இருதரப்பு ஒத்துழைப்பை மீளாய்வு செய்வதற்காக ருமேனியாவின் தூதரக விடங்களுக்குப் பொறுப்பானவருடன் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன சந்திப்பு

இருதரப்பு ஒத்துழைப்பை மீளாய்வு செய்வதற்காக ருமேனியாவின் தூதரக விடங்களுக்குப் பொறுப்பானவருடன் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன சந்திப்பு

கொழும்பில் வதியும் ருமேனியாவின் தூதரக விடங்களுக்குப் பொறுப்பானவரான தூதுவர் விக்டர் சியுஜ்தியா, வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை மார்ச் 19ஆந் திகதி, வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தார். வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சாரத் துறைகளிலான இருதரப்பு ஒத்துழைப்பை தரப்பினர்கள் மீளாய்வு செய்தனர்.

அறுபத்து நான்கு ஆண்டுகளில் இரு நாடுகளுக்கிடையேயான அன்பான மற்றும் நட்புறவுகளை மேலும் பலப்படுத்துவதிலான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன, எதிர்காலத்தில் ருமேனியாவில் இலங்கையின் வதிவிடத் தூதரகமொன்றைத் திறப்பதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கையர்களுக்கு பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புக்களை வழங்குவதில் இலங்கையுடனான ருமேனியாவின் பங்காண்மையை அமைச்சர் பாராட்டியதுடன், எதிர்காலத்தில் இந்த ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியங்களை வரவேற்றார். வேலைவாய்ப்புத் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ருமேனியாவின் ஆர்வத்தை தூதுவர் சியுஜ்தியா மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், தமது உயர்ந்த திறன்கள் மற்றும் தகைமைகளின் காரணமாக இலங்கைத் தொழிலாளர்கள் ருமேனியாவில் உயர்ந்த மதிப்பில் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டினார்.

ருமேனியாவிலிருந்து இலங்கை மற்றும் தெற்காசியாவிற்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி. + வசதியை அதிக அளவில் பயன்படுத்துதல் மற்றும் சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதில் தரப்பினர்கள் கவனம் செலுத்தினர்.

பிராந்திய மற்றும் பல்தரப்புத் துறைகளில் பகிரப்பட்ட நலன்களை மதிப்பாய்வு செய்தல், உயர் மட்ட விஜயங்களின் பரிமாற்றம் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான சாத்தியமான துறைகளை அடையாளம் காணுதல் ஆகியவையும் இந்தக் கலந்துரையாடலில் இடம்பெற்றன.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 மார்ச் 23

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close