தாய்லாந்தின் பிரதம மந்திரி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சாவை பேங்கொக்கில் உள்ள அரசாங்க மாளிகையில் வைத்து 2021 செப்டம்பர் 06ஆந் திகதியாகிய இன்று தாய்லாந்து இராச்சியத்துக்கான தூதுவரும், ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியுமான சி.ஏ. சமிந்த ஐ. கொலொன்ன முதன்முதலாக மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடமிருந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சாவுக்கான அன்பான வாழ்த்துக்களை தூதுவர் கொலொன்ன தெரிவித்தார்.
பல நூற்றாண்டுகளாக இரு நாடுகளுக்கிடையேயான தேரவாத பௌத்த மரபுகளில் ஆழமாக வேரூன்றிய நட்பு மற்றும் ஒத்துழைப்பின் சிறந்த பிணைப்புக்களை இருவரும் நினைவு கூர்ந்தனர். இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் மீதான மிகுந்த அன்பை பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சா வெளிப்படுத்தினார்.
குறிப்பாக புதிய இயல்பான சூழலில், ஏற்றுமதி, முதலீடு ஆகியவற்றில் இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையேயான மேம்பட்ட ஒத்துழைப்பை வலியுறுத்தி, இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சா வலியுறுத்தினார். இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தவும், வர்த்தக அளவை அதிகரிக்கவும் மற்றும் வெற்றி அணுகுமுறையுடன் முதலீட்டை அதிகரிக்கவும் இருவரும் உறுதியளித்தனர். கொழும்புத் துறைமுக நகரத்தில் முதலீடு செய்யுமாறு தாய்லாந்து முதலீட்டாளர்களுக்கு தூதுவர் கொலொன்ன அழைப்பு விடுத்ததுடன், அவரது வேண்டுகோளின் பேரில் கொழும்புத் துறைமுக ஆணைக்குழு மற்றும் இலங்கை முதலீட்டு சபையுடன் மெய்நிகர் சந்திப்பை நடாத்துவதற்கு பிரதமர் ஜெனரல் பிரயுத் தாய்லாந்து முதலீட்டு சபைக்கு உத்தரவிட்டார்.
பிரதம மந்திரி ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சா, இலங்கையின் கோவிட்-19 தொற்றுநோய் மீட்புக்கு தொடர்ந்து உதவுவதாகவும், விவசாயம், மீன்வளம் மற்றும் செயற்கை மழை உருவாக்கம் ஆகிய துறைகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
தாய்லாந்து அரசாங்கத்துடன் பொருளாதார இராஜதந்திரத்தை ஊக்குவிக்கும் தனது நோக்கத்தை எடுத்துரைக்கும் போது, லங்கா-தாய் இருதரப்பு உறவுகள் பரஸ்பர நன்மைக்காக, குறிப்பாக மூலோபாய பொருளாதாரக் கூட்டாண்மை மற்றும் இலங்கையில் 'ஒரு கிராமம் ஒரு தயாரிப்பு' என்ற கருத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட பத்து பகுதிகளில், தனது பதவிக் காலத்தில் வலுவான உறுதிப்பாட்டை தூதுவர் கொலொன்ன உறுதி செய்தார்.
இரு நாடுகளுக்கிடையேயான மொழி தடையை நீக்கி மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில், இலங்கையில் தாய் மொழி கற்பித்தல் நிலையம் மற்றும் தாய்லாந்தில் சிங்கள மொழி கற்பித்தல் நிலையத்தைத் திறப்பதற்கு தூதுவர் கொலொன்ன முன்வைத்த திட்டத்தை பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சா வரவேற்றார்.
பலதரப்பட்ட தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா ஒத்துழைப்புக்கான (பிம்ஸ்டெக்)இலங்கையின் சிறந்த தலைமையைப் பாராட்டி, எதிர்வரும் 05ஆவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டிற்கான தலைமைப்; பொறுப்பை தாய்லாந்து ஏற்கக் காத்திருப்பதாக பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சா தெரிவித்ததுடன், பிம்ஸ்டெக்கில் தாய்லாந்தின் எதிர்கால முயற்சிகளுக்கான இலங்கையின் முழுமையான ஆதரவை தூதுவர் கொலொன்ன உறுதியளித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோருக்கான தனது அன்பான வாழ்த்துக்களை பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தெரிவித்தார். கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து மீண்டு பரஸ்பரம் வசதியான நேரத்தில் இலங்கைக்கு விஜயம் தருமாறு தூதுவர் சமிந்த கொலொன்ன பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சாவுக்கு அழைப்பு விடுத்தார்.
பிரதமரின் ஆலோசகர் பன்சார்ன் பன்னாக், பிரதமரின் துணைப் பொதுச் செயலாளர் அனுச்சா புரபச்சாய்ஸ்ரீ, அரசாங்கப் பேச்சாளர் கலாநிதி. தனகோர்ன் வாங்பூங்கோஞ்சனா, தாய்லாந்து வெளியுறவு அமைச்சின் தெற்காசிய, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க விவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டார்ம் பூந்தம் மற்றும் இலங்கைத் தூதரகத்தின் முதல் செயலாளர் சரித ரணதுங்க ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை
பேங்கொக், தாய்லாந்து
2021 செப்டம்பர் 08