இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் கௌரவ. தினேஷ் குணவர்தனவின் அறிக்கை சர்வதேச மாநாடு - 'மத்திய மற்றும் தெற்கு ஆசியா: பிராந்திய இணைப்பு - சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள்'  தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தான் குடியரசு, 15 - 16 ஜூலை, 2021

 இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் கௌரவ. தினேஷ் குணவர்தனவின் அறிக்கை சர்வதேச மாநாடு – ‘மத்திய மற்றும் தெற்கு ஆசியா: பிராந்திய இணைப்பு – சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள்’  தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தான் குடியரசு, 15 – 16 ஜூலை, 2021

உஸ்பெகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் மாண்புமிகு அப்துல்அஸிஸ் கமிலோவ்,

மேன்மை தங்கியவர்களே,

கனவான்களே மற்றும் கனவாட்டிகளே,

இன்று உலகின் இரண்டு முக்கியமான மற்றும் ஆற்றல்மிக்க பிராந்தியங்களாகத் திகழும் மத்திய மற்றும் தெற்கு  ஆசியா ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பு தொடர்பான மிகவும் பொருத்தமான தலைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த உயர்மட்ட மன்றத்தில் பங்கேற்பதையிட்டு நான் பெருமிதமடைகின்றேன். கோவிட்-19 தொற்றுநோயால் உலகளவில் முன்வைக்கப்பட்ட சவால்களுக்கு மத்தியிலும், பல்வேறு நாடுகளின் கருத்துக்களை ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் சரியான நேரத்தில் இந்த மன்றத்தை ஏற்பாடு செய்தமைக்காக உஸ்பெகிஸ்தான் குடியரசின் தலைவரான அதிமேதகு ஷவ்கட் மிர்சியோயேவை நான் பாராட்ட விரும்புகின்றேன். உஸ்பெகிஸ்தானும் ஏனைய மத்திய ஆசிய நாடுகளும் இந்த ஆண்டு சுதந்திர நாடுகளாக தமது மூன்றாவது தசாப்தத்தைக் குறிப்பதால், இணைப்பு பற்றி கலந்துரையாடுவதற்கு இது ஒரு சரியான தருணமாகும்.

இலங்கை, உஸ்பெகிஸ்தான் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியா ஆகியன நீண்டகால வரலாற்று மற்றும்  கலாச்சாரத் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. கணிதம், வானியல், மருத்துவம், தத்துவம், மதம் மற்றும் கலைகளில் சாதனைகள் மூலம் நவீன உலகத்தை உருவாக்குவதற்காக மகத்தான பங்களிப்பை வழங்கிய பண்டைய நாகரிகங்களின் வாரிசுகள் நாமாவோம். நிலத்தினால் சூழப்பட்டிருந்த போதிலும், பண்டைய பட்டுப் பாதை உட்பட பல பகுதிகளை இணைக்கும் புராதன வர்த்தகப் பாதைகளின் குறுக்கு வழியில் மத்திய ஆசியா இருந்தது. அழகிய தீவான இலங்கை, இந்து சமுத்திரத்தின் மத்தியில் தனது மூலோபாய இருப்பிடத்துடன், பண்டைய கடல்சார் பட்டுப் பாதை உட்பட கிழக்கு - மேற்கு வர்த்தகப் பாதைகளின் குறுக்கு வழியில் காணப்பட்டது.

இன்று, இந்து சமுத்திரத்தில் எமது அமைவிடமானது ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன்  தெற்காசியாவை இணைப்பதில் இன்னும் குறிப்பிடத்தக்கதாகிவிட்டது. வலுவான, நடுநிலையான மற்றும் அணிசாராத வெளியுறவுக் கொள்கையால் பூர்த்தி செய்யப்பட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய இணைப்பின் மூலம் நிலையான அபிவிருத்தியை அடைவதிலான இலங்கையின் நோக்கம், அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தேசிய அபிவிருத்திக் கொள்கைக் கட்டமைப்பான 'நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை' இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருகிவரும் உலகமயமாக்கப்பட்ட மற்றும் ஒன்றுக்கொன்று சார்ந்த உலகில் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு இணைப்பு இன்று இன்றியமையாததாகிவிட்டது. இன்று, உலகப் பொருளாதாரத்தின் ஈர்ப்பு மையம் ஆசியாவை  நோக்கிச் சென்றுள்ளது. தெற்காசியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பிராந்தியங்களில் ஒன்றாக மாறியுள்ளது. நவீன காலங்களில் முதன்முறையாக, ஆசியப் பொருளாதாரங்கள் உலகின் ஏனைய பகுதிகளை விட பெரிதாகி வருகின்றன. அதே நேரத்தில், வளம் மற்றும் ஆற்றல் நிறைந்த மத்திய ஆசியாவின் பொருளாதாரத் திறன் அதிவேகமாக அதிகரித்து வருகின்றது. இந்த சூழலில், தெற்கு மற்றும் மத்திய ஆசியா மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையிலான கடல் மற்றும் நில இணைப்பு உலகளாவிய வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கு இன்றியமையாததாகி வருகின்றது.

உஸ்பெகிஸ்தானின் தலைநகரான தாஷ்கண்ட் நீண்ட காலமாக இலங்கையின் கொழும்புடன் விமானப் பயண  இணைப்பை அனுபவித்து வருகின்றது. இருப்பினும், பரந்தளவிலான ஆற்றல் இருந்தபோதிலும், இரு பிராந்தியங்களுக்குமிடையேயான இணைப்பு இன்று ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்தில் உள்ளது. எனவே தற்போதுள்ள ஈடுபாடுகளை வலுப்படுத்தி, எல்லை தாண்டிய சவால்களை சமாளிப்பதறடகாக தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப வலுவான வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உறவுகளை உருவாக்குவது அவசியமாகும்.

பிராந்திய இணைப்பை வலுப்படுத்தும் வகையில், சர்வதேச வர்த்தகம், வெளிநாட்டு வங்கி மற்றும் நிதிச் சேவைகள், கப்பல் மற்றும் கப்பல் போக்குவரத்துப் பரிமாற்ற நடவடிக்கைகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக வெளிச் சேவைபெறல் செயன்முறை மற்றும் ஏனைய துணைச் சேவைகளில் போட்டிகரமான முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் இலங்கையில் உள்ள கொழும்புத் துறைமுக நகரம் விஷேட பொருளாதார வலயத்திற்கானதொரு எடுத்துக்காட்டாகும்.

நிறைவு செய்வற்கு முன்னர், இந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்  46வது அமர்வில் இலங்கைக்கு ஆதரவளித்த கொள்கை ரீதியான நிலைப்பாட்டிற்காக உஸ்பெகிஸ்தான் அரசாங்கத்திற்கு எமது ஆழ்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக கொள்ள விரும்புகின்றேன்.

ஆக்கபூர்வமான ஈடுபாட்டிற்காக மேன்மை தங்கிய தங்களுக்கும், மதிப்புமிக்க தலையீடுகளுக்காக  பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றைய கலந்துரையாடல்களிலிருந்து ஆக்கபூர்வமான விளைவுகளை எதிர்பார்க்கின்றேன்.

நன்றி.

......................................................

The full video can be viewed at: https://youtu.be/9sXNmn92Ol4

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close