ஆறாவது இலங்கை - பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக ஆலோசனைகள் மெய்நிகர் இணைய வழியில் நிறைவு

ஆறாவது இலங்கை – பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக ஆலோசனைகள் மெய்நிகர் இணைய வழியில் நிறைவு

இலங்கை - பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக ஆலோசனைகளின் ஆறாவது சுற்று 2020 டிசம்பர் 16ஆந் திகதி முறையே வெளியுறவு செயலாளர்கள் அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே மற்றும் தூதுவர் சொஹைல் மஹ்மூத் ஆகியோரின் இணைத் தலைமையில் மூன்று ஆண்டுகளின் பின்னர் மெய்நிகர் இணைய வழியில் ஒன்றுகூட்டப்பட்டது.

இந்த ஆலோசனைகளின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் பரந்த அளவிலான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. வர்த்தகம், முதலீடு, கலாச்சாரம், சுற்றுலா, பாதுகாப்பு ஒத்துழைப்பு, விவசாயம், கால்நடை வளர்ப்பு, கல்வி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, விளையாட்டு மற்றும் ஊடகங்கள், விமானத் துறைகள் ஆகியவற்றிலான தொழில் வாய்ப்புக்கள் தொடர்பில் இதன்போது முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆகிய மூன்று தூண்களின் அடிப்படையில், நடுநிலை மற்றும் அண்டைய உறவுகளை மையமாகக் கொண்ட ஒத்துழைப்புக்காக இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை மாற்றியமைப்பது குறித்து வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) கொலம்பகே அடிக்கோடிட்டுக் காட்டினார். மேம்பட்ட ஒத்துழைப்புகள் மூலம் இலங்கையின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கான பாகிஸ்தானின் முழுமைiயான ஆதரவையும் வெளியுறவுச் செயலாளர் தூதுவர் மஹ்மூத் உறுதிப்படுத்தினார்.

2002ல் கைச்சாத்திடப்பட்ட பாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் முழுமையான நன்மைகளை அடைந்து கொள்வதில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்வதற்காக, இரு தரப்பினரும் ஏற்கனவே நிறுவப்பட்ட இணைந்த இருதரப்பு ஆவணங்களை புதுப்பிக்க ஒப்புக்கொண்டனர். பாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தமானது, மற்றொரு நாட்டுடனான பாகிஸ்தானின் முதலாவது இருதரப்பு வர்த்தகப் பொறிமுறையாக இருந்ததனால், தனது நடவடிக்கைகளை மூலதனம் மற்றும் முதலீட்டுத் துறைகளுக்கு விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வெளியுறவுச் செயலாளர் மஹ்மூத் வலியுறுத்தினார். கோவிட்-19 தொற்றுநோய் ஏற்பட்ட போது, பாகிஸ்தானில் உள்ள இலங்கையர்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு அளித்த ஆதரவுகளுக்காக பாகிஸ்தானுக்கு தனது நன்றிகளை இலங்கை தெரிவித்தது. கடன் வரித் திட்டங்களை செயற்படுத்துவதை விரைவுபடுத்தும் அதே நேரத்தில், நிலுவையில் உள்ள இருதரப்பு ஆவணங்களை தாமதமின்றி இறுதி செய்வதற்கான விரைவான நடவடிக்கைகளுக்கு இரண்டு வெளியுறவுச் செயலாளர்களும் ஒப்புதல் அளித்தனர்.

இந்த மெய்நிகர் ஆலோசனைகளின் போது, இஸ்லாமாபாத்திலுள்ள இலங்கையின் உயர் ஸ்தானிகர் வைஸ் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, கராச்சியிலுள்ள இலங்கையின் துணைத் தூதுவர் ஜி.எல். ஞானதேவ மற்றும் வெளிநாட்டு அமைச்சு, வர்த்தகத் திணைக்களம், கல்வி அமைச்சு ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் பிரதிநிகள் ஆகியோர் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) கொலம்பகே அவர்களுடன் பங்கேற்றனர்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2020 டிசம்பர் 17

 

Please follow and like us:

Close