ஈரான் இஸ்லாமியக் குடியரசின் புதிய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியனை 2021 செப்டம்பர் 01ஆந் திகதி, புதன்கிழமை தெஹ்ரானில் உள்ள வெளிவிவகார அமைச்சில் வைத்து ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் (நியமனம் செய்யப்பட்ட) திரு. ஜி.எம்.வி. விஷ்வநாத் அப்போன்சு மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, தூதுவரை அன்புடன் வரவேற்ற வெளிவிவகார அமைச்சர், ஈரானுக்கான இஸ்லாமியக் குடியரசின் இலங்கைத் தூதுவராக அவரது புதிய பணிகள் வெற்றியடைவதற்காக வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான பரஸ்பரம் நன்மை பயக்கும் கூட்டாண்மையைப் பாராட்டிய அவர், இரு நாடுகளினதும் மக்களின் பரஸ்பர நன்மைக்காக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான ஈரானின் புதிய அரசாங்கத்தின் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.
ஜனாதிபதி ஆயதுல்லா சையத் இப்ராஹிம் ரைசி மற்றும் ஈரானிய மக்களுக்கான அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அதிமேதகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடமிருந்தான அன்பான வாழ்த்துக்களை தூதுவர் தெரிவித்தார். இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் நட்புறவுகள் குறித்து குறிப்பிடுகையில், புதிய வெளிவிவகார அமைச்சருக்கான வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸின் வாழ்த்துச் செய்தியின் பிரதியொன்றை திரு. விஷ்வநாத் அபோன்சு கையளித்தார்.
கடந்த காலத்தில் எரிசக்தி, நீர்ப்பாசனம் மற்றும் கிராமப்புற அபிவிருத்தி உள்ளிட்ட பல துறைகளில் இலங்கைக்கு ஈரான் அரசாங்த்தால் வழங்கப்பட்ட அபிவிருத்தி உதவியை தூதுவர் பாராட்டினார். இரு நாடுகளுக்குமிடையிலான உறவை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்வதற்கு அவர் ஈரானிய வெளிவிவகார அமைச்சருக்கு உறுதியளித்தார்.
மேற்கு ஆசியாவுக்கான உதவி அமைச்சர் கலாநிதி. செய்யத் ரசூல் மௌசவி, பணிப்பாளர் நாயகம் (உபசரணை) திரு. மெஹ்தி ஹொனார்டூஸ்ட் மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
இலங்கைத் தூதரகம்
தெஹ்ரான்
2021 செப்டம்பர் 03