இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய மகளிர் ஊடகப் படை உறுப்பினர்களுடனும், ஐ.ஏ.ஏ.என். வெகுஜனத் தொடர்பாடல் பாடசாலை மாணவர்களுடனும் செப்டம்பர் 19 ஆந் திகதி தனித்தனியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
புதுடில்லியில் உள்ள அமைப்பின் தலைமையகத்தில் இந்திய மகளிர் ஊடகப் படையின் உறுப்பினர்களுடனான முறையான உரையாடல் நடைபெற்றது. டில்லியைச் சேர்ந்த ஏராளமான பத்திரிகையாளர்கள், பெரும்பாலும் பெண் பத்திரிகையாளர்கள், இந்தியாவின் முக்கிய ஊடக நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த உரையாடலில் கலந்து கொண்டனர். இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றங்கள் முதல் இந்திய-இலங்கை உறவுகள் வரையிலான பல கேள்விகளை இந்திய மகளிர் ஊடகப் படையின் உறுப்பினர்கள் உயர்ஸ்தானிகர் மொரகொடவிடம் முன்வைத்தனர். இந்த அமர்வை இந்திய மகளிர் ஊடகப் படையின் தலைவர் ஷோப்னா ஜெயின் நெறிப்படுத்தினார். இந்தியாவின் பல முன்னணி செய்தித்தாள்கள் மற்றும் செய்தித் தளங்கள் இந்த உரையாடலின் உள்ளடக்கங்களை இன்று தமது பதிப்புக்களில் வெளியிட்டுள்ளன.
1994ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய மகளிர் ஊடகப் படை இந்தியாவில் உள்ள முதன்மையான பத்திரிகையாளர்களின் அமைப்புக்களில் ஒன்றாவதுடன், சுமார் 900 பெண் பத்திரிகையாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய -இலங்கை உறவுகள் குறித்து ஐ.ஏ.ஏ.என். வெகுஜனத் தொடர்பாடல் பாடசாலை மாணவர்களுடன் உயர் ஸ்தானிகர் மொரகொட கலந்துரையாடினார். இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் அண்மையில் திறக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்களின் கலையரங்கில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
முறைசாரா கேள்வி பதில் அமர்வின் போது மாணவர்களுடன் இணைந்து கொண்ட உயர்ஸ்தானிகர் மொரகொட, அதைத் தொடர்ந்து இந்திய-இலங்கை உறவுகளை மையமாகக் கொண்ட முறையான நேர்காணலில் இணைந்தார்.
ஐ.ஏ.ஏ.என். வெகுஜனத் தொடர்பாடல் பாடசாலை மாணவர்கள், இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 'வெளிநாட்டு உறவுகள்' என்ற தலைப்பிலான விஷேட கேட்பொலிக் காட்சிப் புத்தகத்திற்காக உயர்ஸ்தானிகரை நேர்காணல் செய்தனர்.
ஐ.ஏ.ஏ.என். வெகுஜனத் தொடர்பாடல் பாடசாலை என்பது புதுடில்லியில் உள்ள ஒரு முதன்மையான ஊடகக் கல்லூரி ஆகும். மகன்லால் சதுர்வேதி தேசிய இதழியல் மற்றும் தொடர்பியல் பல்கலைக்கழகத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்ற இந்தக் கல்லூரி,இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட பத்திரிகைக்கான பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
புதுடில்லி
2022 செப்டம்பர் 22