‘தித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதற்காக மியன்மார் அரசாங்கத்தால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 500 மெட்ரிக் டொன் அரிசி தொகை, 2026, பெப்ரவரி 09 அன்று கொழும்பு துறைமுகத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நன்கொடையை இலங்கை அரசாங்கத்தின் சார்பாக வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க பெற்றுக்கொண்டார். இலங்கைக்கான மியன்மார் தூதுவர் மார்லர் தான் ஹ்டைக், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, பேரிடர் முகாமைத்துவ மையம் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகள் முன்னிலையில், அமைச்சர் சமரசிங்கவிடம் சம்பிரதாயபூர்வமாக வழங்கினார்.
தேசிய உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், சமீபத்திய வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி வழங்கவும், இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளை ஆதரிப்பதற்காக இந்நன்கொடை வழங்கப்படுகிறது.
மீட்சி மற்றும் புனரமைப்புக்கான காலத்தில் இலங்கை மக்களுடன் மியன்மாரின் ஒற்றுமையைக் குறிக்கும் வகையில், உரிய நேரத்தில் வழங்கிய உதவிகளுக்கு இலங்கையானது, மியன்மார் அரசாங்கம் மற்றும் மியன்மார் மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2026, பெப்ரவரி 12


