இலங்கையின் எம்.ஐ.சி.இ. சுற்றுலா இந்தோனேசியாவில் ஊக்குவிப்பு

இலங்கையின் எம்.ஐ.சி.இ. சுற்றுலா இந்தோனேசியாவில் ஊக்குவிப்பு

இந்தோனேசியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் மேற்கொண்ட பொருளாதார இராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கையை எம்.ஐ.சி.இ. தலமாக ஊக்குவிப்பதற்கான வெபினார் 2022 ஜனவரி 12ஆந் திகதி இலங்கை மாநாட்டுப் பணியகத்துடன் இணைந்து நடாத்தப்பட்டது. இந்த ஒன்றரை மணி நேர அமர்வில் 25 இந்தோனேசியப் பயண முகவர்கள் பங்குபற்றியதுடன், இலங்கையின் எம்.ஐ.சி.இ. சுற்றுலாவிற்கு அவர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

இந்தோனேசியா மற்றும் ஆசியானுக்கான இலங்கைத் தூதுவர் மாண்புமிகு யசோஜா குணசேகர தனது ஆரம்ப உரையில், நேரடி விமானங்கள் இருப்பதால் கூட்டங்கள், ஊக்கப் பயணம், மாநாடுகள் மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு இந்தோனேசியர்களுக்கு இலங்கை சிறந்த இடமாக உள்ளது என வலியுறுத்தினார். விமானப் பணய நேரம் வெறும் 4 ½ மணி நேரம் மட்டுமேயாவதுடன், இலங்கை பலவிதமான அனுபவங்களையும் வழங்குகின்றது.

இலங்கை மாநாட்டுப் பணியகத்தின் பொது முகாமையாளர் திரு. கிருஷாந்த பெர்னாண்டோ அவர்கள் இலங்கை மாநாட்டுப் பணியகத்தின் செயற்பாடுகள் குறித்து விரிவான விளக்கமொன்றை வழங்கினார்.

இந்தோனேசியக் கண்காட்சி நிறுவனங்களின் சங்கத்தின் தலைவர் திரு. ஹோசியா அன்ட்ரியாஸ் ருங்கட், பரஸ்பர நன்மை பயக்கும் ஈடுபாட்டின் மூலம் எம்.ஐ.சி.இ. சுற்றுலாவை ஊக்குவிப்பதில் இலங்கையின் சக நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதற்கு விருப்பம் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சுனில் திசாநாயக்க, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தை எம்.ஐ.சி.இ. இடமாக சிறப்பித்துக் கூறினார். ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் இந்தோனேசியாவிற்கான முகாமையாளர் திரு. அமில விஜேசேகர, எம்.ஐ.சி.இ. துறையில் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் வழங்கும் பல்வேறு வசதிகளை விவரித்தார். இலங்கை தொழில்சார் சம்மேளனத்தின் குழு உறுப்பினர் கலாநிதி ஷஃபாத் அமிடன் இலங்கையின் எம்.ஐ.சி.இ. தொழிற்துறை குறித்த விளக்கக்காட்சியை வழங்கினார்.

ஹில்டனின் வர்த்தகப் பணிப்பாளரும், இலங்கை ஹோட்டல் சங்கத்தின் உறுப்பினருமான திரு. சுமல் பெர்னாண்டோ, எம்.ஐ.சி.இ. சுற்றுலாவை நடாத்துவதற்கான இலங்கை ஹோட்டல் துறையின் தயார்நிலை குறித்து விளக்கினார். அதனைத் தொடர்ந்து, இலங்கை மாநாட்டுப் பணியகத்தின் சிரேஷ்ட முகாமையாளர் திருமதி. அச்சினி தண்டுன்னகே, இலங்கையில் நடைமுறையில் உள்ள தற்போதைய பயண வழிகாட்டுதல்கள் குறித்து விளக்கமளித்தார். இலங்கையின் உள்வரும் சுற்றுலா நடத்துனர்களின் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய திருமதி. பேடி போல், இலங்கையின் எம்.ஐ.சி.இ. தொழிற்துறையை ஊக்குவிப்பதற்காக இந்தோனேசியாவில் உள்ள வாய்ப்புக்களை ஆராய்ந்தார்.

வெபினாரின் முடிவில், இந்தோனேசியப் பயண முகவர்கள் இலங்கையின் எம்.ஐ.சி.இ. சுற்றுலாத் துறை குறித்த தமது கேள்விகளை கேட்டறிந்து கொள்வதற்கான ஊடாடும் கேள்வி - பதில் அமர்வு நடாத்தப்பட்டது.

இலங்கைத் தூதரகம்,

ஜகார்த்தா

2022 ஜனவரி 19

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close