இலங்கை மற்றும் இந்தியாவின் எம்.ஐ.சி.இ. சுற்றுலாவை அமைப்பது குறித்த வெபினார்

 இலங்கை மற்றும் இந்தியாவின் எம்.ஐ.சி.இ. சுற்றுலாவை அமைப்பது குறித்த வெபினார்

இந்தியாவின் மேற்குப் பிராந்தியத்தில் இலங்கையை சுற்றுலாத் தலமாக முன்னெடுக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம், இலங்கை மாநாட்டுப் பணியகத்துடன் இணைந்து, இலங்கையில் எம்.ஐ.சி.இ. (கூட்டங்கள், ஊக்கத்தொகை, மாநாடுகள், கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகள்) சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக 2021 அக்டோபர் 06ஆந் திகதி மெய்நிகர் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்தது.

மும்பையில் இருந்து சுற்றுலா செல்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பெருநிறுவனங்களின் கோவிட் பிந்தைய  தேவைகளைக் கருத்தில் கொண்டு, இலங்கையை சாதகமான எம்.ஐ.சி.இ. இலக்காகக் காண்பிப்பதற்காக இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடரக்கவுரையை இலங்கையின் துணைத் தூதுவர் கலாநிதி. வல்சன் வெட்டோடி வழங்கினார். தனது உரையின் போது, தீவிரமான முடக்கநிலை மற்றும் விரிவான தடுப்பூசித் திட்டத்தைப் பின்பற்றுவதன் மூலம் நாட்டில் கோவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக இலங்கை அனைத்து நிறுவன மற்றும் வணிக ஈடுபாட்டையும் வரவேற்கத் தயாராக இருப்பதாக துணைத் தூதுவர் தெரிவித்தார். பாரம்பரிய சுற்றுலாவைத் தவிர, முக்கிய எம்.ஐ.சி.இ. மற்றும் வணிக நிகழ்வுகளை நடாத்துவதில் இலங்கைக்கு நீண்ட பாரம்பரியம் இருப்பதை அவர் மேலும் குறிப்பிட்டார். இது சம்பந்தமாக இலங்கையின் பலம் சர்வதேச உட்கட்டமைப்பு மற்றும்  அனைத்து அளவிலான மாநாடுகள் மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கான வசதிகளில் உள்ளதாகவும், இது கடற்கரைகள் முதல் கலாச்சாரம், பாரம்பரியம், வனவிலங்கு மற்றும் மலைகள், பல்வேறு சர்வதேசத் தரங்களுடன் பொருந்தக்கூடிய சுவையான உணவு வகைகள் ஆகியவற்றால் ஆதரிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் கலாச்சாரப் பாரம்பரியத்தையும் விருந்தோம்பலையும் சித்தரிக்கும் இரண்டு காணொளிகளுடன்  வெபினார் தொடங்கியது. எம்.ஐ.சி.இ. சுற்றுலாத் தலமாக இலங்கை எவற்றை வழங்குகின்றது மற்றும் இந்தத் துறையின் கீழான இலங்கையின் திறன்கள் பற்றிய விளக்கக்காட்சியை இலங்கை மாநாட்டுப் பணியகத்தின் பொது முகாமையாளர் திரு. கிருஷாந்த பெர்னாண்டோ வழங்கினார். தமது அடுத்த நிறுவன நிகழ்வை இலங்கையில் ஏற்பாடு செய்யுமாறு அவர் எம்.ஐ.சி.இ. சுற்றுலா இயக்குனர்கள் மற்றும் வெபினாரில் இணைந்திருந்த பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

முக்கிய தொழில் பங்குதாரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய பேச்சாளர்களும் வெபினாரின் போது தமது  கருத்துக்களை வெளிப்படுத்தினர். இலங்கை தொழில் பங்குதாரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், இலங்கை தொழில்முறை மாநாடு, கண்காட்சி மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்களின் தலைவர் திரு. இம்ரான் ஹசன் மற்றும் இலங்கையின் சுல்லாப் பயணிகள் ஹோட்டல் சங்கத்தின் தலைவர் திரு. சனத் உக்வத்தே ஆகியோர் இலங்கையின் எம்.ஐ.சி.இ. சேவை வழங்குநர்கள் மற்றும் விடுதித் துறை எவ்வாறுள்ளது மற்றும் எவ்வாறான எம்.ஐ.சி.இ. இயக்கத்தைப் பூர்த்தி செய்யத் தயாராக உள்ளது என்பது குறித்து விளக்கினர். பெருநிறுவன நிகழ்வுகளை நடத்துவதைத் தவிர, திருமண விழாக்களை, குறிப்பாக, குறைந்த செலவில் ஆடம்பர இந்தியத் திருமணத்தை நடத்தும் இலங்கையின் திறனும் சிறப்பிக்கப்பட்டது.

இந்திய சுற்றுலா முகவர்கள் சங்கத்தின் துணைத் தலைவரும், இந்திய சுற்றுலா முகவர்கள் கூட்டமைப்பின்  நிர்வாக உறுப்பினருமான திரு. ஜெய் பாதியா இந்தியப் பயணிகளுக்காக இலங்கையைத் திறப்பதற்கும், நுழைவுத் தேவைகளை மேலும் தளர்த்துவதற்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், இலங்கையை தமது வாடிக்கையாளர்களிடையே எம்.ஐ.சி.இ. இலக்காக ஊக்குவிப்பதற்கு ஒப்புக்கொண்டார்.

மேற்கண்ட பிரதிநிதித்துவங்களைத் தவிர, இலங்கை மாநாட்டுப் பணியகத்தின் அதிகாரிகள், 2022ஆம் ஆண்டில் இந்தியாவுக்காக வரிசைப்படுத்தப்பட்ட இலங்கை மாநாட்டுப் பணியகத்தின் ஊக்குவிப்பு நிகழ்வுகள் மற்றும் இலங்கையின் பயண வழிகாட்டுதல்கள் குறித்த சமீபத்திய புதுப்பிப்புக்கள் சந்திப்பில் விளக்கமளித்தனர். வெபினாரில் இணைந்த ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் பிரதிநிதி, இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள 11 கிளை  அலுவலகங்களின் ஆதரவுடன் இந்தியாவில் இருந்து எந்தவிதமான எம்.ஐ.சி.இ. இயக்கத்தையும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தினால் கையாள முடியும் எனத் தெரிவித்தார்.

எம்.ஐ.சி.இ. சுற்றுலா மற்றும் ஊடக ஊழியர்களில் நிபுணத்துவம் பெற்ற 50க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இந்த  சந்திப்பில் கலந்து கொண்டனர். கேள்வி பதில் நிகழ்ச்சியொன்றுடன் இந்த வெபினார் நிறைவடைந்ததுடன், தூதரகத்தின் கொன்சல் (வணிகவியல்) திரு. சந்துன் சமீரவால் ஒருங்கிணைக்கப்பட்டு, நடுநிலையாக்கப்பட்டது.

இலங்கையின் துணைத் தூதரகம்,

மும்பை

2021 அக்டோபர் 12

Please follow and like us:

Close