2022 பெப்ரவரி 04ஆந் திகதி கொண்டாடப்பட்ட இலங்கையின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத், 'விளாம்பழம்' (கைத் பழம்) என்ற இலங்கை பழ மரக்கன்று ஒன்றை மஸ்கட்டில் உள்ள ருமைஸ், பர்காவில் உள்ள விவசாய மற்றும் விலங்கு ஆராய்ச்சிப் பணிப்பாளரகத்தில் நட்டார்.
இலங்கையில் வளர்க்கப்படும் ஒரு சிட்ரஸ் வகை பழ மரமான விளாம்பழம் (கைத் மரம்), செரிமானத்தை மேம்படுத்தும் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதம், இரும்பு, கல்சியம் மற்றும் விட்டமின்கள் பி மற்றும் சி போன்ற நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் விட்டமின்கள் உட்பட பல ஆரோக்கிய மற்றும் ஊட்டச்சத்து நன்மைகளைக் கொண்டுள்ளது.
தூதுவர் அமீர் அஜ்வத் தனது பாரியார் அஸ்மியா அமீர் அஜ்வத் அவர்களுடன் இணைந்து, ஓமானின் பேரீச்சம்பழம் மற்றும் தாவர உற்பத்தி நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி. சைஃப் பின் அலி அல்-காமிசி, ஓமான் சுல்தானேற்றின் வெளிநாட்டு அமைச்சின் மேற்கு ஆசியத் துறைத் தலைவர் ஷேக் முகமது பின் அகமது அல் ஷன்ஃபாரி மற்றும் ஓமான் சுல்தானேற்றின் விவசாயம், மீன்வளம் மற்றும் நீர்வள அமைச்சின் அதிகாரிகளின் முன்னிலையில் இலங்கையின் பழ மரக்கன்றுகளை நட்டார். மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் திலினி அபேசேகரவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வத், விவசாய ஒத்துழைப்பில் இலங்கை மற்றும் ஓமானுக்கு பாரிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் இரு நாடுகளுக்குமிடையிலான இந்த ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு உழைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓமானின் விவசாய மற்றும் விலங்கு ஆராய்ச்சி பொதுப் பணிப்பாளரகத்தில் இலங்கை பழ மரக்கன்றுகளை நடுவதற்கு விஷேட ஏற்பாடுகளை செய்தமைக்காக வெளிநாட்டு அமைச்சு மற்றும் ஓமான் சுல்தானேற்றின் விவசாய, மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சு ஆகியவற்றுக்கு தூதுவர் தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இலங்கைத் தூதரகம்,
மஸ்கட்
2022 பிப்ரவரி 11