யெமன் குடியரசின் வதிவிடமல்லாத தூதுவராக தனது நற்சான்றிதழ்களை தூதுவர் அமீர் அஜ்வத் கையளிப்பு

யெமன் குடியரசின் வதிவிடமல்லாத தூதுவராக தனது நற்சான்றிதழ்களை தூதுவர் அமீர் அஜ்வத் கையளிப்பு

யெமன் குடியரசின் வதிவிடமல்லாத முழு அதிகாரமுடைய இலங்கைத் தூதுவராக நியமனம் செய்யும் தனது  நற்சான்றிதழ்களை தூதுவர் ஒமர் லெப்பே அமீர் அஜ்வத், யெமன் குடியரசின் ஜனாதிபதி அப்துல் ரப்புஹ் மன்சூர் அல் ஹாதி அவர்களிடம் அவரது தற்காலிக இல்லமான ரியாத்தில் அமைநதுள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து 2021 ஆகஸ்ட் 16ஆந் திகதி கையளித்தார்.

சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் யெமன் குடியரசின் வெளிநாட்டு அமைச்சர்  அஹ்மத் அவாத் பின் முபாரக் மற்றும் ஜனாதிபதி உபசரணைத் தலைவர் முஹமத் ஹாஜ் மஹ்ஃபவுத் மற்றும் யெமன் குடியரசு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளின் முன்னிலையில் நற்சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேஷியா, துருக்கி மற்றும் மொரிஷியானா ஆகிய நாடுகளின்  தூதுவர்களும் ஒரே நாளில் யெமன் குடியரசின் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்.

ஜனாதிபதி ஹாதியுடனான சந்திப்பின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  மற்றும் இலங்கை மக்களிடம் இருந்து ஜனாதிபதி ஹாதி மற்றும் யெமன் மக்களுக்கான அன்பான வாழ்த்துக்களை தூதுவதர் அமீர் அஜ்வத் தெரிவித்தார். இலங்கைக்கும் யெமனுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்று உறவுகளை நினைவு கூர்ந்த தூதுவர் அமீர் அஜ்வத், யெமன் மக்களின் சமாதானம் மற்றும் செழிப்புக்காக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கிடையே மகிழ்ச்சியான நட்புறவை மேலும் உயர்த்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

தூதுவர் அமீர் அஜ்வத்தை வரவேற்ற ஜனாதிபதி ஹாதி, யெமன் குடியரசிற்கான இலங்கையின் வதிவிடமல்லாத  தூதராக அவரது புதிய பணிகள் வெற்றி பெறுவதற்காக வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இலங்கை மக்களுக்கான தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இலங்கையுடனான யெமன் அரசாங்கம் மற்றும் மக்களின் ஒற்றுமைக்காக ஜனாதிபதி ஹாதி பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், பரஸ்பரம் ஆர்வமுள்ள பகுதிகளில் தொடர்ந்தும் ஒத்துழைப்பதாக உறுதிப்படுத்தினார்.

தொடர்ந்து, ரியாத்தில் உள்ள யெமன் தூதரகத்தில் யெமன் வெளிநாட்டு அமைச்சர் அஹமத் அவாத் பின்  முபாரக்கிடம் தூதுவர் அமீர் அஜ்வத் தனது நற்சான்றிதழ்களின் திறந்த பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன. சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவை மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை அவர்கள் ஆராய்ந்தனர். இந்த சந்திப்பின் போது வெளிநாட்டு அமைச்சரின் அலுவலகத்தின் பணிப்பாளரான தூதுவர் அப்துல்காதர் முஹமத் ஹாதி மற்றும் வெளிநாட்டு அமைச்சர்pன அலுவலகத்தின் ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி கலாநிதி. அலி அஹமத் ஷக்லா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நற்சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக, தூதுவர் அமீர் அஜ்வத் யெமனின் ஆலோசகர் சபைத்  தலைவர் (மஜித் அல் சுரா) கலாநிதி. அஹ்மத் உபைத் பின் தக்ரை சந்தித்ததுடன், அவர் யெமனில் நடைபெற்று வரும் சமாதான முயற்சிகள் குறித்து தூதுவருக்கு விளக்கினார். இருதரப்பு மற்றும் பல்தரப்பு அரங்கில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.

தூதுவர் அமீர் அஜ்வத், ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கையின் தற்போதைய முழு அதிகாரமுடைய மற்றும்  சிறப்புத் தூதுவராக செயற்படுவதுடன், இருதரப்பு மற்றும் பல்தரப்பு இராஜதந்திர சேவையுடன் 23 வருட தொழில்முறைத் தூதராவார். தற்போதைய பணிக்கு முன்னர், அவர் சிங்கப்பூர் மற்றும் புருனே தாருஸ்ஸலாம் ஆகியவற்றுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக (பதில்) பணியாற்றினார். அவர் 2015 முதல் 2017 வரை இலங்கை வெளிநாட்டு அமைச்சில் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் விவகாரங்களுக்கான பிரிவின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார். ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் நிரந்தரத் தூதரகத்தில் ஆலோசகர் (மனித உரிமைகள்), இந்தியாவின் சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் அமைச்சர் (அரசியல்) மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் / தலைவர் ஆகிய பதவிகளை அவரது இராஜதந்திர வாழ்க்கை உள்ளடக்கியுள்ளது.

தூதுவர் அமீர் அஜ்வத் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுமாணிப் பட்டம் மற்றும் பேராதனைப்  பல்கலைக்கழகத்தில் கலை இளமாணிப் பட்டம் பெற்றவராவார். அவர் 1997ஆம் ஆண்டு இலங்கை உயர் நீதிமன்றத்தின் சட்டத்தரணியாக அனுமதிக்கப்பட்டார்.

தூதுவர் அமீர் அஜ்வத் மற்றும் அவரது துணைவியார் அஸ்மியா அமீர் அஜ்வத் ஆகியோருக்கான வரவேற்பு  நிகழ்வொன்று நற்சான்றிதழ் விழாவின் இறுதியில் ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இலங்கைத் தூதரகம்

மஸ்கட்

2021 ஆகஸ்ட் 27

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close
Zoom