ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் விபுலதேஜ விஷ்வநாத் அபோன்சு 2021 செப்டம்பர் 26ஆந் திகதி தெஹ்ரானில் உள்ள சதாபாத் வளாகத்தில் உள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் ஆயதுல்லா சையித் எப்ராகிம் ரைசியிடம் தனது நற்சான்றிதழ்களைக் கையளித்தார். முறையான தனது நற்சான்றிதழ் கையளிப்பு விழாவைத் தொடர்ந்து, தூதுவர் மற்றும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
தூதுவர் விஷ்வநாத் அபோன்சுவை வரவேற்ற ஜனாதிபதி எப்ராஹிம் ரைசி, இலங்கையுடனான நீண்டகால மற்றும் வரலாற்று உறவுகளைப் பாராட்டியதுடன், இரு நாடுகளுக்கிடையேயான உறவின் அபிவிருத்திக்கான அனைத்துத் திறன்களையும் செயற்படுத்த ஈரான் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக இலங்கை மற்றும் ஈரான் இடையே பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழுவின் முக்கியத்துவத்தைப் பாராட்டிய அதே வேளையில், பலதரப்பு அரங்குகளில் நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஆதரவைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கை மக்களிடமிருந்து ஜனாதிபதி எப்ராஹிம் ரைசிக்கான வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர் விஷ்வநாத் அபோன்சு, ஈரானுடனான இருதரப்பு ஈடுபாடுகளை பன்முகத்தன்மை கொண்ட மற்றும் கூட்டு முடிவுகளை நோக்கியதாக உயர்த்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். இருதரப்பு உறவுகளின் நிலைகளை ஆராய்ந்து மேம்படுத்தக்கூடிய பகுதிகளாக, விவசாயப் பொருட்கள், ஆற்றல், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றின் வர்த்தகத்திற்கு அவர் குறிப்பாக முக்கியத்துவம் அளித்தார்.
குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையேயான தொழில்நுட்ப மற்றும் பொறியியல் துறைகளில் வர்த்தக உறவுகளின் அபிவிருத்தி மற்றும் அனுபவப் பரிமாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்புக் கூட்டு சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முன்மொழிவுகள் மற்றும் நிலுவையில் உள்ள விடயங்கள் குறித்து கவனம் செலுத்தலாம் என தூதுவர் தெரிவித்தார். இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளைக் குறிப்பிட்டு, ஈரான் மக்களின் சமாதானம் மற்றும் செழிப்புக்காக அவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அரசியல் விவகாரங்களுக்கான பிரதி வெளிநாட்டு அமைச்சர் அலி பகேரி, ஜனாதிபதி அலுவலகத்தின் விழாக்கள் மற்றும் நெறிமுறை பிரதி அதிகாரி மஜித் நொயி, அரசியல் விவகாரங்களுக்கான பிரதி அதிகாரி எம். ஜம்ஷிதி மற்றும் தகவல் தொடர்பாடல் மற்றும் தகவல் பிரதி அதிகாரி ஏ. ஹொனர்மண்ட் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தற்போதைய பதவிக்கு முன்னர், தூதுவர் விஷ்வநாத் அபோன்சு இலங்கை வெளிநாட்டு அமைச்சில் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் பிரிவின் முதலாவது பணிப்பாளர் நாயகமாகவும், கொன்சியூலர் விவகாரப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றினார். சிங்கப்பூரில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் உயர்ஸ்தானிகராகப் (பதில்) பணியாற்றிய அவர், இந்தியா, சவுதி அரேபியா மற்றும் பங்களாதேஷில் பதவிகளை வகித்துள்ள 19 வருட கால சேவையுடன் கூடிய ஒரு தொழில்முறை இராஜதந்திரி ஆவார் (இலங்கை வெளிநாட்டு சேவை - தரம் I).
தூதுவர் விஷ்வநாத் அபோன்சு கொழும்பு பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் முதலாவது பட்டம், இலங்கையின் களனி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் மற்றும் இந்தியாவின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றவராவார். அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் முதுகலை டிப்ளோமா மற்றும் வழிகாட்டுதலில் தேர்ச்சி பெற்றவராவார். தூதுவர் விஷ்வநாத் அபோன்சு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் பணிப்பாளராகவும், மெத்சவிய அமைப்பின் முன்னாள் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளதுடன், மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.
இலங்கைத் தூதரகம்,
தெஹ்ரான்
2021 செப்டம்பர் 30