இலங்கை மற்றும் இந்திய பொருளாதார உறவுகளை மூலோபாய மட்டத்திற்கு உயர்த்துவதற்கு எட்டு உந்துதல் பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவத்தை உயர்ஸ்தானிகர் மொரகொட வலியுறுத்தல்

இலங்கை மற்றும் இந்திய பொருளாதார உறவுகளை மூலோபாய மட்டத்திற்கு உயர்த்துவதற்கு எட்டு உந்துதல் பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவத்தை உயர்ஸ்தானிகர் மொரகொட வலியுறுத்தல்

அண்மையில் இலங்கை நிதியமைச்சரின் இந்திய விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட நான்கு தூண் ஒத்துழைப்புப் பொதியின் நான்காவது தூணுக்கு அமைய, இலங்கை - இந்திய உறவுகளை பரிவர்த்தனைக் கட்டத்தில் இருந்து ஒரு மூலோபாயக் கட்டத்திற்கு நகர்த்துவதற்கான எட்டு உந்துதல் பகுதிகளை அபிவிருத்தி செய்வது மிகவும் முக்கியமானதாகும் என இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட குறிப்பிட்டார்.

உயர்ஸ்தானிகர் மொரகொட தனது கொள்கை வரைபடமான 'இந்தியாவில் 2021/2023 இல் உள்ள இலங்கை இராஜதந்திர பணிகளுக்கான ஒருங்கிணைந்த நாட்டு மூலோபாயம்' குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று (27) புதுடெல்லியை தளமாகக் கொண்ட முதன்மையான சிந்தனைக் குழுவான விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட மெய்நிகர் நிகழ்வில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த நாட்டு மூலோபாயத்தை டெல்லியில் உள்ள சிந்தனையாளர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக, இதுபோன்ற நிகழ்வுகளின் தொடர் பாகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மெய்நிகர் நிகழ்வில், ஒருங்கிணைந்த நாட்டு மூலோபாயத்தில் எதிர்பார்க்கப்படும் இலங்கை - இந்திய உறவை ஒரு மூலோபாய மட்டத்திற்கு உயர்த்துவதற்காக, பெட்ரோலியம், மின்சாரம், துறைமுகங்கள், சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், ஏற்றுமதி, உற்பத்தி மற்றும் விவசாயம் ஆகிய துறைகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை உயர்ஸ்தானிகர் மொரகொட விளக்கினார். இந்த சூழலில், திருகோணமலையை எரிசக்தி மையமாக மாற்றும் நோக்கில், இந்தியாவின் ஒட்டுமொத்த எரிசக்தி மூலோபாயத்துடன் திருகோணமலை எண்ணெய் தாங்கிப் பண்ணைகளையும், திருகோணமலைத் துறைமுகத்தையும் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

நிகழ்வின் ஆரம்பத்தில் பிரதி உயர்ஸ்தானிகர் நிலுக கதுருகமுவவினால் பங்குபற்றியவர்களுக்கு ஒருங்கிணைந்த நாட்டு மூலோபாயம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், உயர்ஸ்தானிகரின் கருத்துகளைத் தொடர்ந்து மக்களுடனான தொடர்புகள், இணைப்பு, ஆற்றல் உட்பட இருதரப்பு உறவின் பல அம்சங்களை மையமாகக் கொண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

மெய்நிகர் நிகழ்வில் ஏராளமான பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். தூதுவர் தினகர் ஸ்ரீவஸ்தவ், ஈரானுக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் லெப்டினன்ட் ஜெனரல் ரவி சாவ்னி, இராணுவத்தின் முன்னாள் துணைத் தலைவர் மற்றும் இந்திய கப்பல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி அனில் தேவ்லி உள்ளிட்டோர் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்த அமர்வை விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளையின் பணிப்பாளர் கலாநிதி. அரவிந்த் குப்தா நெறிப்படுத்தினார்.

தரமான ஆராய்ச்சி மற்றும் ஆழமான ஆய்வுகளை ஊக்குவிக்கும் ஒரு சுயாதீனமான, பாரபட்சமற்ற நிறுவனமான விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளை, 2009 இல் நிறுவப்பட்டதுடன, இந்தியாவின் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அதன் ஸ்தாபகப் பணிப்பாளராவார். அதன் தற்போதைய பணிப்பாளரான கலாநிதி. அரவிந்த் குப்தா இந்தியாவின் முன்னாள் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆவார்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

புதுடெல்லி

2022 ஜனவரி 31

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close