இந்தியாவின் நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் ஸ்ரீமதி நிர்மலா சீதாராமனை இன்று (02) புதுடில்லியில் சந்தித்த போது, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளையும் வழிமுறைகளையும் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கேட்டறிந்து கொண்டார்.
இலங்கைக்கான தனது விஜயங்களை நினைவுகூர்ந்த அமைச்சர் சீதாராமன், உயர்ஸ்தானிகர் மொரகொடவை அன்புடன் வரவேற்றார். இந்தியாவின் நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் ஆகியோர் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர்.
தனது பொருளாதார ஒத்துழைப்புத் திட்டங்களின் மூலம் இலங்கைக்கு பல்வேறு துறைகளில் வழங்கிய ஆதரவிற்காக உயர்ஸ்தானிகர் மொரகொட நிதி அமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புத் திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து அவர்கள் கலந்துரையாடினர்.
'இந்தியாவில் இலங்கை இராஜதந்திர பணிகளுக்கான ஒருங்கிணைந்த நாடு மூலோபாயம் 2021ஃ2023' என்ற தனது கொள்கை வரைபடத்தின் பிரதியை நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சரிடம் உயர்ஸ்தானிகர் மொரகொட வழங்கி வைத்தார்.
தொழில் ரீதியாக பொருளாதார நிபுணரான ஸ்ரீமதி நிர்மலா சீதாராமன், மே 2019 முதல் இந்தியாவின் நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சராக செயற்பட்டு வருகின்றார். அதற்கு முன்பு 2017 முதல் 2019 வரை அவர் பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்டார். மாநில நிதி அமைச்சராகவும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சின் மாநில அமைச்சராகவும் (சுயாதீனப் பொறுப்பு) ஸ்ரீமதி சீதாராமன் பணியாற்றியுள்ளார்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
புது டில்லி
2021 நவம்பர் 08