கோவிட்-19 தொற்றுநோய்க்கு பிரதிபலிக்கும் வகையிலான பொதுச் சபையின் 31வது சிறப்பு அமர்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் அறிக்கை, 2020 டிசம்பர் 03/04

கோவிட்-19 தொற்றுநோய்க்கு பிரதிபலிக்கும் வகையிலான பொதுச் சபையின் 31வது சிறப்பு அமர்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் அறிக்கை, 2020 டிசம்பர் 03/04

கௌரவ தலைவர் அவர்களே,
கௌரவ பொதுச்செயலாளர் அவர்களே,
மாட்சிமை தங்கியவர்களே,
மேன்மை தங்கியவர்களே,
மாண்புமிகு பிரதிநிதிகளே,
கனவான்களே மற்றும் கனவாட்டிகளே,

அணிசேரா இயக்கம் மற்றும் அணிசேரா இயக்கத்தின் தலைவரான அஸர்பைஜான் ஆகியவற்றினால் முன்மொழியப்பட்டமைக்கு அமைய, கோவிட்-19 தொற்றுநோய்க்கு பிரதிபலிக்கும் வகையில் சிறப்பு அமர்வைக் கூட்டிய பொதுச் சபையின் தலைவர் மாண்புமிகு வோல்கன் போஸ்கிர் அவர்களுக்கு நான் ஆரம்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மனிதகுலம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய உலகளாவிய சுகாதார நெருக்கடியான கோவிட்-19 தொற்றுநோயால் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள முன்னணி சுகாதார மற்றும் அத்தியாவசிய சேவை ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடுகளுக்காக அவர்களுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில், சர்வதேச சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்றுவதன் மூலமும், பரவல் நிலையை பூஜ்ஜியமாக்குவதனை இலக்காகக் கொண்ட முழுமையான அரசாங்க அணுகுமுறையினாலும் கோவிட்-19 பரவுவதை இலங்கை நிர்வகித்து வருகின்றது.

தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, கோவிட்-19 தொற்றுநோயை தடுப்பதற்கான ஒரு தேசிய செயற்பாட்டு மையம் நிறுவப்பட்டது. 'பாதுகாப்பாக இருங்கள்' என்ற டிஜிட்டல் தளமானது, தொடர்புத் தடமறிதலுக்கான பொது ஈடுபாட்டை எளிதாக்குகின்றது. கோவிட்-19 தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி இந்த நடவடிக்கைகளை திறம்பட ஒருங்கிணைக்கின்றது. இலங்கை தனது மக்களுக்கு வழங்குகின்ற இலவசமான சர்வதேச சுகாதார பராமரிப்பு வசதியும் வைரஸின் பரவலைக் குறைத்துள்ளது.

2021ஆம் ஆண்டில் நாட்டிலிருந்து கோவிட்-19 ஐ அகற்றுவதில் இலங்கை கவனம் செலுத்துகின்றது. அன்றாட வாழ்க்கையில் இயல்பான தன்மையைப் பேணும் வகையில், தொற்றுநோய்க்கு பிரதிபலிப்பதற்காக அரசாங்கம் தற்போது பயன்படுத்தியுள்ள பொறிமுறை மற்றும் மூலோபாயத் திட்டமானது, முதலாவதாக தேசிய அளவிலான ஒருங்கிணைப்பு, திட்டமிடல் மற்றும் மீளாய்வு; இரண்டாவதாக தணிப்பு செயற்பாட்டில் சமூகத்தின் ஆபத்து மற்றும் செயலில் பங்கேற்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்; மூன்றாவதாக மேற்பார்வை, விரைவான பிரதிபலிப்பு, மற்றும் கண்டறிதல்; நான்காவதாக துறைமுகங்களிலான உள்நுழைவு மற்றும் உள்நாட்டுப் போக்குவரத்துப் பாதைகளை உடனடியாக கண்காணித்தல்; ஐந்தாவதாக ஆய்வக அமைப்பை பலப்படுத்துதல்; ஆறாவதாக வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுத்தல்; ஏழாவதாக நோயாளிகளை போதுமான வகையில் கையாளுதல்; எட்டாவதாக அனைத்து சுகாதார சேவைகளுக்கும் வசதிகளை விரைவுபடுத்துதல்; ஒன்பதாவதாக அத்தியாவசிய சுகாதார சேவைகளைத் தொடருதல் மற்றும் பத்தாவதாக சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் தொடர்ச்சியை உறுதி செய்தல் ஆகிய 10 தூண்களைக் கொண்டுள்ளது.

தொற்றுநோயால் ஏற்படும் சமூகப் பொருளாதாரத் தாக்கத்தை நிவர்த்தி செய்வதில், ஆறு மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு அரசாங்கம் நிதி நிவாரணம் மற்றும் உலர் உணவுப் பொருட்களை வழங்கி, கோவிட்-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியமொன்றை நிறுவி, உள்ளூர் வணிகங்களுக்கு நிதி வசதிகளையும் வழங்கியுள்ளது.

வெற்றிகரமான தடுப்பூசியேற்றுதல் திட்டங்களின் நீண்ட வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது. கோவிட்-19 தடுப்பூசியேற்றுதல் திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது, மக்களின் நம்பிக்கையைப் பேணுவதை அரசாங்கம் உறுதி செய்கின்றது. கோவிட்-19 தடுப்பூசிக்கான கோவெக்ஸ் வசதியில் இலங்கை ஏற்கனவே உள்ளடக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார தாபனத்தோடு தொடர்பு கொண்டு மிகவும் பாதுகாப்பான தடுப்பூசித் திட்டத்தை செயற்படுத்துவதற்காக, சுகாதார அமைச்சின் உயர் மட்ட நிபுணர்களைக் கொண்ட ஒரு ஒருங்கிணைப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார தாபனம், யுனிசெஃப், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியுடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, தடுப்பூசிக்கான குளிர் சங்கிலிகளைப் பராமரிப்பதற்கான உபகரணங்களை மேம்படுத்துவதற்கும், கொள்வனவு செய்வதற்கும் தேவையான நிதியை அரசாங்கத்தால் பெற்றுக்கொள்ள முடிந்தது.

இந்த வைரஸ் அனைத்து தேசிய எல்லைகளையும் மீறுவதால், ஐக்கிய நாடுகள் சபையின் வகிபாகம் இன்று முக்கியமானதாக உணரப்படுகின்றது. உலகளாவிய பொது நன்மை கருதி, கோவிட்-19 தடுப்பூசியை இலவசமாகவும் அனைவரும் அணுகக்கூடிய வகையிலும் மாற்றுவதற்காக ஐ.நா. பொதுச்செயலாளர் விடுத்துள்ளள அழைப்பை இலங்கை மீண்டும் வலியுறுத்துகின்றது. எந்தவொரு விதிவிலக்குமின்றி, அனைத்து வளங்களையும், கூட்டாளர்களையும் இந்த நோக்கத்திற்காக ஐக்கிய நாடுகள் சபை அணிதிரட்ட வேண்டும்.

உலக சுகாதார தாபனத்தால் மேற்கொள்ளப்பட்ட விரிவான பணிகளுக்கான தனது ஆதரவை இலங்கை மீண்டும் வலியுறுத்துகின்றது. பல நாடுகள் வைரஸின் அலைகளை மீண்டும் மீண்டும் எதிர்கொண்டு வருவதனால், கோவிட்-19 கருவிகளை விரைவுபடுத்துவதற்கான உலக சுகாதார தாபனத்தின் அணுகலுக்கு அனைத்து பங்குதாரர்களும் வசதியளித்தல் வேண்டும்.

நெருக்கடியான இந்த நேரத்தில், சர்வதேச நிதியுதவி மற்றும் கடனை மீளச் செலுத்துவதற்கான தடைக்காலம் ஆகியன அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு தேவை என இலங்கை குறிப்பிடுகின்றது. மத்திய வருமான நாடுகளுக்கு சிறப்பான கவனம் செலுத்தப்படல் வேண்டும் என மீண்டும் வலியுறுத்துவதுடன், ஜி 20 கடன் சேவை இடைநீக்க முயற்சிக்கான தகுதியை விரிவுபடுத்துவதற்கும், நடுத்தர வருமான நாடுகளை உள்ளடக்குவதற்குமான பொதுச்செயலாளரின் அழைப்பில் இலங்கையும் இணைந்து கொள்கின்றது.

இறுதியாக, நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான 2030 நிகழ்ச்சி நிரலுடன் இணைந்த ஒருங்கிணைந்த மற்றும் கூட்டு நடவடிக்கைகளின் மூலம் தொற்றுநோய்க்குப் பிந்தைய காலத்தில், அழகாகவும் பசுமையாகவும் இருக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் மிகவும் நெகிழக்கூடிய பிந்தைய கோவிட் உலகத்தை உருவாக்க முடியும் என நம்பிக்கை கொள்வோம்.

ஆயுபோவன்! நன்றி.

 

The full video can be viewed at   :  https://youtu.be/AhMsGSJyYTk

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close