வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்கான உதவிகளை கொழும்பைத் தளமாகக் கொண்ட கௌரவ தூதுவர்களிடமிருந்து வெளிநாட்டு அமைச்சர் எதிர்பார்ப்பு

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்கான உதவிகளை கொழும்பைத் தளமாகக் கொண்ட கௌரவ தூதுவர்களிடமிருந்து வெளிநாட்டு அமைச்சர் எதிர்பார்ப்பு

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்காக கொழும்பைத் தளமாகக் கொண்ட கௌரவ தூதுவர்களின் உதவியை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடினார். கொழும்பைத் தளமாகக் கொண்ட கௌரவ தூதுவர்களுடன் வெளிநாட்டு அமைச்சில் வைத்து நேற்று (ஜனவரி 11) நடைபெற்ற சந்திப்பில் அமைச்சர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். கோவிட்-19 சார்ந்த சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க இந்த சந்திப்பு நடைபெற்றது.

தொற்றுநோய் மிகுந்த நேரத்திலான ஒரு கூட்டு முயற்சியாக, தற்போது இறங்கு நிலையிலுள்ள உலகப் பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்காக ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவுவதன் முக்கியத்துவத்தை அமைச்சர் குணவர்தன மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பில் உரையாற்றிய வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் (ஓய்வு பெற்ற) ஜயநாத் கொலம்பகே, முந்தைய ஆண்டின் காலநிலை நாட்டின் தேயிலை உற்பத்தியில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக விளக்கினார். எனவே, தனது தரமான தேயிலையை உலகளவில் சந்தைப்படுத்துவதற்கான சாதகமான நிலையில் இலங்கை உள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் குறிக்கோள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப, பிராந்திய ஒத்துழைப்பை மூன்று தூண்களின் கீழ் சாதகமாக ஊக்குவிப்பதிலான இராஜாங்க அமைச்சின் வகிபாகத்தை இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய விளக்கினார். இந்த முயற்சியில் சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களின் உதவிகள் குறித்தும் இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

தொற்றுநோயின் போது முதலீட்டாளர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள், சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையத்தைத் திறத்தல், இலங்கையின் புதிய வெளியுறவுக் கொள்கை மற்றும் பல விடயங்கள் சார்ந்த தற்போதைய தலைப்புக்களிலான உரையாடலுக்கான ஒரு தளத்தை கௌரவ தூதுவர்களுக்கும் வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இந்த சந்திப்பு உருவாக்கியது.

வெளிநாட்டு அமைச்சர், பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர், வெளியுறவுச் செயலாளர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

 

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

2021 ஜனவரி 12

Video Link: https://m.youtube.com/watch?v=FdqjqlwUot8

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close