை' என்ற சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வை 2021 அக்டோபர் 26ஆந் திகதி ஏற்பாடு செய்தது. ஈரானின் பயண வர்த்தகம், விமான நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய துறைகளைச் சேர்ந்த சுமார் 60 பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். தொற்றுநோய் சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான கோரிக்கைகள் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பின்னர், ஈரானிய சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான பயண இடமாக இலங்கையை மீண்டும் மேம்படுத்துவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.
ஆரம்ப உரையை நிகழ்த்திய ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் விபுலதேஜ விஸ்வநாத் அபோன்சு விருந்தினர்களை வரவேற்றதுடன், தனித்துவமான குணாதிசயங்கள், செழுமையான பன்முகத்தன்மை மற்றும் நட்புறவான மக்கள் ஆகியவற்றின் காரணமாக இலங்கையை பிரபலமான இடமாக மேம்படுத்துவதில் இலங்கைத் தூதரகத்துடன் கைகோர்ப்பதற்கான அவர்களது அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தைப் பாராட்டினார். இலங்கையின் அரவணைப்பையும் விருந்தோம்பலையும் அனுபவிக்குமாறு விருந்தினர்களை வரவேற்ற அதேவேளை, தூதரக சுற்றுலாத் திட்டத்திற்கு ஏற்ப வருடத்திற்கு குறைந்தது 1% ஈரானிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு பயணிப்பதற்கு ஊக்குவிப்பதற்கான அவர்களது ஆதரவைக் கோரினார்.
இலங்கை சுற்றுலா உத்தி, முன்னோக்கிச் செல்லும் வழி மற்றும் இலங்கையில் தங்கியிருக்கும் போது விருந்தினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய தற்போதைய சுகாதார நெறிமுறைகள் குறித்து இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் பதில் முகாமைத்துவப் பணிப்பாளர் மதுபானி பெரேரா மெய்நிகர் முறையிலான தனது உரையில் விளக்கினார். ஈரானில் இருந்து இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்குவிப்பதற்கான இலத்திரனியல் பயண அங்கீகார வீசா உள்ளிட்ட தற்போதைய சுற்றுலா நடைமுறைகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கினார். சிறந்த சுற்றுலாத் தலமாக இலங்கையை நிலைநிறுத்திய விவேகமான ஈரானிய விருந்தினர்களுக்காக, இலங்கையின் விருந்தோம்பல், இயற்கை, ஆயுர்வேத மரபுகள், பல்வேறு கலாச்சாரப் பாரம்பரியம், வண்ணமயமான திருவிழாக்கள், வழக்கமான உணவுகள் மற்றும் ஏனையவற்றை மதிப்பிடும் வகையில் சந்தை இயக்கவியல் மற்றும் சுற்றுலாத் தயாரிப்புகள் குறித்த விரிவான விளக்கமொன்றை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் பணிப்பாளர் (சந்தைப்படுத்தல்) துஷான் விக்கிரமசூரிய வழங்கினார்.
தமது உரைகளின் போது, இலங்கை சுற்றுலா ஹோட்டல் சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அமல் குணதிலக்க, இலங்கைக்கு உள்வரும் சுற்றுலா செயற்பாட்டாளர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பந்துல விதான மற்றும் இலங்கை சுற்றுலாத்துறையிலான சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சிகள் சங்கத்தின் உறுப்பினர் மேர்வின் பெர்னாண்டோபுள்ளே ஆகியோர் நாட்டின் சுற்றுலா நடவடிக்கைகளில் தமது அண்மைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். கோவிட்-19 சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி அதிகபட்ச பாதுகாப்புடன் அதிகமான ஈரானிய சுற்றுலாப் பயணிகளைப் நாட்டில் பெற்றுக் கொள்வதற்கும், சிறந்த சேவைகளை எளிதாக்குவதற்குமான இலங்கை சுற்றுலாத் துறையின் தயார்நிலையை அவர்கள் எடுத்துரைத்தனர்.
ஈரானின் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா முகவர்கள் சங்கம் சார்பில், கலிவர் ட்ரவல் ஏஜென்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஃபரிபோயிஸ் சயீதி தனது சுருக்கமான கருத்துக்களில், மகிழ்வான மாலைப்பொழுதில் தனக்கும், நிகழ்வின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்த இலங்கைத் தூதுவர் மற்றும் பணியாளர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்தார். மேலும் ஈரானிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்புவதற்கான தனது சங்கத்தின் முழுமையான ஆதரவையும் அவர் உறுதியளித்தார்.
ஈரான் இஸ்லாமியக் குடியரசில் இலங்கைத் தூதரகத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட இன்ஸ்டக்கிராம் கணக்கைத் தொடங்குவதும் நிகழ்வில் முக்கிய அம்சமாக அமைந்தது. இலங்கை சுற்றுலா தொடர்பான ஆவணப்படமும் திரையிடப்பட்டது.
தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கைத் தேயிலை ஊக்குவிப்பு நிகழ்வுடன் பங்கேற்பாளர்களுக்கு சிறந்த தேநீர் விருந்தும் வழங்கப்பட்டது. இலங்கைத் தேயிலை மற்றும் நினைவுச் சின்னங்கள் அடங்கிய பரிசுப் பொதி அனைத்து விருந்தினர்களுக்கும் வழங்கப்பட்டது.
இலங்கைத் தூதரகம்,
தெஹ்ரான்
2021 அக்டோபர் 31