முதன்மை உறுப்பினர்களே,
மேதகையோரே
கனவாட்டிகளே மற்றும் கனவான்களே,
இந்த முக்கிய நிகழ்விற்கு என்னை அழைத்தமைக்காக முதலில் நான் ‘ஸிலிகன் ட்ரஸ்ட் மற்றும் பங்குதாரர்களுக்கும், இன்று இப்பேச்சுவார்த்தையில் உதவியமைக்காக, முகவரமைப்புக்களுக்கும் குறிப்பாக ஜேர்மன் மத்திய அமைச்சு மற்றும் பிற முகவரமைப்புக்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
காலநிலை மாற்றமானது மனிதகுலம் இப்பூவுலகில் வாழ்வதற்கு மிகப்பெரிய ஆபத்தாக ஆகிவருகிறது. காலநிலை விரிவாக்கத்திறனைக் கட்டமைப்பதற்கான பொதுவான நடவடிக்கையை நாம் உள்நாட்டு மற்றும் உலகளாவிய மட்டங்களில் எடுப்பது மிகவும் முக்கியமாகும்.
நடப்பிலுள்ள பொறிமுறைகள் மூலமாக உள்ளூர் மற்றும் தேசிய மட்டங்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் கருத்தில் கொள்வதில் இலங்கை கவனம் செலுத்திவரும் வேளையில், இந்த காலநிலை மாற்றமானது சர்வதேச கவனத்தை ஈர்த்த காலம் தொட்டே உலகளாவிய நடவடிக்கையில் எமது ஈடுபாடும் அர்ப்பணிப்பும் பல்வேறு முன்னெடுப்புகள் மூலமாகத் தொடர்ந்து வருகிறது. காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு ஒப்பந்தத்தின் கீழ் (UNFCCC), வார்சோ சர்வதேச பொறிமுறையின் துறைகள் சம்பந்தமான பணிகளை ஏற்பாடு செய்வதற்காக, தேசிய பொறிமுறையை அமைத்து, காலநிலை மாற்றம் மற்றும் இடர் முகாமைத்துவத்தைக் கருத்தில்கொண்டு, தொடர்ந்தும் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புக்களில் இழப்பு மற்றும் சேதம் குறித்து கவனம் செலுத்திய நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
தேரவாத பௌத்தத்திற்கான பங்களிப்பு மற்றும் சிறப்பு வாய்ந்த நீர்நிலை நாகரிகம் ஆகிய இரண்டு முக்கிய காரணங்களுக்காக எமது தீவு ஆயிரக்கணக்கான வருடங்களாக உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளது. அதாவது; பௌத்த விகாரைகள், 400 இற்கும் மேற்பட்ட புராதன ஏரிகள் மற்றும் நெல் வயல்களைக் கொண்ட எமது பழமையான வரலாறு தொடர்ந்தும் எம்மைக் காப்பாற்றி வருகிறது.
1993 இல் காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு ஒப்பந்தம் (UNFCCC) மற்றும் 2015 இல் பாரிஸ் உடன்படிக்கை ஆகியவை உறுதிப்படுத்தப்பட்டதிலிருந்து, எமது நாடு முக்கிய துறைகளை மையமாகக்கொண்டு, காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை நிவர்த்தி செய்வதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாம் தேசிய மட்டத்தில் காலநிலை விரிவாக்கத்திறன் கட்டமைப்பினை உறுதிசெய்யும் அதேநேரம், காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளைக் குறைப்பதற்கான உலகளாவிய முயற்சிகளில் சர்வதேச சமூகத்துடனும் இணைந்து பணிபுரிகிறோம்.
காலநிலை தொடர்பான நடவடிக்கைக்கு; நாம் நிலையான வளர்ச்சியை அடைதல், அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் பங்கேற்புச் செயன்முறைகள் மூலம் விரிவாக்கத்திறனைக் கட்டியெழுப்புதல், பங்குதாரர்களால் இயக்கப்படும் முடிவெடுக்கும் செயன்முறைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் காலநிலைச் செயற்பாட்டினை நடைமுறைப்படுத்தல் ஆகியவை முக்கியமாகும்.
மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் “செழிப்பு மற்றும் மேன்மையின் காட்சி” தேசிய கொள்கைக் கட்டமைப்பானது, “நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிர”லுக்கு உயர் முன்னுரிமை அளிக்கிறது. புதிதாக தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புச் செயன்முறைகளில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு காலநிலைச் செயற்பாடு மற்றும் “செழிப்பு மற்றும் மேன்மையின் காட்சி” தொலைநோக்கு எவ்விதம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிக்கும் என்பதிலும், கொவிட்-19 தக்கங்களை நிவர்த்தி செய்வதிலும், பசுமைக்காலநிலைக்கு உகந்த வாழ்வாதாரங்கள், திறன் மேம்பாடு மற்றும் இளைஞர் வலுவூட்டல் ஆகியவை மூலமாக அதிகரித்த வேலைவாய்ப்புக்களை உறுதிப்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்துகிறோம். திருத்தப்பட்ட, தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் (NDC); 2016 இல் காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் (UNFCCC) சமர்ப்பிக்கப்பட்ட, தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புக்களைப் (NDC)புதுப்பித்து, வலுப்படுப்படுத்துவதுடன், எமது தேசிய அபிவிருத்தி இலக்குகளில் சமரசம் செய்யாமல் இறுதியாக தேறிய காபன் பூச்சிய நாடாக இலங்கையை மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது.
இன்றைய நிகழ்வில் காலநிலைச் சட்டம் மற்றும் கொள்கை, காலநிலைச் செயற்பாடு மற்றும் விரிவாற்றல் கட்டமைப்பு ஆகியவை குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. ‘முறையான மீட்சி’ என்பது, இலங்கையின் காலநிலை விரிவாற்றலுக்கு வேகமாகப் பங்களிக்கக்கூடிய ஒரு பொதுவான செயல்நோக்கத்தினை நோக்கிப் பல்வேறுபட்டவர்களின் முயற்சிகளை ஒருங்கிணைப்பது எவ்வாறு என்பதற்கு ஒரு உதாரணமாகும். இது கொவிட்-19 இன் தாக்கத்தைப் பொறுத்தவரையில் முறையான மீட்சியை நோக்கிய எமது நகர்வுக்கும் நிலையான அபிவிருத்தியை எட்டுவதற்கும் உதவும்.
இலங்கை 100 இற்கும் அதிகமான ஆறுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. எமது வரலாற்று இலக்கியங்களிலும் பிந்திய கவிதைகளிலும், மறைந்த பி அல்விஸ் பெரேரா, மற்றும் எமது நாட்டின் பிரபல பாடல்களில் ஒன்றிலும், “மஹாவலி களனி களு வளவை கங்கா” என மறைந்த சி டி பெர்னாண்டோவாலும் குறிப்பிடப்படுகிறது என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ஷ, மன்னார் மாவட்டத்தில் 100 மெகா வாட்ஸ் கொள்ளளவுடனான இலங்கையின் மிகப்பெரிய காற்றாலையை திறந்துவைத்துள்ளார் என்பதைக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை அடைவதற்கான அரசாங்கத்தின் தொலைநோக்குடன் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
2030 இல் மொத்த எரிசக்தி பிரிவானது, 40 வீதத்திற்கும் மேற்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கும், நீர் மற்றும் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி ஆதாரங்களிலிருந்து எதிர்பார்க்கப்பட்ட 80 வீத எரிசக்தி மூலங்களுக்கும் இடமளிக்கும். இலங்கை, சதுப்புநிலத் தாவரங்களின் பாதுகாப்பு மற்றும் சீரமைப்பில் உலகத்திற்கு முன்னோடியாகவுள்ளது என்பது; சதுப்புநிலத் தாவரங்களின் சுற்றுச்சூழல் முறைமைகள் மற்றும் வாழ்வாதாரங்கள் குறித்த பொதுநலவாய சமுத்திர சாசன செயல் குழு, 2020 செப்டெம்பரில் சதுப்புநில தாவரங்களின் பாதுகாப்பு மற்றும் நீடித்து நிலைக்கக்கூடிய பயன்பாடு குறித்த ஒரு தேசிய கொள்கையை ஆரம்பித்தமை ஆகியவற்றுடன், கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள, சதுப்புநில தாவரங்களைப் பாதுகாத்தல் மற்றும் நிலைத்து நிற்கக்கூடிய உறுதிப்படுத்தலுக்கான செயல் திட்டத்தை உருவாக்குவதற்கான விரிவான பங்குதாரர் ஆலோசனைகள் ஆகியவை மூலம் தெளிவாகிறது. இவைகள் எல்லாம், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை வினைத்திறனுடன் மட்டுப்படுத்துவதற்கான எமது அர்ப்பணிப்புகளின் சாட்சியங்களாகும்.
எமது நாடு தற்போது, நிலையான நைட்ரஜன் முகாமைத்துவத்தினை தெற்காசிய நிகழ்ச்சி நிரலில் கொண்டுவருவதில் சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புக்களுடன் ஈடுபட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் நைட்ரஜன் கழிவுகளை பாதியாகக் குறைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் நிலையான நைட்ரஜன் முகாமைத்துவம் குறித்த கொழும்பு பிரகடனத்தை அமுல்படுத்துவதற்கேற்ப இது அமைந்துள்ளது. இது காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைத் தணிப்பதில் பயனுள்ள நடவடிக்கைகள் உட்பட பல்வேறு நன்மைகளையும் கொண்டுவரும்.
காலநிலை மாறியும் பூமி வெப்பமடைந்தும் வருவதால், பிளாஸ்டிக் இன்னும் அதிகமான மீதேன் மற்றும் எதிலீன் துகள்களாக உடைந்து, காலநிலை மாற்றத்தின் வீதத்தை அதிகரிக்கச்செய்து இந்த சுழற்சியினை நிரந்தரமாக வைத்திருக்கிறது. இந்த தாக்கங்களைக் குறைப்பதற்காக; இலங்கை சுற்றாடலுக்கு உகந்த மாற்றீடுகளை அறிமுகம் செய்து, 31 மார்ச் 2021 இல், ஒருதடவை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைத் தடைசெய்யும் சட்டரீதியான நடவடிக்கையை முன்னெடுத்தது.
2001 இல் நான் சுற்றாடல் அமைச்சராக இருந்தபோது, இலங்கையில் இடம்பெற்ற ஓசோன் உச்சிமாநாட்டை தலைமையேற்று நடத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சர்வதேச உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொழும்பு பிரகடனம் காலநிலை செயற்பாடுகளுக்கான ஒரு முன்னோடியாகும். அத்துடன், மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவிருந்தபோது, முக்கியமாக, அர்ப்பணிப்பும் அறிவுமுள்ளவர்களது பங்களிப்பு காரணமாக, அறிவிக்கப்பட்ட மழைநீர் கொள்கைக் கட்டமைப்பினையும் நாம் ஏற்றுக்கொண்டோம். “நிலையான நைட்ரஜன் முகாமைத்துவத்தை ஊக்கப்படுத்துவதற்கான காலநிலை மற்றும் பசுமை மீட்சிக்கான நைட்ரஜன்” என்ற COP26 இற்கு முன்னரான மெய்நிகர் நிகழ்வினை அடுத்த வாரம் இலங்கை இணைந்து நடாத்தவுள்ளது.
காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு ஒப்பந்தம் (UNFCCC) மற்றும் பிற பொறிமுறைகளின் கீழ், வளர்ந்துவரும் பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கை போன்ற நாடுகள், காலநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புக்களைக் கவனத்தில் கொள்வதற்கும் பசுங்குடில் வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதற்கும் காலநிலை நிதியங்கள் வழங்கப்படவேண்டுமென நாம் நம்புகிறோம்.
மேதகையோரே, அன்பு நண்பர்களே, இன்னும் அதிகமானவற்றைப் பெற்றுக்கொள்ள நான் உங்களை அழைக்கிறேன். முடிந்தால் எல்லா இளைஞர்களும் பெண்களும் இலங்கையில் தாராளமாகவுள்ள கூடிய மழை நீரையும் சூரிய சக்தியையும் சேகரித்து அவற்றின் இயக்கவாற்றலைப் பயன்படுத்த முன்வரவேண்டும். உலகப் பிரபலமான இலங்கை விஞ்ஞானி பேராசிரியர் சேனநாயக்கா, எமக்குத் தேவையற்ற மற்றும் கழிவு உமிழ்வுகளைக் குறைத்துக்கொள்ளவேண்டுமென குறிப்பிடுவதற்கேற்ப, பௌத்தர்கள் என்ற வகையில் மனநிறைவினைக் கற்றுக்கொண்டுள்ள நாம் எமக்காகவும், எல்லோருக்காகவும் இதைக் கடைப்பிடிப்போமாக.
தொடக்க பேச்சாளர் குறிப்பிட்டதைப் போல, ஒரு வருடத்திற்கு முன்னர் கொழும்பு முடக்கப்பட்டதை நான் நினைவு கூருகின்றேன். 2, 3 நாட்களுக்குள் எமது ஆறுகள் மற்றும் நீர்நிலைகளது மாசுபாடு பூச்சியமானது. அந்த அளவுக்கு எமது நகரங்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு காரணமாகின்றன. இது காலநிலை மாற்றம் குறித்த நடவடிக்கைக்கு உந்துதலை ஏற்படுத்துகிறது. இலங்கையில் நாம் எல்லா உயிரினங்களும் எமது முன்னோரால் எமக்கு அளிக்கப்பட்டவை என குறிப்பிடுவதைப் போல, நாம் எமது தாவரங்களையும் விலங்கினங்களையும் பாதுகாத்து அவற்றின் வளர்ச்சிக்குப் பங்களிக்கவேண்டும். இதுவே புத்தரின் போதனைகளின் சுருக்கமான செய்தியாகவுமுள்ளது.
எனது உரையை முடிப்பதற்கு முன்னர் இறுதியாக, சுற்றுச்சூழல், காடுகள், ஆறுகள், நீர் மற்றும் சுத்தமான காற்று ஆகியவை அடிப்படை உரிமைகள் என எமது புதிய அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்படவேண்டுமென நான் முன்மொழிந்துள்ளமையை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். புதிய எதிர்காலத்தில் இந்த முக்கியமான துறைகளில் நாமெல்லோரும் இணைந்து பணிபுரிவோமென நான் நம்புகிறேன்.
இறுதியாக, இன்றைய பேச்சுவார்த்தையில் ‘ஸிலிகன் ட்ரஸ்ட்’ மற்றும் பல்வேறு பங்கேற்பாளர்கள் மற்றும் அரசாங்க முகவரமைப்புகள் ஆகியவை பெரும் வெற்றியைப் பெறவேண்டுமென வாழ்த்துகிறேன்.
வணக்கம்.