புதுடில்லிக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை இன்று (16) மாலை சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இந்திய அரசின் உத்தியோகபூர்வ அரச விருந்தினர் மாளிகையான ஹைதராபாத் இல்லத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இருதரப்பு உறவுகள், குறிப்பாக இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதாரக் கூட்டாண்மை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர். இலங்கைக்கு இந்தியா அளித்த உதவிகளுக்காக வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு நிதி அமைச்சர் ராஜபக்ஷ நன்றிகளைத் தெரிவித்தார். இலங்கை மக்களின் தேவைகளுக்கு இந்தியா தொடர்ந்து பதிலளிக்கும் என அமைச்சர் ஜெய்சங்கர் அமைச்சர் ராஜபக்ஷவிடம் உறுதியளித்தார்.
இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, விஜயம் செய்திருந்த இலங்கைப் பிரதிநிதிகளுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் விருந்தளித்தார்.
இந்த சந்திப்பில் நிதியமைச்சர் ராஜபக்ஷவுடன் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் இந்தியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் நிலூக கதுருகமுவ ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா மற்றும் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி ஆகியோர் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்தனர்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
புதுடில்லி
2022 மார்ச் 24