இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் ஆர்வமுள்ள இலங்கையைச் சேர்ந்த கனேடியர்களை பேச்சுவார்த்தைக்கு உயர்ஸ்தானிகர் நவரத்ன அழைப்பு

 இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் ஆர்வமுள்ள இலங்கையைச் சேர்ந்த கனேடியர்களை பேச்சுவார்த்தைக்கு உயர்ஸ்தானிகர் நவரத்ன அழைப்பு

தூதரகக் குழுவினர், வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் துணைத் தூதரக அலுவலக ஊழியர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் 2022 பெப்ரவரி 04ஆந் திகதி கனடாவின் ஒட்டாவாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் சுதந்திரத்தின் 74வது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது.

தேசியக் கொடி ஏற்றப்பட்டு, இலங்கை மற்றும் கனடாவின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டதுடன் சுதந்திர தின நிகழ்வு ஆரம்பமானதுடன், இலங்கை தேசிய மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. உயர்ஸ்தானிகராலயத்தின் ஊழியர்களால் பாரம்பரிய மங்கள விளக்கு ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து மகா சங்கத்தின் வணக்கத்திற்குரிய உறுப்பினர்கள் மற்றும் இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் மதங்களின் மதப் பிரமுகர்கள் பல சமய வழிபாடுகளை நடாத்தினர்.

இலங்கை ஜனாதிபதியின் உரையை உயர்ஸ்தானிகர் வாசித்ததனைத் தொடர்ந்து இலங்கைப் பிரதமர் மற்றும் வெளிநாட்டு அமைச்சரினால் வெளியிடப்பட்ட சுதந்திர தினச் செய்திகள் வாசிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய உயர்ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரத்ன, நாடு கோவிட்-19 இன் சவால்களை எதிர்கொண்டு, அதன் அச்சுறுத்தலைக் கணிசமாகக் கடப்பதற்கு மத்தியில் சுதந்திர தினக் கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், முன்னணி சுகாதார மாவீரர்களின் சேவைகளைப் பாராட்டினார். அதன்பிறகு, உயர்ஸ்தானிகர் நவரத்ன, பொதுநலவாய விழுமியங்கள், ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் பலதரப்பு மன்றங்களில் உதவி ஆகியவற்றின் அடிப்படையில் 1958 இல் இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் மூலம் 63 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்திருக்கும் கனடாவுடனான நீண்டகால இருதரப்பு உறவு மற்றும் நட்பைப் பாராட்டினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உரையாடலை ஆரம்பிக்குமாறு சமூகத்திற்கு அழைப்பு விடுத்த உயர்ஸ்தானிகர்,

'இன்று, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர தினத்தில், இலங்கை மக்களின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைவரையும் இந்த விடயம் தொடர்பில் என்னைப் பார்வையிடவும், சந்திக்கவும், உரையாடவும் வருமாறு எனது அரசாங்கத்தின் சார்பாக நான் அழைக்க விரும்புகின்றேன். ஒத்த எண்ணம் கொண்டவர்கள் சந்தித்து தமது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வது, நடைமுறையில் உள்ள பிரச்சினைகளைத் திறப்பது, புரிந்துகொள்ள முயற்சிப்பது மற்றும் மெதுவாக நம்பிக்கையை வளர்த்து மீண்டும் மீண்டும் சந்திப்பது மற்றும் ஒன்றாக பணி செய்வதற்கான வாய்ப்புக்களைத் தேடுவது ஆகியவற்றிலிருந்து சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான பல சிறந்த நடைமுறைகள் தொடங்குகின்றன. அவ்வாறு செய்வதன் மூலம், நாங்கள் ஒத்துழைக்கக்கூடிய மற்றும் உறவுகளை உருவாக்கக்கூடிய பகுதிகளை தொடர்ந்தும் கண்டுபிடித்து வருகின்றோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமூகத்தின் ஆதரவைப் பாராட்டி அவர் கூறியதாவது:

'இலங்கை வம்சாவளியைக் கொண்ட கனேடியர்களை, குறிப்பாக இலங்கை - கனடா சங்கங்களை, அவர்களின் தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச மன்றங்களில் செய்யப்பட்ட பிரதிநிதித்துவங்களுக்காக நாங்கள் அங்கீகரிக்கின்றோம். சமாதானம் மற்றும் நல்லிணக்க முன்முயற்சிகள் தொடர்பான பணிகளை நீங்கள் கூட்டாக ஆதரித்து, ஒத்துழைத்து, ஈடுபடும்போது, நீங்கள் அனைவரும் அந்தந்த இனங்களான தமிழ், முஸ்லிம், பறங்கியர் மற்றும் சிங்களத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதும் கட்டாயமாகும்'.

கனடாவின் ஆசிய பசிபிக் பிராந்திய விவகாரங்களுக்கான உதவிப் பிரதி அமைச்சர் திரு. பால் தோப்பில் மெய்நிகர் கொண்டாட்டத்தில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டார். பொதுநலவாய அமைப்பில் இலங்கை நுழைவதை கனடா வரவேற்றதால், 1948ல் இலங்கையின் சுதந்திரத்தை முதலில் அங்கீகரித்த நாடுகளில் ஒன்றாக கனடா இருப்பதாக அவர் தனது செய்தியில் குறிப்பிட்டார். 'சேர்ப்பு, பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல் மற்றும் காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்தல் போன்ற பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் ஒத்துழைப்பதற்கு கனடா எதிர்பார்க்கின்றது. இத்தகைய ஒத்துழைப்பின் மூலம் எமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை ஆழப்படுத்தவும் வலுப்படுத்தவும் நாம் முயற்சி செய்யலாம். அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியுடன் கைகோர்த்து நல்லிணக்கத்தை இலங்கை தொடரும் என கனடா நம்புகின்றது. அர்த்தமுள்ள மற்றும் நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை அடைவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், அமைதியான, ஐக்கியமான மற்றும் வளமான தேசத்தைக் கட்டியெழுப்பும் நம்பிக்கையில் இலங்கைக்கான ஆக்கபூர்வமான பங்காளியாக எமது பங்களிப்பைத் தொடர கனடா எதிர்பார்த்துள்ளது' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

சுற்றுலா, முதலீடு மற்றும் சிலோன் தேயிலை பற்றிய இலங்கையின் காணொளிகளைப் பகிர்ந்ததோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

ஒட்டாவா

2022 பிப்ரவரி 09

Please follow and like us:

Close