அமெரிக்க இராஜாங்க செயலாளர் கௌரவ மைக்கேல் பொம்பியோவுடனான கூட்டு ஊடக நிகழ்வில் வெளிநாட்டு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் ஊடக அறிக்கை

அமெரிக்க இராஜாங்க செயலாளர் கௌரவ மைக்கேல் பொம்பியோவுடனான கூட்டு ஊடக நிகழ்வில் வெளிநாட்டு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் ஊடக அறிக்கை

இராஜாங்க செயலாளர் கௌரவ மைக்கேல் பொம்பியோ அவர்களே,

இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக பாலசூரிய அவர்களே,

கௌரவ தூதுவர் அவர்களே,

தூதுக்குழுவின் உறுப்பினர்களே

 

கௌரவ செயலாளர் அவர்களே, தங்களது பணி மிகுந்த ஓய்வில்லாத கால அட்டவணையின் போதிலும், இந்த மிதமான மற்றும் இனிமையான காலநிலையில் விஜயத்தை மேற்கொண்டுள்ள தங்களையும், தங்களது தூதுக்குழுவினரையும் முதலில் இலங்கைக்கு வரவேற்க விரும்புகின்றேன்.

முன்னர் சிலோன் என அறியப்பட்ட இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 72 வது ஆண்டு நிறைவின் குறிப்பிடத்தக்க மைல்கல்லை 2020 அக்டோபர் 29ஆந் திகதியாகிய நாளைய தினம் குறித்து நிற்கின்றது.

இராஜாங்க செயலாளராகிய தாங்கள் எம்முடன் இணைந்துள்ள இன்றைய தினம் உண்மையில் ஒரு மிக முக்கியமான தருணமாகும்.

ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக, ஜனநாயகத்தின் பகிரப்பட்ட மதிப்புக்கள் மற்றும் சமூகப் பொருளாதார நோக்குநிலையின் அடிப்படையில் நிறுவப்பட்ட வலுவானதொரு உறவை எமது இரு நாடுகளும் வளர்த்து வருகின்றன. இராஜதந்திர உறவுகளை முறையாக நிறுவுவதற்கு முன்னரிருந்தே, 1880 களிலிருந்து எமது மக்களுக்கிடையேயான உறவுகள் காணப்படுகின்றன. பல ஆண்டுகளாக, இந்த ஈடுபாடானது கடல்சார் விடயங்கள் உள்ளடங்கலாக அரசியல், பொருளாதார, கல்வி, காவல் மற்றும் பாதுகாப்புத் துறைகளை உள்ளடக்கிய ஒரு பன்முக உறவில் கணிசமாக முதிர்வடைந்துள்ளது. எமது இரு நாடுகளினதும் மக்களுக்கு இடையிலான தொடர்புகளும் சம அளவில் முக்கியமானதாகும்.

இந்த சூழலில், மதிப்புமிக்க அமெரிக்காவின் இராஜாங்க செயலாளரான கௌரவ மைக்கேல் பொம்பியோ ஆகிய தங்களை கொழும்புக்கு அன்பாக வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன். கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள பலமான சவால்களை மீறி இலங்கைக்கு விஜயம் செய்வதற்காக தங்களது நேரத்தை அர்ப்பணித்து, தங்களின் உட்பார்வையை பகிர்வதானது இதயத்தை நெகிழச் செய்கின்றது.

அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களுடனானதும், எமக்கு இடையிலானதுமான பரந்த கலந்துரையாடல்கள், இந்த ஆண்டில் கடந்த சில மாதங்களாக இலங்கைத் தலைவர்களுடன் முக்கிய அமெரிக்கப் பிரமுகர்கள் மேற்கொண்ட உரையாடல்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை உருவாக்கியுள்ளன.

கௌரவ செயலாளர் அவர்களே, நீங்கள் வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் மிகுந்த தருணமொன்றில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளீர்கள். கற்பனைக்கு எட்டாத அளவில் கோவிட்-19 தொற்றுநோயினால் உலகம் அல்லலுற்று வருவதுடன், அது வாழ்வாதாரங்கள், வாழ்க்கை முறைமைகள் மற்றும் எல்லைகள் முழுவதுமான உறவுகளை பாதிப்படையச் செய்துள்ளது. இலங்கையின் வெற்றிகரமான சுகாதார முறைக்கு பங்களித்த இலங்கையின் பொது மற்றும் சமூக சுகாதார முறையை உருவாக்குவதற்கான ஆய்வுக் கற்கையை ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் 1930 களில் நியமித்தது. நியூ ஜேர்சியைச் சேர்ந்த பௌத்த ஞானியும், கல்வியியலாளருமான கேர்னல் ஹென்றி ஸ்டீல் ஒல்கொட் போன்ற சிறந்த அமெரிக்க ஆளுமைகள் நாட்டில் பௌத்த மதம் மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு மகத்தான பங்களிப்புகளைச் செய்தனர்.

செயலாளர் அவர்களே, இலங்கை ஏறக்குறைய 90 ஆண்டுகளாக உலகளாவிய வாக்குரிமையை பிரஜைகள் அனுபவித்து வரும் ஆசியாவின் மிகப் பழமையான ஜனநாயக தேசமாகும். ஆற்றல்மிக்க கண்ணோட்டத்தில் குறிப்பிட்டால், ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றம் ஆகிய இரண்டு தேர்தல்களின் வாயிலாக இலங்கை மக்கள் தமது சுதந்திரமான தெரிவை வெளிப்படுத்தியுள்ள வகையில், இலங்கையில் ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் நடைமுறைகள் வலுவாக நிற்கும் ஒரு காலம் இதுவாகும். நிலையான, பாதுகாப்பானதொரு நாடு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான எமது முன்னோக்கிய பயணத்தில் இணைவதற்கான தெளிவான வாய்ப்பை அமெரிக்கா உட்பட எமது பங்குதாரர்களுக்கு அளிக்கின்ற தேர்தல்கள், தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கின்றன.

விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள், சுகாதாரம், கல்வி, வியாபார அபிவிருத்தி மற்றும் வர்த்தகம், நல்லாட்சி மற்றும் மனிதாபிமான உதவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான அபிவிருத்தி உதவிகளை நல்கிய அமெரிக்காவும், இலங்கையின் அபிவிருத்தியின் முக்கிய பங்காளிகளில் ஒன்றாகும்.

2019 ஆம் ஆண்டில் 3.1 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதியுடன் அமெரிக்கா இலங்கையின் மிகப்பெரிய ஒற்றை சந்தையாக இருந்ததுடன், கோவிட்-19 தொடர்பான சந்தை வீழ்ச்சியின் தற்போதைய சூழலிலும் கூட, இந்த ஆண்டின் முதல் பாதியில் 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் இலங்கை அதே நிலையிலேயே உள்ளது.

சிரமங்கள் மிகுந்த காலப்பகுதியிலும் கூட அமெரிக்கா இலங்கைக்கு ஒரு நண்பராகவும் பங்காளியாகவும் இருந்து வருவதுடன், தங்கள் ஆதரவுக்கு நாங்கள் மிகவும் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம். 2004 ல் ஆசியாவில் ஏற்பட்ட சுனாமிக்குப் பின்னர் இலங்கைக்கான அமெரிக்காவின் உதவிகள் குறிப்பிடத்தக்கதாக இருந்தன. முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் சீனியர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் ஆகியோரின் விஜயங்கள், 2019 ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னரான உதவி மற்றும் மிக அண்மையில், கோவிட்-19 ஐ குறைப்பதற்கான உதவி போன்றவற்றை நான் நினைவு கூர்கின்றேன். குறிப்பாக, 9/11 தாக்குதல்களுக்கு முன்னரிருந்து தற்போது வரை எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாத அமைப்பை பகிஷ்கரித்தமைக்காக எனது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதிமேதகு ஜனாதிபதி மற்றும் முக்கிய அமெரிக்கப் பிரமுகர்களுக்கு இடையிலும், எனக்கும் செயலாளர் பொம்பியோவிற்கும் இடையில் சில மாதங்களுக்கு முன்னரும் இடம்பெற்ற கலந்நுரையாடலின் தொடர்ச்சியை இன்றைய கலந்துரையாடல்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றன. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் முன்னுரிமைகளைப் புரிந்துகொள்வதற்கும், உட்பார்வையைப் பகிர்ந்து கொள்வதற்கும், ஒத்துழைப்புக்கான பகுதிகளில் இருதரப்பு ஈடுபாட்டை மேலும் உயர்த்துவதற்கான வழிகளையும், முறைமைகளையும் கருத்தில் கொள்வதற்குமான சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

எமது இருதரப்பு ஈடுபாட்டை மேலும் வலுவானதாக மாற்றுவதற்காக, 2021 இன் தொடக்கத்தில் 4 வது அமெரிக்கா - இலங்கை கூட்டு உரையாடலின் அடுத்த அமர்வை கூட்டுவதற்கும், தீவிரமான ஒருங்கிணைப்பின் மூலம் பொருளாதாரம், காவல் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளிலும் முன்னேற்றமடைவதற்கும் ஒப்புக் கொண்டுள்ளோம். வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கட்டமைப்பின் ஒப்பந்தத்தின் கூட்டுக் குழுவின் அடுத்த அமர்வும் சாத்தியமான கூடிய விரைவில் கூட்டப்படும்.

தகவல் தொடர்பாடல் தொழினுட்பம், சைபர் பாதுகாப்பு, விவசாயம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு, வர்த்தகம், முதலீடு, வியாபாரம் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைகளில் எமது இருதரப்பு ஈடுபாட்டை விரிவுபடுத்துவதற்கும் இது ஒரு சந்தர்ப்பமாகக் கருதப்பட்டது.

ஒரு இறையாண்மை மிகுந்த, சுதந்திரமான தேசம் என்ற வகையில், இலங்கையின் வெளியுறவுக் கொள்கை நடுநிலையானதாகவும், அணிசேரா கொள்கையுடையதாகவும், நட்புறவு ரீதியானதாகவும் இருக்கும். எமது மூலோபாய இருப்பிடத்துடன் வருகின்ற வாய்ப்புக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விழிப்புணர்வுடன், கடல் பிரயாணம் மற்றும் வான்வெளிச் சுதந்திரத்தை பராமரிப்பதன் முக்கியத்துவத்திற்கும், தொடர்பாடலுக்கான கடல் கோடுகள் மற்றும் கடலுக்கடியில் உள்ள கேபிள்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்திற்கும் நாங்கள் அவதானம் செலுத்துகின்றோம். கடல் சட்டம் தொடர்பான ஐ.நா. சாசனம் உட்பட சர்வதேச சட்டத்தை அனைத்து நாடுகளும் கடைப்பிடித்து, மதிக்க வேண்டும் என நாங்கள் நம்புகின்றோம். இலங்கை முன்னேறுவதற்கு ஆர்வமாக உள்ள பன்முக கடல்சார் ஒத்துழைப்பு குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டோம்.

செயலாளர் பொம்பியோவின் விஜயம் மற்றும் கலந்துரையாடல்கள் எமது அன்பான மற்றும் நட்பு ரீதியான உறவுகளை மேலும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், செயலாளர் பொம்பியோ அவர்களே, தங்களுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இறுதியாக, செயலாளர் பொம்பியோ மற்றும் அவருடன் இந்த விஜயத்தில் இணைந்துள்ள திருமதி. பொம்பியோ ஆகிய இருவரும் இலங்கையில் மிகவும் இனிமையான வகையில் தங்கியிருப்பதற்கும், அடுத்த சில நாட்களில் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள விஜயத்தை ஆசியாவில் மேற்கொள்வதற்கும் நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

இலங்கை மக்களின் சார்பாக தங்களுக்கு ஆயுபோவன் என வாழ்த்துகின்றேன்.

நான் தற்போது கௌரவ இராஜாங்க செயலாளர் மைக்கேல் பொம்பியோ அவர்களுக்கு உரையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றேன்.

Please follow and like us:

Close