கனேடியப் பிரதமரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை இலங்கை முற்றாக நிராகரிப்பு

கனேடியப் பிரதமரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை இலங்கை முற்றாக நிராகரிப்பு

கடந்த 2023 மே 18ஆந் திகதி கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் வெளியிடப்பட்ட இலங்கையில் கடந்த கால மோதல்கள் தொடர்பான மூர்க்கத்தனமான இனப்படுகொலைக் கூற்றுக்கள் அடங்கிய அறிக்கையை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தடையின்றி நிராகரிக்கின்றது. ஒரு தேசத்தின் தலைவரின் இத்தகைய பொறுப்பற்ற மற்றும் துருவமுனைப்பு ரீதியான அறிவிப்புக்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை  மேம்படுத்துவதற்குப் பதிலாக கனடாவிலும் இலங்கையிலும் அமைதியின்மையையும் வெறுப்பையும் வளர்க்கின்றது.

வெறுப்பு சார்ந்த தவறான தகவல் மற்றும் தீவிரவாதக் கருத்துக்களை ஊக்குவிக்கும் உலகளாவிய தளமாக கனடாவை மாற்றுவதைத் தவிர்க்குமாறும், திரிபுபடுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் இலங்கை மீதான பயனற்ற கவனத்தை நிறுத்துமாறும் இலங்கை கனடாவையும்  அதன் தலைவர்களையும் கேட்டுக்கொள்கின்றது. இது 'உலகம் முழுவதும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல்' என்ற கனேடியப் பிரதமரின் குறிக்கோளுக்கு முற்றிலும் முரணானதாகும்.

தவறான தகவல்களையும் வெறுப்புணர்வையும் பரப்பி, தவறான கதையை கனடாவில் அங்கீகரிக்கும் அரசியல் உந்துதலுள்ள இலங்கை எதிர்ப்பு சக்திகளால் வேண்டுமென்றே கட்டமைக்கப்பட்ட 'இனப்படுகொலை' குறித்த இந்த ஆதாரமற்ற கதையை இலங்கை கடுமையாக நிராகரிக்கின்றது. சமூக ஊடகத் தளங்கள் உட்பட தவறான தகவல்களின் ஆபத்துக்களை உலகம் எதிர்த்துப் போராடும் இத்தகையதொரு நேரத்தில்  எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை மக்கள் உலகின் மிக இரக்கமற்ற பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான விடுதலைப் புலிகளால்  நடாத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து சமூகங்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களின் வாழ்க்கையையும் ஜனநாயக உரிமைகளையும் நசுக்கியது. விடுதலைப் புலிகளின் அட்டூழியங்களில் இலங்கை மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் மிதவாத தமிழ்த் தலைவர்களின் படுகொலைகளும் அடங்கும். இந்த பயங்கரவாத அமைப்பின் தோல்வி இலங்கைக்கு பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் கொண்டு வந்தது. கனடா உட்பட பல ஜனநாயக நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் பல இலங்கைப் படையினர் கொல்லப்பட்டு ஊனமுற்றனர்.

எமது நாடுகளுக்கிடையில் வளமான மற்றும் பரஸ்பரம் வலுவூட்டும் உறவைப் பேணுகின்ற இலங்கைப் பாரம்பரியத்தையுடைய கனேடியர்களின் குறிப்பிடத்தக்க சமூகத்தால் இலங்கையும் கனடாவும் இணைக்கப்பட்டுள்ளன. மக்களிடையே நட்பு மற்றும் நல்லிணக்கத்தின் பிணைப்புக்களை உருவாக்குவதற்கும், கனடா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சமூகங்களை துருவப்படுத்துவதைத் தவிர்ப்பதற்கும் இந்த தளத்தைப்  பயன்படுத்துமாறு கனேடிய அரசாங்கத்தையும் அதன் தலைவர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போது நாடு எதிர்கொள்ளும் சமூகப் பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், ஸ்திரத்தன்மை, மீட்சி மற்றும் அனைத்து சமூகங்கள்  மற்றும் அனைத்து பிரிவு மக்களுக்கும் நல்லிணக்கத்தை மேம்படுத்தனை இலங்கை எச்சரிக்கையுடன் தொடங்கியுள்ளது. இந்த முயற்சியில் சர்வதேச சமூகத்திடம் இருந்து எங்களுக்கு கிடைத்த ஆதரவை நாங்கள் மிகவும் பாராட்டுகின்றோம்.

இலங்கை மற்றும் கனடா ஆகிய இரண்டும் பொதுவான ஜனநாயக விழுமியங்கள், நிறுவனங்கள் மற்றும் மரபுகள் மற்றும் சக குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு சமாதானம் மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளன. நீண்டகால இருதரப்பு  மற்றும் அபிவிருத்திப் பங்காளியான கனடாவுடன் இந்த பரஸ்பர மரியாதையுடன் ஈடுபட விரும்புவதுடன், கனடாவின் அறிவிப்புக்கள் எமது மக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் செழிப்பை உறுதிப்படுத்தும் இலங்கையின் தேசிய நலனுக்குப் பாதகமானதாக இல்லை என்பதை உறுதிப்படுத்துமாறு கனடாவுக்கு அழைப்பு விடுக்கின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு, இலங்கை

2023 மே 19

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close