இலங்கை ஜனாதிபதி ஆபிரிக்கப் பிராந்தியத்தின் தூதுவர்களுடன் சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி ஆபிரிக்கப் பிராந்தியத்தின் தூதுவர்களுடன் சந்திப்பு

ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளுடன் கவனம் செலுத்தி, மீளிணைதல் தொடர்பான அரசாங்கக் கொள்கையின் ஒரு பகுதியாக, ஆபிரிக்கப் பிராந்தியத்தின் தூதுவர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் 2023 பெப்ரவரி 03ஆந் திகதி கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆரம்பக் கருத்துகளை வழங்கிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, ஆபிரிக்கப் பிராந்திய நாடுகளுக்கு இலங்கை வழங்கும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

வலுவான அரசியல் உறவுகள் மற்றும் பல ஆண்டுகளாக பகிரப்பட்ட ஒற்றுமை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு ஆபிரிக்க நாடுகளுடன் சிறந்த உறவுகளை கட்டியெழுப்புவதில் இலங்கை அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாக ஜனாதிபதி விளக்கினார். மோதல்கள் உட்பட தற்போதைய உலகளாவிய முன்னேற்றங்கள் மற்றும் அந்தந்தப் பிராந்தியங்களில் உள்ள நாடுகளில் அவற்றின் சாத்தியமான தாக்கங்கள் குறித்தும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் தற்போதைய அபிவிருத்திகள் மற்றும் பொருளாதார சவால்கள், மற்றும் அவற்றை வெற்றிகொள்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி தூதுவர்களுக்கு விளக்கினார். இதேபோன்ற சவால்களை எதிர்கொள்ளும் மற்றும் வலுவான ஆபிரிக்கப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

ஆபிரிக்கப் பிராந்தியத்தில் இலங்கை காட்டும் ஆர்வத்தைப் பாராட்டிய தூதுவர்கள், இலங்கைக்கும் அந்தந்த நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் தமது ஒத்துழைப்பை உறுதி செய்தனர்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவான் விஜேவர்தன ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். ஆபிரிக்கப் பிராந்தியத்தைச் சேர்ந்த பதினேழு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நேரில் பங்கேற்ற அதே வேளை, மூன்று பேர் மெய்நிகர் ரீதியாக இணைய வழியில் பங்னேகற்றனர். ஆபிரிக்கப் பிராந்தியத்தை தளமாகக் கொண்ட ஐந்து இலங்கைத் தூதுவர்களும் மெய்நிகர் ரீதியாக இணைய வழியில் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 பிப்ரவரி 03

Please follow and like us:

Close