வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் அமெரிக்கத் தூதுவர் ஜூலி  சுங்  சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் அமெரிக்கத் தூதுவர் ஜூலி  சுங்  சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 ஜூலை 29, வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். அமைச்சர் சப்ரியின் நியமனத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர், புதிய வெளிநாட்டு  அலுவல்கள் அமைச்சருக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதிய நிர்வாகத்திற்குமான அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி ஜே. பிளிங்கனின் வாழ்த்துச் செய்தியைக் கையளித்தார்.

சுபீட்சம் மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல் உட்பட இருதரப்பு உறவின் முக்கிய அம்சங்கள் மற்றும் இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில் அமெரிக்கா வழங்கும் ஆதரவு குறித்தும் தூதுவர் சுங் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு விளக்கமளித்தார். பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் வலுவான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இருதரப்புக் கூட்டாண்மையை ஒப்புக்கொண்ட அமைச்சர் சப்ரி, தற்போதைய சமூகப் பொருளாதார சூழலிலான மற்றும் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான அமெரிக்காவின் ஆதரவைப் பாராட்டினார். ஆட்கடத்தலை எதிர்கொள்வதில் இலங்கை மேற்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அங்கீகரிப்பதற்காக 2022ஆம் ஆண்டுக்கான  அமெரிக்க ஆட்கடத்தல் அறிக்கையில் இலங்கை 'நிலை 2' க்கு உயர்த்தப்பட்டதை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் வரவேற்றார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின்  சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

 

2022 ஆகஸ்ட் 04

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close