ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவிற்கு (யுனெஸ்கெப்) இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் சி. ஏ. சமிந்த ஐ. கொலொன்ன தனது நற்சான்றிதழ் கடிதங்களைக் கையளிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவிற்கு (யுனெஸ்கெப்) இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் சி. ஏ. சமிந்த ஐ. கொலொன்ன தனது நற்சான்றிதழ் கடிதங்களைக் கையளிப்பு

2021 ஏப்ரல் 20ஆந் திகதி நடைபெற்ற மெய்நிகர் சந்திப்பைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவிற்கான (யுனெஸ்கெப்) இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியான தாய்லாந்திற்கான இலங்கைத் தூதுவர் சி. ஏ. சமிந்த ஐ. கொலொன்ன, யுனெஸ்கெப்பின் நிறைவேற்றுச் செயலாளர் அர்மிடா சல்சியா அலிஸ்ஜாபனாவிடம் பேங்கொக்கில் உள்ள யுனெஸ்கெப் செயலகத்தில் வைத்து 2021 நவம்பர் 26ஆந் திகதி தனது நற்சான்றிதழ் கடிதங்களைக் கையளித்தார்.

தூதுவர் சமிந்த கொலொன்னவை வாழ்த்தி யுனெஸ்கெப் செயலகத்திற்கு அன்புடன் வரவேற்ற நிறைவேற்றுச் செயலாளர் அர்மிடா சல்சியா அலிஸ்ஜாபானா, 2030 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி மற்றும் அது தொடர்பான செயற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சிகளை இலங்கையில் நிறைவேற்றுவதற்கான முழுமையான ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கத்திற்கும், பேங்கொக்கில் உள்ள இலங்கையின் நிரந்தரத் தூதரகத்திற்கும் வழங்குவதாக உறுதியளித்தார்.

இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி, மாண்புமிகு பிரதமர் மற்றும் கௌரவ வெளிநாட்டு அமைச்சர் ஆகியோரின் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர் சமிந்த கொலொன்ன, பொதுவான நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதில் யுனெஸ்கெப்புக்கான இலங்கையின் தொடர்ச்சியான முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் தெரிவித்தார்.

2021 நவம்பர் 15 - 16 வரை இலங்கையில் நிலையான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான ஐந்தாவது தெற்காசிய மாநாட்டை நடாத்தியமைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு நிறைவேற்றுச் செயலாளர் அர்மிடா சல்சியா அலிஸ்ஜாபானா பாராட்டுக்களைத் தெரிவித்தார். எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோருடன் அண்மையில் ஈடுபட்ட மெய்நிகர் சந்திப்புக்களை நினைவு கூர்ந்த நிறைவேற்றுச் செயலாளர் அர்மிடா சல்சியா அலிஸ்ஜாபனா, நிலையான அபிவிருத்தி இலக்கின் வரைபடத்திற்கு இணங்க குறைந்த அளவிலான மற்றும் தூய்மையான ஆற்றல் கொண்ட நிலையான அபிவிருத்தி இலக்கு 7 ஐ அடைந்து கொள்வதற்காக தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதில் யுனெஸ்கெப்பின் ஆர்வத்தை எடுத்துரைத்தார்.

தரவு மற்றும் புள்ளிவிபரங்கள், இயற்கை விவசாயம், பொது தனியார் கூட்டு மற்றும் அபிவிருத்திக்கான நிதியுதவி மற்றும் இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்தியில் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குதல் ஆகிய துறைகளில் எதிர்கால ஒத்துழைப்பு குறித்து இருவரும் கலந்துரையாடினர்.

இரசாயனத்திலிருந்து இயற்கை உரத்திற்கு மாறுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுத்துள்ள தீவிர ஆர்வம் மற்றும் முயற்சிகள் குறித்து விளக்கிய தூதுவர் சமிந்த கொலொன்ன, இலங்கையில் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்வதற்கான யுனெஸ்கெப்பின் தொழில்நுட்ப உதவி, ஆராய்ச்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைக் கோரினார்.

ஆணைக்குழுவின் செயலாளர் லோரென்சோ சான்டூசி, உத்தி மற்றும் திட்ட முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் யுனெஸ்கெப்பின் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவிற்கான துணைப் பிராந்திய அலுவலகத்தின் பொறுப்பாளர், அட்னான் அலியானி, முதல் செயலாளர் மற்றும் பேங்கொக்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பிரதி நிரந்தரப் பிரதிநிதி சரிதா ரணதுங்க ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் இணைந்திருந்தனர்.

 

யுனெஸ்கெப்பிற்கான இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,

பேங்கொக்

2021 நவம்பர் 30

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close