வடக்கு மசிடோனியா குடியரசின் ஜனாதிபதி பென்டரோவ்ஸ்கியிடம் தூதுவர் உனம்புவே நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

வடக்கு மசிடோனியா குடியரசின் ஜனாதிபதி பென்டரோவ்ஸ்கியிடம் தூதுவர் உனம்புவே நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

வடக்கு மசிடோனியாவிற்கான இலங்கையின் முழுமையான அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக நியமனம் செய்யும் நற்சான்றிதழ் கடிதங்களை ஜேர்மனிக்கான இலங்கைத் தூதுவர் மனோரி உனம்புவே வடக்கு மசிடோனியா குடியரசின் ஜனாதிபதி ஸ்டீவோ பென்டரோவ்ஸ்கியிடம் 2021 நவம்பர் 24ஆந் திகதி ஸ்கோப்ஜியில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் வைத்து கையளித்தார்.

பாரம்பரிய நற்சான்றிதழ் உரையை நிகழ்த்திய தூதுவர் உனம்புவே, வடக்கு மசிடோனியா ஜனாதிபதிக்கான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், வர்த்தகம் மற்றும் முதலீட்டில் விஷேட கவனம் செலுத்தி வடக்கு மசிடோனியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார்.

புதிய தூதுவரை வரவேற்ற ஜனாதிபதி பென்டரோவ்ஸ்கி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளை ஆராய்வதற்கு வடக்கு மசிடோனியா எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகவும், அனைத்து எதிர்கால முயற்சிகளிலும் தூதுவருக்கும் தூதரகத்திற்கும் வடக்கு மசிடோனியாவின் அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் குறிப்பிட்டார்.

நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த பின்னர் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, முறையே 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களைத் தொடர்ந்து பொருளாதார அபிவிருத்தி, நல்லிணக்கம் மற்றும் புனரமைப்பு உள்ளிட்ட இலங்கையின் முக்கிய அபிவிருத்திகள் குறித்து தூதுவர் விளக்கினார்.

குறிப்பாக அணிசேரா இயக்கத்தின் முன்னணி உறுப்பினர்களாக இருந்த இலங்கைக்கும் முன்னாள் யூகோஸ்லாவியா சோசலிசக் கூட்டாட்சி குடியரசுக்கும் இடையிலான நீண்டகால நட்பைக் குறிப்பிட்ட ஜனாதிபதி பென்டரோவ்ஸ்கி, இரு நாடுகளினதும் பரஸ்பர நன்மைக்காக முறையான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தினார். நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்காக இலங்கையில் நடைமுறையில் உள்ள உள்நாட்டுப் பொறிமுறைகளை ஜனாதிபதி பாராட்டினார்.

ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகம் வடக்கு மசிடோனியா குடியரசிற்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றதாகும்.

இலங்கைத் தூதரகம்,

பேர்லின்

2021 நவம்பர் 30

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close