இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்தும் நோக்கத்துடன், குவைத் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை ஆகியவற்றுடன் இணைந்து குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் 2021 டிசம்பர் 06ஆந் திகதி வெபினாரை ஏற்பாடு செய்தது.
கூட்டத்தின் தொடக்கத்தில், குவைத் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் முசாப் அல்-நிஸ்ஃப் அவர்கள் குவைத்தின் பொது வணிகச் சூழல் குறித்து பங்கேற்பாளர்களுக்கு குறிப்பிட்டு, குவைத் சந்தையில் நுழைவதற்கான செயன்முறையை விளக்கினார்.
பங்கேற்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய இலங்கைத் தூதுவர் மொஹமட் ஜௌஹர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், அந்த உறவுகள் முறையான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபிப்பதற்கு முந்தியதாகும் எனக் குறிப்பிட்டார். திறமையான மற்றும் நம்பிக்கையான பணியாளர்களாக குவைத்தில் உள்ள இலங்கைப் பணியாளர்களைப் பாராட்டிய அதே வேளையில், திறமையற்ற மற்றும் அரைத் திறன் கொண்ட பிரிவுகளில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு உதவுமாறு குவைத் வர்த்தக சமூகத்தை அவர் வலியுறுத்தினார். உலகளவில் சிறந்த பயணத் தலங்களில் தரப்படுத்தப்பட்டுள்ள இலங்கையின் சுற்றுலாத் தலங்களை ஊக்குவிப்பதற்கும் தூதுவர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட அதே வேளை, பங்கேற்பாளர்களை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.
2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரு சபைகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளினதும் வர்த்தக சமூகங்களுக்கிடையிலான உறவுகளை இந்த வெபினார் மேம்படுத்தும் என இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் புத்திக நந்திபால நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சுரேஷ் டி மெல் ஏற்றுமதிக்குக் கிடைக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்து விளக்கமளித்தார். இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையானது, இலங்கையின் ஏற்றுமதிகளை குவைத்துக்கு மேம்படுத்துவதற்காக தூதரகத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதுடன், வெபினாரை நடாத்துவதற்கும் உதவியது.
இலங்கையில் உள்ள முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றும் சாத்தியமான முதலீட்டாளர்களுக்கு இலங்கை வழங்கும் நன்மைகள் குறித்து இலங்கை முதலீட்டு சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரசஞ்சித் விஜயதிலக விரிவாக விளக்கினார்.
குவைத்தின் உணவு மற்றும் போஷாக்குக்கான பொது அதிகாரசபையின் ஃபய்தா ஹம்மூத் அல்-ரஷிதி உணவு மற்றும் போஷாக்குத் துறையில் இலங்கை சமூகத்திற்குக் கிடைக்கும் வாய்ப்புக்கள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு அறிவித்தார்.
இரு நாடுகளிலும் உள்ள தனியார் துறையைச் சேர்ந்த 60 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இந் நிகழ்வில் பங்கேற்ற அதே நேரத்தில் வணிக சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இலங்கைத் தூதரகத்தின் ஆலோசகர் கெத்மா ராஜபக்ஷ யாப்பா இணையப் பேரவையின் அமைப்பை ஒருங்கிணைத்தார்.
இலங்கைத் தூதரகம்,
குவைத்
2021 டிசம்பர் 14