இந்தியா - இலங்கை பவுன்டேஷனின் 37வது நிர்வாக சபைக் கூட்டம் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரின் இணைத் தலைமையின் கீழ் இன்று (27) புதுடெல்லியில் நடைபெற்றது. சபைக் கூட்டம் கலப்பு முறையில் நடைபெற்றது.
பொருளாதார, விஞ்ஞான, கல்வி, தொழில்நுட்ப மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இந்திய - இலங்கை உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் இரு நாட்டு மக்களிடையே அதிக புரிதலை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன், இந்தியா - இலங்கை பவுன்டேஷன் 1998 டிசம்பர் 28ஆந் திகதி இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் நிறுவப்பட்டது.
இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்கள், தூதுவர்கள் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர்களான பேர்னாட் குணதிலக்க மற்றும் எச்.எம்.ஜி.எஸ். பலிஹக்கார இந்த கூட்டத்தில் மெய்நிகர் ரீதியாக கலந்து கொண்ட அதே வேளையில், இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர், ஜம்மு மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தர் கோபாலசுவாமி பார்த்தசாரதி மற்றும் பவுன்டேஷனின் புதுதில்லி மற்றும் கொழும்பு செயலகங்களின் அதிகாரிகள் இரு இணைத் தலைவர்களுடன் கூட்டத்தில் பௌதீக ரீதியாக கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு, புதுதில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் கீழ் வரும் பவுன்டேஷனின் புதுடெல்லி செயலகத்தால் சபைக் கூட்டம் நடாத்தப்பட்டது. வருடாந்த சபைக் கூட்டங்கள் இரண்டு தலைநகரங்களிலும் மாறி மாறி நடாத்தப்படுகின்றன.
இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து 64 திட்ட முன்மொழிவுகள் இந்த பவுன்டேஷனுக்கு கிடைக்கப்பெற்றதுடன், அவற்றில் 22 திட்டங்களுக்கு சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் பவுன்டேஷனின் புதிய இணையத்தளமும் (www.islfcolombo.com) தொடங்கப்பட்டது.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
புதுதில்லி
2022 ஜூன் 02