இலங்கையின் தற்போதைய அபிவிருத்திகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி இராஜதந்திரிகள் குழுவிற்கு  விளக்கம்

 இலங்கையின் தற்போதைய அபிவிருத்திகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி இராஜதந்திரிகள் குழுவிற்கு  விளக்கம்

இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திரிகள் குழுவிற்கு  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி  சப்ரி, 2023 ஆகஸ்ட் 16, புதன்கிழமையன்று விளக்கமளித்தார். வெளிவிவகார செயலாளர்  அருணி விஜேவர்தனவும் இந்த மாநாட்டில் இணைந்திருந்தார்.

நாட்டின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட வழக்கமான விளக்கங்களின் தொடர்ச்சியே இந்த சந்திப்பாகும் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி ஆரம்பத்தில் குறிப்பிட்டார். சமீபத்திய நிதி நிலைப்படுத்துதல் நடவடிக்கைகள், பொருளாதார மீட்பு மற்றும் வளர்ச்சியை நோக்கி முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஊழல் எதிர்ப்பு மசோதாவை ஏற்றுக்கொண்டமை உள்ளிட்ட சட்டச் சீர்திருத்தங்கள், உத்தேச உண்மையைக் கண்டறியும் பொறிமுறை மற்றும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு மசோதா உள்ளிட்ட முக்கிய முன்னேற்றங்களை அமைச்சர் சுட்டிக் காட்டினார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம்  தொடர்பாக 2023 ஆகஸ்ட் 09ஆந் திகதி பாராளுமன்றத்தில் ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கையின் முக்கிய விடயங்களை அமைச்சர் எடுத்துக்காட்டியதுடன், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க முயற்சிகளின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் சுயாதீனப் பொறிமுறைகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் ஆகியவற்றின் சுருக்கமான விளக்கத்தையும் வழங்கினார்.

உலகளாவிய காலாந்தர மீளாய்வின் 4வது சுழற்சியில் இலங்கையின் ஆக்கபூர்வமான ஈடுபாடு, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் இலங்கையின் அறிக்கையின் மீளாய்வு, மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் 54ஆவது கூட்டத் தொடரிலும், 2023 செப்டெம்பர் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது அமர்விலுமான இலங்கையின் பங்கேற்பு உட்பட ஐக்கிய நாடுகள் சபையுடனான இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாடு போன்ற பலதரப்புக் களங்களில் இலங்கையின் தற்போதைய பங்கேற்பை வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன சுட்டிக் காட்டினார். 2023 ஒக்டோபர் 3 முதல் 6 வரை கொழும்பில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் சுற்றாடல் அதிகார சபைகளின் அமைச்சர்களின் ஐந்தாவது  மாநாட்டையும், எதிர்வரும் 2023 ஒக்டோபர் 11ஆந்  திகதி நடைபெறவுள்ள இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் (ஐயோரா) அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தையும் வெளிவிவகார செயலாளர் முன்னிலைப்படுத்தியதுடன், இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் 2023-2025 ஆம் ஆண்டு வரையான தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் தலைவர் தாரா விஜயதிலக்க, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் மகேஷ்  கட்டுலந்த, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் தீப்தி லமாஹேவா, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் அசங்க குணவன்ச மற்றும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் விவகாரங்களுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் வி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரினால் உள்நாட்டு நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன. பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இலங்கையின் தேசிய செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்களை ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் சந்திம விக்கிரமசிங்க வழங்கினார்.

கொழும்பில் அமைந்துள்ள இராஜதந்திரத் தூதரகங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர்களும், தூதுவர்களும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 ஆகஸ்ட் 17

Please follow and like us:

Close