இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கும் திமோர்-லெஸ்தே ஜனநாயகக் குடியரசுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவது தொடர்பான கூட்டு அறிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று, 2022 மே 04, நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகத்தில் நடைபெற்றது.
அந்தந்த அரசாங்கங்கள் சார்பாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான மொஹான் பீரிஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான திமோர்- லெஸ்தேயின் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான கார்லிட்டோ நூன்ஸ் ஆகியோர் கூட்டு அறிக்கையில் கைச்சாத்திட்டனர்.
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு தீவு அரசான திமோர்-லெஸ்தே, திமோர் தீவின் கிழக்குப் பகுதியில் சுமார் 1.3 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. கச்சா - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, கோப்பி, காய்கறிகள் மற்றும் இரும்பு ஆகியன திமோர்-லெஸ்தேயின் முக்கிய ஏற்றுமதி ஆகும். இலங்கை மற்றும் திமோர்-லெஸ்தே ஆகிய இரு நாடுகளும் ஆசியான் பிராந்திய மன்றத்தின் உறுப்பினர்களாக உள்ளதுடன், இதில் இரு நாடுகளும் தமது இருதரப்பு உறவுகளை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
இலங்கைக் கும்திமோர்- லெஸ்தேவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை ஸ்தாபிப்பதன் மூலம் இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்காக அரசியல், சமூகப் பொருளாதார மற்றும் கலாச்சாரத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகம்,
நியூயோர்க்
2022 மே 06