இருதரப்புப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆப்கானிஸ்தான் தூதுவருடன் சந்திப்பு

இருதரப்புப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆப்கானிஸ்தான் தூதுவருடன் சந்திப்பு

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன இலங்கையில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹைதரியை இருதரப்புக் கலந்துரையாடல்களுக்காக 2021 மார்ச் 19ஆந் திகதியாகிய இன்றைய தினம் குடியரசுக் கட்டிடத்தில் சந்தித்தார்.

ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் சமாதான முன்னெடுப்புக்கள் தொடர்பில் வெளிநாட்டு அமைச்சர் குணவர்தவுக்கு தூதுவர் ஹைதரி விளக்கமொன்றை வழங்கியதுடன், வெற்றிகரமான முடிவுகளுக்கான தனது நாட்டின் அபிலாஷைகளை வெளிப்படுத்தினார். நீடித்த அமைதி மற்றும் பாதுகாப்பை ஆப்கானிஸ்தான் அடைய விரும்புகையில், பல பொதுமக்கள் கொல்லப்பட்ட அண்மையில் காபூலில் நடைபெற்ற பயங்கரவாதச் செயல்களை சந்தேகத்திற்கு இடமின்றி வெளிநாட்டு  அமைச்சர் குணவர்தன கண்டித்தார்.

இரு பிரமுகர்களும் மேம்பட்ட உறவுகளுக்கான வலுவான அர்ப்பணிப்புடன் இருதரப்பு ஈடுபாடுகளின் தற்போதைய வேகத்தைத் தொடருவதற்கு ஒப்புக்கொண்டனர். உடனடி நடவடிக்கையாக, இலங்கை அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்த உத்தேசப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அடுத்த மாதம் நிறைவு செய்து வெளிநாட்டு அலுவலக அரசியல் ஆலோசனைகளைத் தொடங்குவதற்கு அமைச்சர் குணவர்தன மற்றும் தூதுவர் ஹைதரி ஆகியோர் ஒப்புக்கொண்டனர். தண்டனை பெற்ற நபர்களை பரிமாற்றுவதற்கான ஒப்பந்தம், விமான சேவை ஒப்பந்தம் மற்றும் இராஜதந்திர வீசா தள்ளுபடி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை உள்ளடக்கும் ஏனைய இருதரப்பு ஆவணங்களைப் பொறுத்தவரை விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என ஒருமித்த கருத்து காணப்பட்டது.

இரு தரப்பினரும் நெருங்கிய அண்டை நாடுகளாகவும், சார்க் உறுப்பினர்களாகவும் இருப்பதால், இரு நாடுகளிலும் சம்பந்தப்பட்ட வர்த்தக சபைகள் மூலம் வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் எதிர்கால சாத்தியங்கள் ஆராயப்பட வேண்டும் என்ற உணர்வைப் பகிர்ந்து கொண்டனர். தேயிலை, இரத்தினம் மற்றும் ஆபரணங்கள், உலர் பழங்கள், விதை வகைகள் மற்றும் தானியங்கள் உள்ளிட்ட இருதரப்பு வர்த்தகத்திற்கான அதிக சாத்தியமுள்ள பகுதிகளை ஆராய்வதற்காக இலங்கைத் தரப்பினருக்கு தூதுவர் ஹைதரி அழைப்பு விடுத்த அதே நேரத்தில், இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான இணைப்பை ஏற்படுத்துவதற்கும் முன்மொழிந்தார்.

பாமியன் போன்ற பாரம்பரிய பௌத்தத் தலங்கள் உட்பட ஆப்கானிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அமைச்சர் குணவர்தனவுக்கு தூதுவர் ஹைதரி அழைப்பு விடுத்தார்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

 

2021 மார்ச் 22

 

 

Please follow and like us:

Close