வியன்னாவில் இலங்கை முதலீட்டுக் கருத்தரங்கு

வியன்னாவில் இலங்கை முதலீட்டுக் கருத்தரங்கு

வியன்னா வணிக சபையுடன் இணைந்து ஒஸ்ட்ரியாவிலிருந்தான முதலீடுகளை இலங்கையில் ஊக்குவிப்பதற்காக  ஒரு கலவை வெபினாரை வியன்னாவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை ஏற்பாடு செய்தது.

ஒஸ்ட்ரிய நிறுவனங்களுடன் இணைந்து ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் பிராந்திய முகாமையாளர் ஜொஹானெஸ் ப்ரன்னர், இந்தியாவிலுள்ள ஒஸ்ட்ரியத் தூதரகத்தின் வர்த்தக இணைப்பாளர் பெர்ன்ட் அண்டர்சன் மற்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன, முதலீட்டு ஊக்குவிப்பு நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரசன்ஜித் விஜயதிலக, முதலீட்டு ஊக்குவிப்புப்; பணிப்பாளர் நிலுபுல் டி சில்வா, இலங்கை முதலீட்டு சபையின் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் தர்ஷன் மாரலந்த மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பிரதிப் பணிப்பாளர் உதேனி விஜேகோன் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகள் இந்தக் கலவை வெபினாரில் அமய்நிகர்  ரீதியாக கலந்து கொண்டனர்.

பிராந்தியத்தில் குறிப்பாக இலங்கையில் முதலீடு செய்வதற்கு விரும்பும் சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க சக்தி, சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்பயிற்சித் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒஸ்ட்ரிய நிறுவனங்கள் வியன்னா வணிக சபையினால் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஒடெல்கா மெட் என்ஜினியரிங் ஜி.எம்.பி.எச், ஏ.எம்.இ. இன்டர்நெஷனல் ஜி.எம்.பி.எச், மெட்-ல் எலெக்ட்ரோமெடிஜினிஷே ஜெரெட் ஜி.எம்.பி.எச், வெமேட் என்ஜினியரிங் ஜி.எம்.பி.எச், வி.ஏ.சி. சிஸ்டம் டெக்னிக் ஜி.எம்.பி.எச், எம்-யு-டி மஷினென்-உம்வெல்டெக்னிக்-டிரான்ஸ்போர்டன்லேஜன் ஜி.எம்.பி.எச் மற்றும் குளோபல் ஹைட்ரோ எனர்ஜி ஜி.எம்.பி.எச். ஆகியன குறித்த  நிறுவனங்களாகும்.

பங்கேற்பாளர்களை வரவேற்ற தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதி மஜிந்த ஜயேசிங்க, பொருளாதாரத்தில்  உருமாறும் தாக்கத்தை ஏற்படுத்தும் முதலீடுகளை எளிதாக்குவதற்காக இலங்கை ஒரு இலட்சியத் திட்டத்தை வகுத்துள்ளதாகத் தெரிவித்தார். அதிக முதலீடுகளை ஈர்க்கும் சூழலை உருவாக்குவதற்காக அரசாங்கம் தனது அதிகபட்ச முயற்சியை மேற்கொண்டு வருகின்றது. இலங்கைக்கும் ஒஸ்ட்ரியாவுக்கும் இடையிலான விஷேட உறவுகள் பரஸ்பர நன்மைகளைக் கொண்ட பல பகுதிகளை உள்ளடக்கிய வகையில் விரிவடைந்துள்ளதாகவும், இலங்கையில் முதலீடு செய்வதன் மூலம் அனைவரும் இந்த மாற்றமான பயணத்தில் இணைய வேண்டும் என்றும் தூதுவர் வலியுறுத்தினார்.

இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வெபினாரின் முக்கியத்துவத்தை  வியன்னா வணிக சபையின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான பிராந்திய முகாமையாளர் ஜொஹனெஸ் ப்ரன்னர் எடுத்துரைத்தார். ஒஸ்ட்ரியாவிலிருந்து சாத்தியமான முதலீடுகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மருந்துத் தொழில் மற்றும் தொழிற்பயிற்சி ஆகிய துறைகளில் கவனம் செலுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக கோவிட் தொற்றுநோயின் போது இந்த முதலீடுகளை ஈர்க்கக்கூடிய திட்டங்களை இலங்கை உருவாக்க வேண்டும் என மேலும் குறிப்பிடப்பட்டது. ஒஸ்ட்ரியாவிலிருந்து இலங்கைக்கு உயர்தர மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான கோரிக்கையை எளிதாக்குவதற்கான தமது விருப்பத்தை பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.

வளர்ந்து வரும் முதலீட்டு வாய்ப்புக்கள் பற்றிய விரிவான விளக்கத்தை பிரசன்ஜித் விஜயதிலக அளித்தார்.  தகவல் தொழில்நுட்ப சேவைகள், சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், கப்பல் போக்குவரத்து, கல்வி மற்றும் பெரிய அளவிலான உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரத் துறைகளில் ஈடுபட்டுள்ள 1,200 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் கொண்ட ஒரு துடிப்பான இடமாக இலங்கை உள்ளது. அறிவு சார்ந்த பொருளாதாரத்தின் அடிப்படையில் அடுத்த பத்தாண்டுகளில் 5-7% மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை அடைவதற்கான சரியான பாதையில் இலங்கை செல்வதாக மேலும் குறிப்பிடப்பட்டது. புதிய கொள்கைகள் மற்றும் வரிச் சலுகைகளுடன் உகந்த முதலீட்டு சூழலை நிறைவேற்றுப் பணிப்பாளர் விளக்கினார். உற்பத்தி, தகவல் தொடர்பாடல் தொழினுட்பம், விருந்தோம்பல், சுற்றுலா, விவசாயம், உணவு பதப்படுத்துதல், கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய ஐந்து நேரடி முதலீடுகளை மேற்கொள்வதில் இந்த மாநாடு கவனம் செலுத்தியது. ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பில் உள்ள மருந்து மற்றும் ஆடைப் பொருட்களுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட விஷேட பொருளாதார வலயங்களை முதலீட்டு சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் விரிவாக விவரித்தார்.

இலங்கையில் பொது சுகாதாரத் துறையில் உள்ள வாய்ப்புக்களை கலாநிதி. பிரசன்ன குணசேன விளக்கினார்.  அரச மருத்துவமனைகளில் மருத்துவப் பொருட்களுக்கான உடனடித் தேவைகள் குறித்து விளக்கிய தலைவர், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஒஸ்ட்ரிய மருத்துவ உற்பத்தியாளர்களை வலியுறுத்தினார். ஒஸ்ட்ரியாவில் இருந்து மருத்துவ விநியோகஸ்த்தர்களைப் பதிவு செய்வதற்கு அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் உதவத் தயாராக இருப்பதாக கலாநிதி. குணசேன தெரிவித்தார்.

காது கேட்கும் கருவித் துறையில் தொழில்நுட்ப ஆதரவை அளவிடுவதற்கான நிறுவனத்தின் விருப்பத்தை  மெட்-எல் எலெக்ட்ரோமெடிஜினிஷே வெளிப்படுத்தியது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான திட்டங்கள் மூலம் நீர் ஆற்றல் துறையில் முதலீடு செய்வதற்கான விருப்பத்தை குளோபல் ஹைட்ரோ எனர்ஜி நிறுவனம் வெளிப்படுத்தியது.

இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை

வியன்னா

2021 செப்டம்பர் 08

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close
Zoom